உடனடிச்செய்திகள்

Wednesday, February 8, 2017

தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்! தோழர் பெ. மணியரசன் நேரில் இறுதி வணக்கம்!

தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்! தோழர் பெ. மணியரசன் நேரில் இறுதி வணக்கம்!
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ் மொழியை அடுத்தகட்டத்திற்கு முன்னகர்த்திச் செல்லும் வகையில், அறிவியல் தமிழ் சொல்லகராதிகளை உருவாக்கி, தமிழுக்குத் தொண்டாற்றி வந்த தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள், தமது 82ஆவது அகவையில் நேற்று (06.02.2017), சென்னையில் காலமானார்.

தமிழில் அறிவியல் கலைச் சொற்கள் பலவற்றை உருவாக்கி, அவற்றைத் தொகுத்து எட்டு தொகுதிகளாக வெளியிட்டது, அரும்பெரும் சாதனையாகும்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சிறந்த நூல் விருதைப் பெற்ற 'இசுலாமும் சமய நல்லிணக்கமும்' நூல் உள்பட, பல்வேறு நூல்களையும் தமிழுக்குத் தந்தவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். சற்றொப்ப 4 கோடி சொற்களைக் கொண்ட பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வர, திரு. மணவை முஸ்தபா பெருந்தொண்டாற்றினார்.

திருச்சி – மணப்பாறை அருகிலுள்ள இளங்காகுறிச்சியைச் சேர்ந்த, திரு. மணவை முஸ்தபா அவர்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பட்டப்படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புகளையும் முடித்தார்.

தமிழ் செம்மொழி என்பதற்கான தகுதிகளைத் தமிழ்நாடு அரசுக்கும், இந்திய அரசுக்கும் தொகுத்துக் கொடுத்தார் மணவையார். தமிழர் கண்ணோட்டம் இதழில் கட்டுரைகள் எழுதினார்.

யுனெஸ்கோ நிறுவனம், தமது அதிகாரப்பூர்வ செய்தி இதழாகிய “யுனெஸ்கோ கூரியர்” என்ற இதழைத் தமிழில் கொண்டு வர முஸ்தபா அவர்கள் செயல்பட்ட போது, இந்திய அரசு அதற்கு பல தடைகளை ஏற்படுத்தியது. அதனை உடைக்க, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரைச் சந்தித்து, இந்திய அரசுக்கு அரசியல் நெருக்கடி கொடுத்து, அவ்விதழை வெளிவரச் செய்தார். இந்தியாவில் தமிழில் மட்டும்தான் அந்த இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரியர், திரு. முஸ்தபா அவர்கள்!

வாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த திரு. முஸ்தபா அவர்களுக்கு, நேற்று (06.02.2017) மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. திரு. மணவை முஸ்தபா அவர்களுக்கு அண்ணல், செம்மல் ஆகிய இரு மகன்களும், தேன்மொழி என்ற மகளும் இருக்கின்றனர்.

அண்ணா நகரிலுள்ள திரு. முஸ்தபா அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, இன்று (07.02.2017) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் நேரில் சென்று இறுதி வணக்கம் செலுத்தினார். புலவர் இரத்தினவேலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

அய்யா மணவை முஸ்தபா அவர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது! அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது!

படம்: கவிஞர் ஜலாலுதீன் அனீபா
https://www.facebook.com/jalaludeen.hanifa1

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT