உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!
உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவரும் என்னுடைய நீண்டநாள் தோழருமான முனைவர் ந. அரணமுறுவல் அவர்கள், இன்று (06.11.2015),நெல்லையில் திடீரென்று மாரடைப்பால் காலமான செய்தியறிந்து, சொல்லொண்ணா அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.
அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். படித்துக் கொண்டிருந்தபோது, திருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத்தமிழ்க் கழக அமைப்பு மாநாட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவரை சந்தித்தது முதல், தோழர் அரணமுறுவல் அவர்களும் நானும் உலகத்தமிழ்க் கழகத்தில் பணியாற்றபோதும், அதன்பிறகு கடந்த 01.11.2015 அன்று, தேவக்கோட்டையில் தமிழர் முன்னணி நடத்திய, தமிழர் தாயகநாள் விழாவில் கலந்து கொண்டது வரை தொடர்ந்து, கொள்கை வழி உடன்பட்டு தோழமையோடு செயல்பட்டுள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை நிலைநாட்டிட, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டும், இயங்கியும் வந்துள்ளோம்.
தோழர் அரணமுறுவல் இளமைக் காலம் தொட்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்வழிநின்று, உறுதியான தனித்தமிழ்ப் பற்று கொண்டு, அதனை தன் குடும்பத்திலும் பொது வெளியிலும் பரப்பி, பணியாற்றி வந்ததுடன், தனித்தமிழ்நாடு கொள்கையிலும் உறுதியாக நின்றவர். அதைப்போலவே, மனித சமத்துவம் தமிழர் சமத்துவம் பெண்ணுரிமை மதசார்பின்மை போன்ற கொள்கைகளிலும் உறுதியாக இருந்தவர்.
பாவாணர் - பெருஞ்சித்திரனார் ஆகியோர் நிறுவிய உலகத் தமிழ்க் கழகம் இடையில் தொய்வடைந்து, செயல் முடங்கியிருந்தகாலத்தில் அதனை தூக்கி நிறுத்தி, செயல் களத்திற்குக் கொண்டுவந்தோரில், தோழர் அரணமுறுவல் முதன்மையானவர். உலகத் தமிழ்க்கழகத்தின் சார்பில், தரமான ஆய்வுகளுடன்கூடிய, தனித்தமிழ் இதழாக “முதன்மொழி”யை, கொண்டு வருவதிலும், அரணமுறுவல் பணிஅளப்பரியது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவர் ஆற்றியப் பணி மற்றவர்களாலும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
தமிழ் மொழி, தமிழர் தாயகம், தமிழினம் ஆகியவை பல்வேறு தாக்குதலுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும், உயிர் பறிப்புகளுக்கும்உள்ளாகி வரும் இவ்வேளையில், தோழர் அரணமுறுவல் இழப்பு என்பது, தமிழினத்திற்குப் பேரிழப்பாகும். பெரும் துன்பம் தருவதாகும்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், முனைவர் அரணமுறுவல் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன். அவர்மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
இடம் : சென்னை
குறிப்பு: நாளை (07.11.2015) காலை 11 மணியளவில், மேற்கு தாம்பரம் முடிச்சூர் பகுதியிலுள்ள அய்யா அவர்களின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.
Post a Comment