தினகரன் குழுவின் பதினெட்டு உறுப்பினர் நீக்கம் : கட்சிக் கட்டுப்பாடா? மந்தைக் கட்டுப்பாடா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
அ.இ.அ.தி.மு.க.வின் தினகரன் பிரிவைச் சேர்ந்த 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியைப் பறித்து, “தகுதிநீக்கம்” செய்துள்ளார் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அவர்கள். இந்த 18 உறுப்பினர்களும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொண்டதாகவும், முதலமைச்சர் தன் அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருப்பதை மெய்பிக்க சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியே மனு கொடுத்தனர்.
இதையே “கட்சித் தாவல் நடவடிக்கை” என்று பேரவைத் தலைவர் தனபால் முடிவு செய்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறுகிறார். பேரவைத் தலைவரின் இச்செயல் சட்டப்படியானதும் அல்ல, நீதிப்படியானதும் அல்ல, தன்னலம் சார்ந்ததாகும்!
தனது குழுவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பதவி இழக்கக் கூடாது என்பதற்காக சட்ட விரோதமாக தனபால் செயல்பட்டிருக்கிறார். இதுவரை பெரும்பாலோரின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று வந்த பேரவைத் தலைவர் தனபால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு சாதாரண தன்னலவாதி என்று பெயரெடுத்திருக்கிறார். அவரது இந்தச் செயல், சட்டம் மற்றும் சனநாயகம் ஆகியவற்றுக்கு எதிரானது! பதினெட்டு உறுப்பினர்களின் பதவியைப் பறித்த பேரவைத் தலைவர் தனபால் அவர்களின் செயல்பாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில், எது கட்சித் தாவல் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர், தனது கட்சியிலிருந்து விலகிவிட்டாலோ அல்லது தனது கட்சி ஏவுநர் (கொறடா) விதித்த கட்டளையை மீறி தன் கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ – அவர் உறுப்பினர் பதவியை இழப்பார் என்றுதான் கூறப்பட்டுள்ளது. (அதிலும் அக்கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் உறுப்பினர் பதவியைப் பறிக்கக் கூடாது என்கிறது இச்சட்டம்).
இந்த இரண்டுவகைச் செயலிலும் தினகரன் தரப்பு உறுப்பினர்கள் ஈடுபடவில்லை. ஆளுநருக்கு ஒரு கோரிக்கையைதான் வைத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஆந்திர முதல்வர் என்.டி. இராமாராவ், உத்தரகாண்ட் ஹரிஷ் ராவத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் பதவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், ஓர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை மெய்பிக்கும் இடம் – சட்டப்பேரவைதான் என்று உறுதி செய்துள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எடப்பாடி பழனிச்சாமி – தனபால் கூட்டணியின் குறுக்கு வழி!
செயலலிதா அம்மையார் இறந்த நாளிலிருந்து தமிழ்நாட்டு அரசியலில் தலைமையிடம் பிடிப்பதற்காக, அன்றாடம் புதுப்புது சட்ட விரோதச் செயல்களில் இந்திய பா.ச.க. ஆட்சி இறங்கி வருகிறது. 18 உறுப்பினர் தகுதி நீக்கமும் பா.ச.க. தலைமையிலான சதித்திட்டம்தான்! பதவிக்காகவும், பணத்திற்காகவும் நாட்டையே விற்றுவிடத் தயங்காத அ.தி.மு.க.வினர், பா.ச.க.வின் அதிகாரத்திற்குக் கையாளாக மாறி - தன்னலச் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“பா.ச.க. தலைமைக்கு ஆன்மிக ஒழுக்கமும் கிடையாது – அரசியல் ஒழுக்கமும் கிடையாது” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி வருகிறது. பதினெட்டு உறுப்பினர் தகுதி நீக்கமும் பா.ச.க.வின் திரைமறைவு வேலைகளால்தான் அரங்கேறி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் குழுவினர் சண்டையிட்டுக் கொள்வது – எந்தப் பொதுநலத்துக்காகவும் அல்ல! சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பலவகையான செல்வங்களைப் பாதுகாக்க வேண்டுமானால், தங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் - புதுதில்லியின் அரவணைப்பு இருக்க வேண்டும் என்ற தன்னலத் தந்திரம் காரணமாகவே அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.
இம்மூன்று பேருமே பா.ச.க. தலைமையிடம் சரணடைகிறார்கள்! இம்மூவரில் இப்போதைக்கு எடப்பாடியையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் தங்கள் காலடியில் விழ பா.ச.க. ஒப்புதல் வழங்கியுள்ளது. கூப்பிட்டால் போவதற்கு கும்பிட்ட கையோடு காத்திருக்கிறார் தினகரன்!
தன்னல நோக்கங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி கட்சி மாறுவது – ஆட்சி நிர்வாகத்தில் நிலையற்ற தன்மை உருவாவதைத் தடுக்க வேண்டுமென்றே கட்சித் தாவல் தடை சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் ஆட்சியில் உள்ளவர்களின் தவறுகளையோ, மக்கள் விரோத நடவடிக்கைகளையோ எதிர்க்காமல், கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மந்தையாக இருந்துதான் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலையை கட்சித் தாவல் தடைச் சட்டம் உருவாக்கியுள்ளது.
தன்னல அரசியல் கொள்ளையர்கள், அநீதிக்காரர்கள் எந்தச் சட்டத்தையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துப் போடுவார்கள் என்பதற்கான, இன்னுமொரு சான்றாகத்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறையில் பயன்படுத்தப்படுகறது. உண்மையில் பார்க்கப்போனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பது அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 வழங்கும் கருத்துரிமைக்கு நேர் எதிரானது! இந்தச் சட்டம் சரியாகப் பயன்படவுமில்லை! எனவே, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் கடந்த ஆண்டு(2016) திசம்பரிலிருந்து அரங்கேற்றி வரும் பதவி வெறியாட்டம் - பணப்பதுக்கல் சார்ந்த அராஜகங்கள், அரசியல் என்ற பெயரில் அவை நடத்தும் ஆள் கடத்தல்கள், கோடி கோடியாகப் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கொடுத்து அவை செய்து வரும் ஊழல் நடவடிக்கைகள் – ஒழுக்கக் கேடுகள் – இவை அனைத்தையும் பார்த்து தமிழ் மக்கள் அருவருக்க வேண்டும்! இவற்றில் ஒரு குழுவை ஆதரிப்பது இன்னொன்றை எதிர்ப்பது என்பதோ, இவ்“விளையாட்டு”களில் கொஞ்சமும் சளைக்காத தி.மு.க.வை ஆதரிப்பது என்பதோ – தமிழர் நாகரிகத்துக்கும் சனநாயகத்துக்கும் புறம்பான செயல்கள்!
உண்மையான மக்கள் நேயம், அரசியல் ஒழுக்கம், மனத்தூய்மை ஆகியவற்றைக் கொண்ட அறம் சார்ந்த புதிய அரசியல் நோக்கு – தமிழரிடம் எழ வேண்டும்; புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க சிந்தனை அளவிலாவது துணிய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழ் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
Post a Comment