உடனடிச்செய்திகள்

Thursday, November 5, 2015

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் தமிழர்களுக்கு வேலை மறுப்பைக் கண்டித்து பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!






சேலம் தொடர்வண்டி கோட்டத்தில், “டி“ பிரிவு ஊழியர் வேலைக்கு தேர்வு நடத்தி அதில், 644 பேருக்கு வேலை தர நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள். இந்த 644 பேரில், 401 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 60 பேர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இராஜஸ்தான் – 38, பீகார் – 16 மற்றும் சில வடமாநிலங்கள் என்று வேலை வழங்கிட அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், விருத்தாச்சலம், தருமபுரி இடையே உள்ள இருப்புப் பாதைப் பகுதிகள் வருகின்றன. ஆனால், கேரளாவுக்கு மட்டும் 63 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தொடர்வண்டித் துறையில் தமிழ்நாட்டில் உருவாகும் பணியிடங்களுக்கு, மிக அதிக எண்ணிக்கையில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தொடர்வண்டித் துறையில் இன ஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையிலும், மற்றும் தென்னகத் தொடர்வண்டி மண்டலத்திலும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, வடமாநிலத்தவருக்கும், மலையாளிகளுக்கு மட்டுமே கூடுதலாக வேலை வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் தொடர்வண்டித்துறை உள்ளிட்ட இந்திய அரசுத் தொழிலகங்கள் மற்றம் அலுவலகங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதுதான், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதற்கான நீதியாகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களைப் புறக்கணிக்கும் இந்திய அரசு நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தமிழர்களைப் புறக்கணிப்பர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தொடர்வண்டித்துறையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் பயன் அடையாமல் வெளி மாநிலத்தவருக்குக் கொடுப்பது, சமூக அநீதியாகும்.

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் வேலை வழங்கும் நேர்காணல்களுக்கு இப்பொழுது அழைத்துள்ள பட்டியலை முற்றிலுமாக இரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் வகையில, புதிய பட்டியல் தயாரித்து நேர்காணல் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், தொடர்வண்டித்துறை கடைபிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்தும், இன்று (05.11.2015) காலை, சேலம் சந்திப்பு முன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

“வழங்காதே வழங்காதே! தமிழ் மண்ணில் அயலாருக்கு வேலை வழங்காதே!”, “தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்கு” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களுடன் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், நாம் தமிழர் கட்சி சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் திரு. பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் சிவப்பிரியன், உழைக்கும் மக்கள் முன்னணி தலைவர் திரு. முரளி, கலப்புத் திருமண சங்கத் தலைவர் திரு. அழகேசன், தந்தை பெரியார் தி.க. சேலம் மாவட்ட செயலாளர் தோழர் தங்கராசு, தமிழ்நாடு எல்லைப் போராட்ட சங்கத் தலைவர் திரு. மா. சுப்பிரமணியம், ம.தி.மு.க. பொறுப்பாளர் திரு. தைரிய சீலன், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு திரு. அப்துல், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பெண்ணாடம் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ச. பிந்துசாரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றினார். கண்டன உரையாற்றினர். தோழர் க. சேகர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஈரோடு இளங்கோவன், பெண்ணாடம் கனகசபை, தர்மபுரி செயலாளர் தோழர் விஜயன், கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, த.இ.மு. நடுவண் குழு தோழர் மாவீரன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசே - தென்னக தொடர்வண்டித்துறையே!!! அயலாருக்கு வேலை வழங்கும் பட்டியலை முற்றிலுமாக இரத்து செய்! தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் புதிய பட்டியலை வெளியிடு!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT