தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்!
சப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்கள் நேற்று (26.11.2015), தமது 82 ஆம் அகவையில் டோக்கியோவில் காலமானார் என்ற துயரச்செய்தி தமிழ் மொழி அறிஞர்களிடமும் உணர்வாளர்களிடமும் வேதனை உண்டாக்கியுள்ளது.
தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களின் ஒரு பகுதியை உலகறியச் செய்த பெருமகனார் கராசிமா, குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை சிறப்பாக ஆய்வு செய்தார்.
சோழர் கால நில உறவுகள் பற்றி செப்பேடுகள் வழி அறிந்த கராசிமா – தமிழ்நாடு வந்து கள ஆய்வில் ஈடுபட்டார்.
வளநாடு – கோட்டயம் – கூற்றம் என்ற அடுக்குமுறை நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கி, சோழப் பேரரசை ஆட்சி செய்த அரசர்களின் – தொகுப்பு முறை ஆட்சி (Segmentary State) பற்றி வெளிப்படுத்தியவர் கராசிமா.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக 1989 முதல் 2010 வரை செயல்பட்டார். தஞ்சாவூரில் 1995இல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியதில் பெரும் பங்கு வகித்தார்.
ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குறுகிய காலத்தில் நடத்தி – தமது அரசியல் விளம்பரத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆசைப்பட்டு அவசரப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுத்தாள்கள் தயாரிக்கப்போதிய காலவெளி கொடுக்காமல் அவசரம் அவசரமாக ஆராய்ச்சி மாநாடு நடத்தக் கூடாது என்று மறுத்துவிட்டார் நொபுரு கராசிமா.
ஆனால் கலைஞர் கருணாநிதி தமது திட்டப்படி – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் 2010 இல் நடத்தினார்; அப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் செயல்படாமல் போய்விட்டது.
இந்தியா – சப்பான் நல்லுறவுக்குப் பாடுபட்டார் என்று கராசிமாவுக்கு இந்திய அரசு “பத்ம சிறி” விருது அளித்தது. உடல்நலக் குறைவால் அவ்விருதை வாங்க அவரால் புதுதில்லி வரமுடியவில்லை. பின்னர் சப்பான் சென்றபோது அன்றையத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், பத்ம சிறி விருதை கராசிமாவிடம் நேரில் அளித்தார்.
நொபுரு கராசிமாவின் மிகச் சிறந்த தமிழர் ஆய்வுப் பணிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
இடம் : சென்னை
Post a Comment