உடனடிச்செய்திகள்

Thursday, July 4, 2013

சாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கண்டனம்
சாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கண்டனம்


வன்னிய சமூகப் பெண் திவ்யாவை மணந்த தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞன் இளவரசன் திவ்யா தன்னோடு சேர்ந்து வாழ முடியாது என நீதிமன்றத்தில் அறிவித்து செய்தியாளர்களிடமும் தெரிவித்து விட்டதால் மனமுடைந்து போய் தொடர்வண்டி முன் பாய்ந்து 4.7.2013 மாலை தர்மபுரியில் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வாழ வேண்டிய ஒரு இளைஞன் சாதி ஆதிக்க வெறி அரசியலால் உயிர்பலி ஆகியுள்ளார்.

மரணமடைந்த இளவரசன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இளவரசனின் மரணத்திற்குக் காரணமான சாதி வெறி அரசியலையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இளவரசனின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற ஐயமும் எழுப்பப்படுகிறது. அவ்வாறு இருந்தால் உடனடியாக கொலைகாரர்களையும் அவர்களுக்கு பின்னணியாக இருப்பவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சாதி மறுப்புத் திருமணங்கள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட சாதி ஆணுக்கும் திருமணம் நடப்பது புதிதல்ல. பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருவதுதான். அந்த வகையில் வன்னிய சாதியில் பிறந்த திவ்யாவும், பறையர் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ்நாட்டில் நடந்திறாத அதிசயமும் அல்ல.

ஆனால் மருத்துவர் இராமதாசு தலைமையில் இயங்கும் வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும், தங்களது சொந்த பதவி அரசியலுக்காக இதனை சாதி வெறி அரசியலாக பெரிதுபடுத்தி எதிர்த்தனர். மருத்துவர் இராமதாசு இந்த வகை காதலை நாடகக் காதல் என்று திரித்துப் பரப்புரை செய்தார்.

இத்திருமணத்தை சாட்டாக வைத்து தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய், நத்தம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் திட்டமிட்ட முறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு எதிரான கொடிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்தக் கலவர அரசியலை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தும் முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டது.

இந்நிலையில் ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், திவ்யா முதல் நாள் தான் இளவரசனை நேசிப்பதாகவும் அதே நேரத்தில் தனது தந்தையின் சாவும், தனது தாய் மற்றும் சகோதரனின் நிலையும் பெரிய மனக் குழப்பதை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால் தான் தன் தாயாருடன் செல்வதாகவும், தாயார் ஏற்றுக்கொண்ட பிறகு இளவரசனுடன் இணைந்து வாழ விரும்பதாகவும் நீதிபதியிடம் கூறியதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அடுத்த நாள் (3.7.2013) அன்று நீதிமன்றம் வந்த திவ்யா முதல் நாள் தாம் அவ்வாறு கூறவில்லை என்றும், இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையென்றும் தனது தந்தையார் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தில் அந்த இடத்தில் நிரப்பும் முயற்சியில் ஈடுபட போவதாகவும் கூறினார்.

வெளி அழுத்தம் காரணமாக திவ்யாவிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றம் இளவரசனை பாதித்திருக்கக் கூடும். அதன் காரணமாகவே இந்த கொடிய முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும். (இளவரசனின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புண்டு என்ற கருத்தில் இதனை கூறுகிறேன்)

சாதி ஆதிக்க வெறி அரசியல் கடைசியில் ஒரு எளிய இளைஞனை பலி வாங்கி விட்டது.

இந்த மரணத்திற்குப் பிறகாவது பாட்டாளி மக்கள் கட்சி தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் திட்டமிட்டு நாடகக் காதலில் ஈடுபடுவதாக செய்த பரப்புரை உண்மை நிலைக்கு மாறானது என்பதை உணர வேண்டும். ஏனெனில் இளவரசனின் காதல் நாடகமென்றால் அவனுக்கு இந்த முடிவு நேர்ந்திருக்காது.

இன்னொன்று, இந்தச் சிக்கலில் இந்த காதல் திருமணத்தை ஆதரித்தும் சாதி ஆதிக்க அரசியலை எதிர்த்தும் பரப்புரையிலும் போராட்டங்களிலும் ஈடுபட்ட சனநாயக அமைப்புகள் அனைத்தும் இளவரசன் -திவ்யா இணையரை பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு உறுதியான ஏற்பாடுகள் எதையும் செய்ய தவறிவிட்டோம் என்பதை தன்னாய்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும். “வீடு இடிக்கப்பட்டு தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி ஊர்ஊராக அலைந்தோம்” என இளவரசன் கூறியிருந்தது நிலைமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

இனி எதிர்காலங்களில் இவ்வாறான தவறு ஏற்பட்டுவிடக் கூடாதென சாதி ஆதிக்கத்திற்கெதிரான சனநாயக இயக்கங்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாதி வெறி அரசியலுக்கு பலியான இளைஞன் இளவரசன் குடும்பத்திற்கு மீண்டும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிபோராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT