உடனடிச்செய்திகள்

Tuesday, September 12, 2017

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சிறப்புப் பொதுக்குழு தீர்மானம்!

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சிறப்புப் பொதுக்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுக் கூட்டம், ஓசூரில் 10.09.2017, 11.09.2017 ஆகிய இரு நாட்கள் எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் ம. இலட்சுமி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் இருநாள் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமைக் குழுவினராகச் செயல்பட்டு நெறிப்படுத்தினர். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் தோழர் அ. விடியல் (எ) ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஓசூர் கோ. மாரிமுத்து, க. அருணபாரதி, குழ. பால்ராசு, நா. வைகறை, பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், இரெ. இராசு, க. முருகன் உள்ளிட்டோரும், பொதுக்குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் இருநாள் கூட்டத்திலும் கலந்து கொண்டனர். அரியலூர் மாணவி அனிதா, காவிரிக்காக உயிரீகம் செய்த விக்னேசு, ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்டோருக்கும், அண்மையில் மறைந்த பேரியக்கத் தோழர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்புப் பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 - “மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” - நடுவண் அரசு அலுவலகங்களில் ஒரு வாரம் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவளி ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைப்பேசித்துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது விழுக்காடு அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.

இதுதவிர, தமிழ்நாட்டில் வசிப்போர் என்று போலிச் சான்றிதழ் பெற்று அயல் மாநிலத்தவர் பலர் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் வேலையிலும் கல்வியிலும் சேர்க்கிறார்கள். இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டு “நீட்” தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல் மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

எட்டுக்கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் படித்து வேலையில்லாமல் துன்புறுவோர் ஏராளம்! தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ள மண்ணின் மகன்கள், மண்ணின் மகள்கள் எண்ணிக்கை ஒரு கோடி! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து பட்டம் பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் _ மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள். அவர்களில் பலர் தொழிலகங்களின் வாயில் காப்போர்களாக வேலை பார்க்கிறார்கள். அவ்வேலையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு மிக அதிகமாகிப் போட்டி கடுமையாக உள்ளது.

இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தமிழ்நாடு தமிழர்களின் தேசிய இனத் தாயகம் என்ற சட்ட ஏற்பாகும். தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்திற்கு எதிராக, இந்திய அரசு அனைத்திந்தியத் தேர்வு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நடுவண் அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே எண்பது விழுக்காடு அளவிற்குச் சேர்த்து வருகிறது.

அண்மையில் தமிழ்நாட்டு அஞ்சலகப் பணிகளுக்காக அனைத்திந்தியத் தேர்வெழுதியோரில் அரியானா மாநிலத்தவர் 25க்கு 25 என்ற அளவில் தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண் வாங்கிய மோசடி அம்பலமானது. ஆவடி எச்.வி.எப் - ஆயுதத் தொழிற்சாலையில் வடநாட்டவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் பி.எச்.இ.எல்., நெய்வேலி, ஆவடித் தொழிலகங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தமிழர்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்.

மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு _- 70 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையிரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பா.ச.க. ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கர்நாடகத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டமியற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தியும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் மண்ணின் மக்கள் அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சிறப்புப் பொதுக்குழு ஒருமனமாக முடிவு செய்துள்ளது.

மண்ணின் மக்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் இக்காத்திருப்புப் போராட்டத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடின்றி அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு இப்பொதுக்குழு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 - உச்ச நீதிமன்றம், தமிழக உழவர்களைக் காவிரி வழக்கில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கை தமிழ்நாடு அரசு, முழுமையான அக்கறையோடு நடத்தவில்லை. தமிழர்களின் சார்பாக வாதிட வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் அரசியல் அழுத்தங்களால் உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் முயல்கிறது. காவிரி வழக்கின் போக்கைத் திசைமாறச் செய்யும் வகையில் கர்நாடகம் கிளப்பும் பொய்களுக்கும், இந்திய அரசின் வஞ்சகத்திற்கும் தமிழ்நாடு அரசு வளைந்து கொடுக்கிறது.

எனவே, காவிரி வழக்கில் தமிழர்களுக்காக வாதிட “காவிரி உரிமை மீட்புக் குழு”வுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கடந்த ஆகத்து 21 அன்று உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கடிதம் எழுதினார். தமிழர்கள் பலரும் அவ்வாறே உச்ச நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினர். அதற்கு, உச்ச நீதிமன்றம் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

எனவே, உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு உழவர்கள் சார்பில் வாதிட “காவிரி உரிமை மீட்புக் குழு”வை காவிரி வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 - தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்தித் திணிப்பு - கேந்திரிய வித்தியாலயா பள்ளியை அனுமதிக்கக் கூடாது!

தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்து, கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கேந்திரிய வித்தியாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி அமையவுள்ள இடத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் குழுவாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பளல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981 செப்டம்பர் 15 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், இப்பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார். 25 துறைகளின் உயராய்வுக்காக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு, 972 ஏக்கர் அரசு நிலத்தையும் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த தி.மு.க. - அ.தி.மு.க. அரசுகள் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை தமிழ் வளர்ச்சி அல்லாத பிறப் பயன்பாடுகளுக்கு திருப்பி விடும் பணிகளை செய்து வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் முறையாக நடத்தாமல் சீரழித்து வருகின்றனர்.

முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலிகைப் பண்ணையின் 25 ஏக்கர் நிலத்தை இந்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழ்நாடு அரசு. அதன்பின், 50 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு அளித்தது. அங்கு இப்போது வீடு கட்டி, தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், 2012இல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 62 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

இப்போது, அதையெல்லாம் விட மோசமாக இந்தி - சமற்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு வரும் சி.பி.எஸ்.இ. கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கே - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது, கடும் கண்டனத்திற்குரியது!

இந்திய அரசின் இந்தி - சமற்கிருதத் திணிப்புகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்நாடு ஆட்சியாளர்கள், அதற்கு நேர் முரணாக இந்திய அரசின் இந்தி - சமற்கிருதத் திணிப்புக் கருவிகளாக விளங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது அயோக்கியத்தனமானது!

உடனடியாக தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்! தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எங்குமே இந்தி - சமற்கிருதத் திணிப்பு கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது என இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 - நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்!

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களைக் கொண்டு வந்து திணித்து, தமிழ்நாட்டின் மண்ணின் மக்களை புறக்கணிக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ள “நீட்” - அகில இந்தியத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடெங்கும் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

”நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி - எதிர் - மத்தியப்பிரதேச மாநில அரசு” வழக்கில் தீர்ப்பளித்த - ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பிலும் இது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவற்றை யெல்லாம் குப்பையில் வீசிவிட்டு இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் சட்ட விரோதமாக நீட் தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளன.

அதை எதிர்த்து முறியடிப்பதற்கு மாறாக, மோடி அரசின் எடுபிடியாக நிற்கும் தமிழ்நாட்டின் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவில் நெருப்பை வீசி விளையாடின. இதன் விளைவாகவே, அரியலூர் மாணவி அனிதா உயிரீகம் செய்தார். அவரின் ஈகம் தமிழ்நாட்டு மாணவர்களையும், மக்களையும் உலுக்கியெடுத்துள்ள நிலையில், தன்னெழுச்சிப் போராட்டங்களால் தமிழ்நாடு போர்க்களமாகியுள்ளது.

இச்சூழலைப் பயன்படுத்தியாவது, தமிழ்நாடு அரசு கடந்த 31.01.2017 அன்று நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு, இந்திய அரசிடம் ஒப்புதலைப் பெற உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 5 - கடலூர் - நாகை கிராமங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்!
கதிர்வீச்சு அபாய அணு உலைகள், காற்று மண்டலத்தையும் உயிர் வாழும் சூழலையும் நாசப்படுத்தும் அனல் மின் நிலையங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் பெட்ரோல், எரிவளி (மீத்தேன்) எடுப்பு முயற்சிகள், நியூட்ரினோ ஆய்வகம், வேளாண் நிலங்களை அழிக்கும் கெயில் குழாய்த் திட்டம் என இந்திய அரசால் தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்டு வரும் அழிவுத் திட்டங்களில் ஒன்றாக, கடலூர் _- நாகை மாவட்டத்தில் எரிமவேதிப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் - நாகை மாவட்டங்களின் 45 கிராமங்களில் சற்றொப்ப 57,345 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த முதலீட்டு மண்டலத்தில், நச்சுக்காற்றையும், மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்களையும் பெரும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய புதிய நகரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 45 கிராமங்களை தனியார் நிறுவன வளாகமாக மாற்றி, இலட்சக்கணக்கான குடும்பங்களை காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றும்.

ஏற்கெனவே சிப்காட் தொழிற்சாலைகளால் கடும் மாசுபாடுகளாலும், நிலத்துக்குள் கடல் நீர் புகுவதும் அதிகரித்துள்ள கடலூர் - நாகை மாவட்டங்களில், இந்த புதிய முதலீட்டு மண்டலம் நிலைமையைத் தீவிரமாக்கி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கி விடும்.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் என்பது ஏற்கெனவே மேற்கு வங்கத்தாலும், கேரளாவாலும் தங்கள் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட திட்டமாகும். அதைத் தமிழ்நாட்டின் மீது திணிப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கோருகிறது!

இத்திட்டத்தை எதிர்த்து, இக்கிராம மக்களைத் திரட்டி மண்ணுரிமை காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பது என தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் 6 - தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை உடனே நிறைவேற்றுக!

கிருட்டிணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் உள்ள 52 கிராமங்களில், தொடர்ந்து பல ஆண்டுகளாக வறட்சியாலும், முறையான நீர் நிலைப் பராமரிப்பின்மையாலும் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்குக் கீழ் சென்றுவிட்டது. அதன் காரணமாக குடிநீருக்கும் வேளாண்மைக்கும் நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

பருவமழைக் காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால்கூட, இப்பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தும் கிளைவாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தாததால், அத்தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கும் நிலை உள்ளது.

எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், இங்குள்ள கருக்கநல்லி, பெரிய எள்ளி, குட்டை, கீழ் ஏரி, மேல் ஏரி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி - குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனக் கோரி தமிழக உழவர் முன்னணி சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மக்கள் இயக்கத்தின் விளைவாக, தமிழ்நாடு அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, சாத்தியக்கூறு ஆய்வுகளையும் மேற்கொண்டது.

2012 - 2013ஆம் ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 22.20 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் தமிழ்நாடு அரசு மதிப்பிட்டது. எனினும் திட்டம் செயல்படுத்தவில்லை. அரசின் கால தாமதத்தால், திட்ட மதிப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. 2014 - 20தீர்மானம் 15ஆம் ஆண்டு இம்மதிப்பீட்டுத் தொகை 29 கோடியே 50 இலட்சம் ரூபாயாக அதிகரித்தது.

எனவே, தமிழ்நாடு அரசு தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை இனியும் தாமதிக்காமல் நடப்பு ஆண்டிலேயே உடனடியாகச் செயல்படுத்தி, இப்பகுதிகளில் பல்லாண்டுகளாக நிலவும் குடிநீர் மற்றும் வேளாண் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 7 - அரசு ஊழியர்களின் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கக் கூடாது!

ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தைகளில் போட்டு சூதாட வழி வகுக்கும் புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஞாயமான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ - ஜியோ” அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு ஆணை (மெமோ) வழங்கியுள்ளது. அவர்களது ஞாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களை அடக்குமுறைகளால் அச்சுறுத்திக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு இந்த அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டக் குழுவோடு தமிழ்நாடு அரசு முறையாக சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
 
நாள் : 11.09.2017
இடம் : ஓசூர்
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT