உடனடிச்செய்திகள்

Monday, December 15, 2014

“யார் பிரிவினைவாதி?” ம.தி.மு.க. விழிப்புணர்வு பரப்புரைக் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் வினா!



“யார் பிரிவினைவாதி?” ம.தி.மு.க. விழிப்புணர்வு பரப்புரைக் கூட்டத்தில்
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வினா!
 

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள், காவிரியில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுத்திடல், மீத்தேன் திட்டத்தைத் திரும்பப் பெறுதல், முழு மதுவிலக்கை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 12.12.2014லிருந்து தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம் நடத்தி வருகிறார்.

14.12.2014 அன்று, தஞ்சை மாவட்டம் - ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், அன்றையப் பரப்புரையின் நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை. பாலகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. வைகோ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு திரு. அ.கணேசமூர்த்தி, ம.தி.மு.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில், ஒரத்தநாடு கோபு குழுவினர் எழுச்சிப் பாடல்கள் வழங்கினர்.

மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடக்கும் ம.தி.மு.க.வின் விழிப்புணர்வு பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு:

“காவிரி உரிமையை மீட்பதற்காக காவிரி உரிமை மீட்புக் குழு அமைத்து கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். காவிரி உரிமை மீட்புக் குழுவில், ம.தி.மு.க., மற்ற அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் ஆகியவை இருக்கின்றன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு, காவிரி உரிமை மீட்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றது. இப்போராட்டங்களில் ம.தி.மு.க. தோழர்கள் சிறப்பாக பங்கு பெற்று வருகின்றனர். குறிப்பாக, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் துரை. பாலகிருட்டிணன் அவர்களும், மாவட்டச் செயலாளர் அன்பு சகோதரர் உதயக்குமார் அவர்களும் இப்போராட்டங்களில் முன்னணியில் நிற்கின்றனர்.

கடந்த காலங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுதான் முதன்மை சக்தியாக இருந்து போராட்டங்களை நடத்தி வந்தது. ஆனால், இந்த ஆண்டு பல்வேறு விவசாயிகள் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் காவிரி உரிமையை மீட்க எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளன. இது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்த நிலையில், இன்னும் மேலே சென்று அண்ணன் வைகோ அவர்கள் டெல்டா மாவட்டங்களில் கிராமம் கிராமமாக பரப்புரை செய்து வருவது, பெரும் பாராட்டிற்குரியது; பெரும் பயனளிக்கக்கூடியது.
---------------------------------------------
யார் பிரிவினைவாதிகள்?
---------------------------------------------

தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாம் குரல் கொடுத்தால், பிரிவினைவாதிகள் என்று சிலர் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்த காவிரி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டாலும் அதை செயல்படுத்த முடியாது, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று சொல்லும் கர்நாடகத்தினர் பிரிவினைவாதிகள் இல்லையா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக காவிரியில் புதிதாக 2 அணை கட்டி மேட்டூருக்குத் தண்ணீர் வராமல் தடுக்கப் போகும் கர்நாடக அரசு பிரிவினைவாதி இல்லையா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுகின்ற கர்நாடக அரசை கண்டித்து சரியான பாதையில் அதை செயல்பட வைக்க முன்வராத இந்திய அரசு பிரிவினைவாதத்தைத் தூண்டவில்லையா?

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள சிக்கலில் நடுநிலையாகச் செயல்படாமல் பாகுபாடு பார்த்து தமிழர்களுக்கு எதிராகவும், கன்னடர்களின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்திய அரசின் அணுகுமுறை பிரிவினைவாதம் இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம், அணை வலுவாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி தமிழகம் 142 அடி தேக்கியதும், உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக்குழு பார்வையிட்டு அணை வலுவாக இருக்கிறது என்று அண்மையில் தான் சான்றளித்தது. இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆய்வு செய்து தள்ளுபடி செய்தது. கேரள அரசு புதிதாக அணை கட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறியது. கடந்த மே மாதம் தான் இந்தத் தீர்ப்பு வந்தது.

ஆனால், இப்பொழுது பா.ச.க. அரசு நடுவண் அமைச்சர் ஜவடேக்கர் தலைமையிலுள்ள சுற்றுச்சூழல் – வனவிலங்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், கேரள அரசு புதிய அணை கட்ட முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆய்வு செய்யலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடுவண் அரசே காலில் போட்டு மிதித்து, காறித்துப்பி கேரளம் புதிய அணை கட்டலாம் என்று அனுமதி கொடுத்தால், இது பிரிவினைவாதம் இல்லையா?

நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால், அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்படாமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அச்சட்டம் செல்லும் – செல்லாது என்று அறிவிக்கும் உயர் அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து, தமிழர்களுக்கு எதிராகவும் – சட்ட விரோத மலையாளிகளுக்கு ஆதரவாகவும் நடுவண் அரசு செயல்படுவது, நடுநிலை தவறி இரண்டு இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குவது இல்லையா? இந்திய அரசின் பிரிவினை அணுகுமுறை இல்லையா?

காலம் காலமாகத் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த இந்திய அரசு, இப்போது கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதன் பொருள், கச்சத்தீவு ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பதுதானே? சிங்களர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நிலைபாடு – பிரிவினைவாதம் இல்லையா?

தமிழ் மக்களை பகைப் போக்கோடு பார்த்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க – உயிர்களைப் பறிக்க சிங்களன் முயன்றால், இந்திய அரசு சிங்களனுக்குத் துணை செய்யும். கன்னடர்களும் மலையாளிகளும் முயன்றால் அவர்களுக்கு இந்திய அரசு துணை செய்யும். எல்லா நிலையிலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்படும். இது தானே இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிராக கடைபிடிக்கும் பிரிவினைவாதம்?

இப்படிப்பட்ட இந்திய அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசியல் இல்லை. ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவது கூட தமிழ்நாட்டிலே உள்ள அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளுக்குப் பொறுப்புணர்ச்சியோ மக்கள் மீது அக்கறையோ கிடையாது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், இக்கட்சித் தலைவர்கள் ஒருவர் குரல் வளையை ஒருவர் கடிக்கக்கூடிய அநாகரிகக் கும்பலா? மற்ற மாநிலங்களில் பதவிச் சண்டை இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் மக்களைக் கண்டு கட்சித் தலைவர்கள் பயப்படுகிறார்கள். இங்கே, தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்கள் ஆட்டு மந்தை – மாட்டு மந்தை போல், தங்களுக்கு அடிமைப்பட்ட ஓட்டு மந்தை வைத்திருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். அண்ணா தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா? தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா? இந்த விவசாயிகள் தங்கள் தங்கள் கட்சியை, உரிமைப் பிரச்சினைகளில் செயல்படுமாறு தூண்ட வேண்டும்.

காவிரிப் படுகை மண்ணை – பாலைவனமாக மட்டுமல்ல, நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தைத் தடுப்பதற்கு அண்ணா தி.மு.க.வும், தி.மு.க.வும் பகிரங்கமாக முன்வர வேண்டும். அவ்வாறு வருமாறு அக்கட்சிகளை, அக்கட்சிகளில் உள்ள விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்.

அண்ணன் வைகோ அவர்களின் இந்த விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் வெற்றியடைய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

கூட்டத்தில், திரளான பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT