உடனடிச்செய்திகள்

Saturday, July 27, 2013

முல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும் - தோழர் பெ.மணியரசன் விளக்க அறிக்கை!


முல்லைப் பெரியாறு அணை:
உச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் 
பெ.மணியரசன் விளக்க அறிக்கை!

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசு வழக்கறிஞர்களைப் பார்த்து எழுப்பிய வினாக்கள் தமிழர்களிடையே அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. வழக்கு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பதற்றம் தமிழின உணர்வாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நீதிபதி ஆர். எம். லோதா, நீதிபதி எச். எல். தத்து, நீதிபதி சி.கே. பிரசாத், நீதிபதி மதன் பி.லோகுர், நீதிபதி எம்.ஒய். இக்பால் ஆகிய ஐவர் அடங்கிய அரசமைப்பு அமர்வு முல்லைப் பெரியாறு அணை வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த  23.7.2013 லிருந்து தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் வினோத் பாப்டே தமது வாதத்தைத் தொடங்கி 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் பேசினார்.

அரசமைப்பு அமர்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி லோதா குறுக்கிட்டுக் குறுக்கிட்டு விளக்கம் கேட்டார். நீதிபதி லோதா கிளப்பிய ஐயங்களும் எழுப்பிய வினாக்களும் தாம் தமிழ் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1886 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் தமிழ்நாட்டு மக்களுக்காக அன்றையப் பிரித்தானிய இந்திய அரசு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை உரிமை கோருவதற்கு இன்றையத் தமிழக அரசுக்கு வாரிசுரிமைப் பாத்தியதை உண்டா? அதை நிரூபியுங்கள்! இதுதான் நீதிபதி லோதா எழுப்பும் மையமான வினா.
தமிழ்நாட்டு அரசு அல்லது சென்னை மாகாணம் சார்பில் அன்று ஒப்பந்ததில் யாரும் கையெழுத்திடவில்லை. அன்றைய இந்தியஅரசின் ஆளுநர் நாயகம் (கவர்னர் ஜெனரல்) சார்பில் இந்திய அரசின் செயலாளர் கையொப்ப மிட்டுள்ளார். அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசு திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்குட் பட்டுள்ள பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி, அத்தண் ணீரை சென்னை மாகாண மாவட்டங்களுக்குப் பாசனத்திற்கு கொண்டு செல்ல திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஒப்புதல் தெரிவிக்கும் ஒப்பந்தம் ஆகும்.
அந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி எட்டாயிரம் சதுரமைல் என்றும் அதற்குத் சென்னை மாகாண அரசு தர வேண்டிய ஆண்டுக்குத்தகைத் தொகை இவ்வளவு என்றும் அவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அணைப்பராமரிப்பு நீர்ப்பிடிப்புப் பகுதிப் பராமரிப்பு மற்றும் அனுபோகம் சென்னை மாகாணத்திற்குரியது என்றும் அவ்வொப் பந்தம் கூறுகிறது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 127 ஆண்டுகளாக அந்நிலப்பரப்பும் அணையும் அணை நீரும் முதலில் சென்னை மாகாண அரசின் அனுபோகத் திலும் பின்னர் தமிழக அரசின் அனுபோகத்திலும் உள்ளன.
இந்திய அரசுச் செயலாளர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் குத்தகை வாரிசுதாரர் தமிழ்நாடு அரசுதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம், இப்பொழுது கேட்கிறது.
இந்திய அரசு தனது மாகாணங்களில் ஒன்றுக்காக பிற அரசுகளுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் அக்குறிப்பிட்ட மாகாண அரசுக்குச் சட்டப்படியான உரிமை உண்டு. பிரித்தானிய இந்திய அரசு 1858 ஆம் ஆண்டு பிறப்பித்த சட்டப்படிதான் 1886 முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், அதன் பிறகு 1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய அரசுச் சட்டமும் இதை உறுதிசெய்கிறது என்றும் தமிழக அரசுக்கான வழக்கறிஞர் பாப்டே எடுத்துரைத்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக 1935 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா இயற்றிய இந்தியச் சட்டத்தின் 177 வது பத்தியை வழக்கறிஞர் பாப்டே எடுத்துரைத்தார். அச்சட்டப் பிரிவின் சுருக்கம் வருமாறு:
“177(1) (a): இச்சட்டத்தின் பகுதி III செயலுக்கு வருவதற்கு முன்னால், இந்திய அரசுச் செயலாளர் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தம்- பகுதி III இல் சொல்லப் பட்டுள்ள மாகாணங்களில் ஒன்றிற்குரியதாக இருந்தால் அவ்வொப்பந்தம் அந்த மாகாணம் செய்து கொண்டதற்குரிய அதிகாரத்தைப் பெறும்.”
இந்திய அரசுச் செயலாளர் சென்னை மாகாண அரசுக்காக 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போட்ட முல்லைப்பெரியாறு ஒப்பந்தம், 1935க்குப் பிறகு 1950 வரை, சென்னை மாகாண அரசு இந்திய அரசின் சட்டப்பூர்வ வாரிசு தாரர் என்று கூறுகிறது. அதன் பிறகு விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1950 சனவரி 26 இல் செயலுக்கு வந்த “இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட” விதி 363 பின் வருமாறு கூறுகிறது.
“363- (1) இக்குடியரசுச் சட்டம் செயலுக்கு வருவதற்கு முன் எந்த ஓர் இந்திய ஆட்சியாளரோ அல்லது இந்திய அரசாங்கமோ ஒரு தரப்பாக இருந்து போடப்பட்ட ஒப்பந்தம், உடன் படிக்கை, ஏற்பாடுகள், சன்னத்துகள் முதலியவற்றை செல்லாது என்று அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை”
1935 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டமும் 1950 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டமும், அவை செயலுக்கு வருவதற்கு முன் இந்திய அரசாங்கம் ஒரு தரப்பாக இருந்து செய்து கொண்ட ஒப்பந்தம் அவை செயலுக்கு வந்த பின்னரும் தொடரும். இவ்வொப்பந்தங்களின் செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று கூறுகிறது.
இப்பொழுது செயல்பாட்டில் உள்ள இந்தியக் குடியரசுச் சட்ட விதி 131- இன்னும் தெளிவாக, இந்திய அரசு செய்த பழைய ஒப்பந்தங்கள் மீது, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பக்கூடாது என்று தடை செய்கிறது.
விதி 131-இல் 1956-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய திருத்தம் பின் வருமாறு கூறுகிறது.
“இச்சட்டம் செயலுக்கு வருவதற்கு முன் இந்திய அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தம், உடன்படிக்கை, ஏற்பாடுகள், சன்னத் முதலியவை தொடர்ந்து செயலில் இருக்குமானால் அவற்றின் செல்லுபடித் தன்மை பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை”.
1970 இல் முல்லைப் பெரியாற்று அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கேரள அரசுக்கு மீன்பிடி உரிமை, சுற்றுலா படகு போக்குவரத்து நடத்திக்கொள்ள உரிமை ஆகியவற்றை வழங்கி, முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தை மறு உறுதி செய்து ஒரு ஒப்பந்தம் கேரளமாநில அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்படாது இதன் மூலம் 1886 ஒப்பந்தம் கேரள அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அது தொடர்ந்து செயலில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வளவு தெளிவாக 1935, 1950 ஆம் ஆண்டுகளின் இந்திய அரசமைப்புச் சட்டங்கள் பழைய ஒப்பந்தங்கள் பற்றி வரையறுத்திருக்கும் போது, 1970 ஒப்பந்தமானது முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் 1886- ஆம் ஆண்டின் தொடர்ந்து செயலில் இருப்பதை உறுதி செய்திருக்கும் போது ஐவர் குழுவின் அமர்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி லோதா – முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் செல்லுபடித் தன்மையையும் – அதன் வாரிசுரிமை பற்றியும் கேள்வி எழுப்புவது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது.
பழைய சென்னை மாகாணத்தின் இன்றைய வாரிசு தமிழ்நாடு தானா என்ற கேள்வியை நீதிபதி லோதா மூன்று நாளும் எழுப்பியுள்ளார்.
1886 ஒப்பந்தத்தின் படியான இந்திய அரசின் வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்பதற்கு மேலும்  உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மாநிலங்கள் மறு சீரமைப்புச் சட்டம் 1956-இன் பிரிவு 108 பின்வருமாறு கூறுகிறது.
மாநில மறுசீரமைப்புக்கு முன் மாநிலம் அல்லது மாநிலங்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட பாசனம், மின்சாரம் மற்றும் பல்நோக்குத் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், ஏற்பாடுகள் சன்னத்துகள் உள்ளிட்ட அனைத்தும் மாநிலங்கள் மறு சீரமைக்கப்பட்டபின் நிலவுகின்ற மாநிலங்களிலும் தொடரும்; செயல்படும். அவ்வொப்பந்தங்கள் படியான நிர்வாகம், பராமரிப்பு, மற்றும் செயல்பாடுகள் ஆகியவையும் அப்படியே தொடரும்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மறுசீரமைப்பிற்குப் பின் நிலவுகின்ற திருவி தாங்கூர் மாநிலம் எது? இதற்கான விடை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது.
நிலவுகின்ற மாநிலம் (Existing state) என்பது அரசமைப்புச் சட்ட அட்டவணை 1-இல் உள்ள மாநிலம் ஆகும் என்கிறது மாநில மறுசீரமைப்புச் சட்டவிதி 108. அட்டவணை I கேரளம் குறித்து என்ன சொல்கிறது?
மாநில மறுசீரமைப்புச் சட்ட விதி 5(1) மற்றும் (2)- இன்படி உருவாக்கப்பட்ட கேரளம் நிலவுகின்ற மாநிலம் என்கிறது. அந்த 5(1), (2) விதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியை இணைத்துக் கொண்ட கேரளமே நிலவுகின்ற மாநிலம் என்று கூறுகிறது. அதாவது,
முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தைப் பொறுத்தளவில் இன்றைய கேரள மாநில அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தொடர்ச்சி ஆகும். ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டவை போக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணமே – நிலவுகின்ற தமிழ்நாடு மாநிலம் ஆகும். நிலவுகின்ற தமிழ்நாடு மாநிலமே முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய அரசின் சட்டப்படியான வாரிசு ஆகும்.
இவை அனைத்தையும் 2006 – பிப்ரவரி 27ஆம் நாள் முல்லைப் பெரியாறு வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி ஒய்.கே.சபர்வால் அளித்த தீர்ப்பில் தெளிவுபட உறுதி செய்துள்ளார். மற்ற நீதிபதி களான சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் ஏற்றுக் கொண்ட ஒருமித்த தீர்ப்பாகும் இது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புத் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று 2006 – மார்ச்சில் சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றியது கேரளம். இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேரளம் ஏற்கும்படி ஆணையிட வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதே மாதம் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மீண்டும் மீண்டும் கேரள அரசின் வல்லடி வாதத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழக அரசிடம் கேள்வி கேட்கிறது.
1886-இல் இந்திய அரசு, தமிழக மாவட்டங்களான மதுரை (திண்டுக்கல், தேனி உட்பட), இராமநாதபுரம் (சிவகங்கை உட்பட) மாவட்டங்களின் பாசனத்திற் காகத்தான் திரு விதாங்கூர் சமஸ்தானத்துடன் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் போட்டது. நாளது தேதிவரை முல்லைப் பெரியாறு நீரை மேற்படி மாவட்டங்கள் தாம் பயன்படுத்தி வருகின்றன. நாளது தேதிவரை முல்லைப் பெரியாறு நீர்படிப்புப் பகுதிக்கான குத்தகைத் தொகையைத் தமிழ்நாடு அரசுதான் கேரள அரசுக்குச் செலுத்தி வருகிறது. 1886-இல் இந்திய அரசு போட்ட ஒப்பந்தத்தின் வாரிசுரிமை அனுபோக உரிமையாகவும் தமிழகத்தின் வசமே உள்ளது. இதில் தமிழக அரசு அன்றைய இந்திய அரசுக்கு வாரிசா என்ற கேள்வி எங்கிருந்து எழுகிறது?
அன்றைய இந்திய அரசின் சட்டப்படியான வாரிசு தமிழக அரசு தான் என்பது சட்டப் புத்தகங்கள் வழியாகவும் நிலைநாட்டப்பட்டுள்ளது. நடப்பு உண்மையா கவும் அது விளங்குகிறது.
உயிரோடு தன் முன்னே நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்து, நீ உயிருள்ள மனிதன் என்று நிரூபிக்க வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் சட்டப்படியான வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்று நிரூபிக்குமாறு கேட்பது? பொது அறிவு கண்டறியும் உண்மைகளைக் கூட, நிரூபிக்க “அறிவியல் ஆய்வு” தேவை போலும்! சட்ட அறிவியல் படியும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம்.
ஒரு வேளை, அன்றைய இந்திய அரசின் இன்றைய வாரிசு தமிழ்நாடு அல்ல என்று தீர்ப்பு வந்தால் எப்படி இருக்கும்? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை; இந்தியச் சட்டங்கள் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாக ஆகும்.
இன்னொன்று, இச்சிக்கலில் இந்திய (ஒன்றிய) அரசு தொடர்பில்லாததுபோல், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மூன்றாம் தரப்பு போல் சட்டப்படி ஒதுங்கி இருக்க முடியாது. பஞ்சாயத்துப் பேசவும் முடியாது. அன்றைய சென்னை மாகாணத்தின் சார்பில்தான் அன்றைய பிரித்தானிய இந்திய அரசு முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கண்டது. அன்றைய சென்னை மாகாண அரசின் தொடர்ச்சி இன்றைய தமிழ்நாடு அரசு அன்றைய பிரித்தானிய இந்திய அரசின் இன்றைய தொடர்ச்சி சுதந்திர இந்தியாவின் நடுவண் அரசு. எனவே தில்லி அரசு தமிழகத்தின் சார்பில் நின்று உச்ச நீதிமன்றத்தில் இச்சிக்கலில் வழக்காட வேண்டும். இந்த அமர்வு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் தானே தமிழகம் சார்பில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாதத்திற்காக அன்றைய இந்திய அரசின் வாரிசாக இன்றைய தமிழக அரசு இல்லை என்று ஏற்றுக்கொண்டால், அப்போதும் கூட முல்லைப் பெரியாறு சிக்கலில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டை தள்ளிவிட முடியாது. தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையைப் புறக்கணித்து விட முடியாது. ஏனெனில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் பெற்றுதான் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யமுடியும் என்ற நிலையும், தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்கள் குடிநீருக்கு முல்லைப் பெரியாறு அணை நீரையே சார்ந்திருக்கிறது என்ற நிலையும் மெய்யானது.
முல்லைப் பெரியாறு அணை உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டால் இம்மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தின் பொருளியல் நிலை பாதிப்படையும்.
இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்கள் சார்பில் வழக்காட தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது. சட்டத்தகுதியும் இருக்கிறது.
“முல்லைப்பெரியாறு சுற்றுச்சூழல் அமைப்பு” என்ற சிறு குழுவினரை ஒரு தரப்பாக ஏற்றுதான் 2006 தீர்ப்பே உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த சிறு குழுவிற்கே கேரளம் சார்பாக வழக்காடுவதற்கு தகுதிப்பாடு (locus standi)  இருக்கும் போது பெருந் தொகையான மக்கள் சார்பில் தமிழக அரசு இவ்வழக்கில் ஒரு தரப்பாக நிற்பதற்கு எல்லா வகையிலும் தகுதிப்பாடு உண்டு.
எப்படி பார்த்தாலும் தமிழகத்தின் சட்ட உரிமையை, தமிழக மக்கள் தரப்பில் உள்ள நியாயத்தை உச்சநீதி மன்றம் உதறித்தள்ளி விட முடியாது.
தமிழர்களே,
வரலாற்றுக் காலந்தொட்டு தேக்கடி, குமுளி, மற்றும் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் பகுதியாக திகழ்ந்தவைதான். கடைசியாக அப்பகுதியை ஆண்ட பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த பூஞ்சார் மன்னன் 1868 இல் திருவிதாங்கூர் மன்னனுக்கு அப்பகுதியை அளித்தான். அதே போல் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கிப் பகுதிகள் மதுரை மாவட்டத்தின் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளாக விளங்கியவைதான். மாநில மறு சீரமைப்பின் போது இந்த பகுதிகளை மலையாள அயல் இனத்திடம் பறிகொடுத்தோம்.
 முல்லைப் பெரியாறு சிக்கல் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியை தமிழர்கள் இழந்ததால் ஏற்பட்ட சிக்கல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத் தாயக மண்ணின் வளமான பகுதிகளை விழுங்கியதோடு மலையாள வெறி அடங்க வில்லை.
வந்தது கேரள அரசு. ஆயினும் உச்சநீதிமன்றம் 2006-இல் ஆயினும் இந்த சொத்தை வாதங்களுக்கெல்லாம் ஆப்படித்து, சிறப்பான தீர்ப்பு வழங்கியது.
நடுவண் அரசின் நீர்வளத்துறை அமைத்த வல்லுநர்குழுக்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக 142 அடிவரை, தண்ணீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இப்பொழுது,1886-ஒப்பந்தம் செல்லாது என்றும், அப்படியே அதற்கு உயிர் இருந்தாலும் –அந்த ஒப்பந்தப்படி அதற்குத் தமிழ்நாடு சட்டப்படியான வாரிசு அல்ல என்றும் கேரளம் வல்லடி வழக்கு பேசுகிறது.
அதை உச்சநீதிமன்றம் ஏற்க சட்டஞாயம் ஏதும் இல்லை. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிப்பதாக அமையும்!

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

வெளியீடு:
த.தே.பொ.க. செய்திப்பிரிவு,

தலைமையகம், சென்னை-17.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT