பிரான்சு, கனடா நாடுகளில் எரி எண்ணெய் எடுக்கத் தடை: தமிழ்நாட்டிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
பாரீசு பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில், பிரான்சு அரசாங்கம் அந்நாட்டில் எரி எண்ணெய் (பெட்ரோலியம்), எரிவளி (எரிவாயு) எடுப்பதை படிப்படியாகக் குறைத்து, 2040க்குள் எரி எண்ணெய் – எரிவளி எடுப்பதை முற்றிலுமாகக் கைவிடுவது என முடிவு செய்து அதற்கான தடைச் சட்டத்தை 2017 செப்டம்பர் 6 அன்று பிறப்பித்திருக்கிறது.
தங்களது மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவளித் தேவைக்கு இயற்கையோடு இயைந்த மாற்று வழிகளை கடைபிடிக்கப் போவதாக பிரான்சு அரசாங்கம அறிவித்திருக்கிறது. “தூய மின்சாரம்” என்ற பெயரால், அணு மின்சாரம் எடுப்பதையும் கொள்கை அளவில் கைவிட முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, இப்போது அந்நாட்டு மின்சாரத் தேவையில் 75 விழுக்காட்டு மின்சாரம் அணு உலையிலிருந்து வருவதை 50 விழுக்காடாக குறைக்க முடிவு செய்துள்ளது.
அதேபோல், கனடா நாட்டு – கியூபெக் மாகாண அரசு, தனது செயின்ட் லாரன்சு (Gulf of Saint Lawrence) வளைகுடா பகுதியில் உள்ள அன்டிகோஸ்டீ (Anticosti) தீவிலும் அதை சுற்றியுள்ள கடல் பரப்பிலும் எண்ணெய் எடுப்பதை கைவிடுவது என 2017 சூலையில் அறிவித்திருக்கிறது.
மின்சார நுகர்வு மிகையாக உள்ள இந்த மேற்கத்திய நாடுகளே எரி எண்ணெய் எடுப்பதைக் கைவிடும்போது, தமிழ்நாட்டில் அவ்வாறு செய்வது இயலாத செயல் அல்ல!
பிரான்சு, கனடா நாடுகளைவிட கோடைக் காலம் அதிக மாதங்கள் உள்ள வெப்ப மண்டல பகுதியான தமிழ்நாட்டில், அந்நாடுகளைவிட கதிரவன் மின்சாரம் கிடைப்பது ஏராளம்! இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, கதிரவன் மின்சார உற்பத்திக்கு ஆகும் செலவும் வேகமாகக் குறைந்து வருகிறது. நிலக்கரியிலிருந்து மின்சார உற்பத்தி செய்வதைவிட கதிரவன் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு குறைவு! காற்றையும் மண்ணையும் நீரையும் மாசுபடுத்தி மக்கள் வாழ்வை சீரழிக்காதது!
அதேபோல், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அப்பகுதிகளில் சேரும் திடக்கழிவை மேலாண்மை செய்ய முடியாமல் தவித்து வருவதற்கு விடையாக, கழிவிலிருந்து மின்சாரமும் எரிவாயுவும் உற்பத்தி செய்வதே அமையும்.
இவையன்றி, காற்றாலை மின்சாரம், கடல் அலை மின்சாரம் போன்ற ஏராளமான வாய்ப்புகள் மேற்சொன்ன நாடுகளைவிட தமிழ்நாட்டில் அதிகம்.
அந்தந்த பகுதிகளிலும் 2 மெகா வாட் அல்லது 3 மெகா வாட் அளவிற்கு மிகாத சிறு சிறு உற்பத்தி அலகுகளை இந்த மாற்று வழிகளில் அமைத்துக் கொள்ள முடியும். மின்சாரமும் எரிவளியும் கிடைக்கிற இடங்களைச் சுற்றியே அவற்றின் பயன்பாட்டையும், வழங்கலையும் வைத்துக் கொண்டால், கம்பி இழப்பு – குழாய் வழி இழப்பு போன்றவற்றை வெகுவாகக் குறைக்க முடியும்.
இவ்வாறான மாற்று மின்சார – எரிவளி உற்பத்தி நிறுவனங்கள் இப்போது இருப்பதைவிட பல மடங்கு வேலை வாய்ப்பையும் வழங்குகின்றன. இச்சிறு நிறுவனங்களை ஊராட்சி - நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளே நிர்வாகம் செய்து கொள்ள முடியும். அதிகாரக் குவிப்பையும் தவிர்க்க முடியும்!
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் – எரிவளி எடுக்கிற பகுதிகளிலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை சுற்றிலும், நிலக்கரி கையாளும் காரைக்கால் துறைமுகப் பகுதிகளைச் சுற்றிலும் கொடும் மாசுபாடு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்வுரிமை பறிக்கப்படுவதை பொறுக்க முடியாமல் மக்கள் போராடி வருகிறார்கள்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மின்சாரம் எரிவளி தேவைக்கு இயற்கையோடு இயைந்த மாற்று வழிகளை பிரான்சு - கனடா நாடுகளைப் போல தமிழ்நாடும் மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக, ஓ.என்.ஜி.சி.யை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்றும், பேரழிப்பு அணு உலைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
Post a Comment