உடனடிச்செய்திகள்

Wednesday, July 3, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதைக் கைவிட வலியுறுத்தி கோட்டையை நோக்கிக் கோரிக்கைப் பேரணி



தமிழ்வழி அரசுப் பள்ளிகளை அகற்றிவிட்டு, ஆங்கில வழிப் பள்ளிகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஆகத்து 8 அன்று சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்தப்படும் என தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அறிவித்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அங்கம் வகிக்கும் தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில், தமிழ்வழிப் பள்ளிகளை அகற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைத் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 01.07.2013 திங்கள் அன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா,   தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சைதை திரு. கே.வி.சிவராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனிபா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.


கூட்டத்தின் முடிவில், பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


1.   தமிழக அரசு தமிழ்நாடெங்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்தும் அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கடந்த 28.05.2013 அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் வாயிலில் எழுச்சியோடு முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டப்போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து அதன்படி 17.06.2013 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருட்டிணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, மதுரை, இராசப்பாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 இடங்களில் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.


2.   மூன்றாவது கட்டப் போராட்டமாக 08.08.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


அதற்குமுன் ஒருமாத காலத்தில் தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் உட்பட பரப்புரை கூட்டங்கள் நடத்த வேண்டும். வீடு வீடாக கோரிக்கை விளக்கத் துண்டறிக்கை வழங்க வேண்டும். இப்பணிகளை அந்தந்த மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் உள்ள நமது தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உள்ள அமைப்பினரையும் மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளையும், இன, மொழி உணர்வாளர்களையும், சனநாயக ஆற்றல்களையும் இணைத்துக் கொண்டு இப்பணிகளைச் செய்ய வேண்டும். கோட்டைப் பேரணிக்கு முன்பாக இப்பணிகளை சிறப்பாகச் செய்து பேரணிக்குப் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்ட வேண்டும்.


3.   தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தோழர் பெ.மணியரசன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக ஓர் இயக்கத்திற்கு ஒருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்

இதனைத் தொடர்ந்து, 02.07.2013 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு. தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.  

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT