உடனடிச்செய்திகள்

Monday, March 12, 2018

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், இலஞ்சம் பெறும் நோக்கில் - சட்டவிரோத நடைமுறைகளின் வழியே பொது மக்களை அலைக்கழித்ததோடு, அதைத் தட்டிக் கேட்ட சக தாசில்தார் ஒருவரை – தனது அலுவலகத்தில் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ள பல்லாவரம் தாசில்தார் வில்பிரட் கிச்சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவரால் அலைக்கழிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி உடனடியாக ஆவணங்களை வழங்க வேண்டுமென்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில், தமிழ்நாடு அரசு – வருவாய்த் துறை ஆணையர் திரு. சத்தியகோபால் இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.), அவர்களையும், இணை ஆணையர் திருமதி. இலட்சுமி இ.ஆ.ப., அவர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்ட பிறகு, இன்று (12.03.2018) காலை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், மருது மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துப்பாண்டி, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தலைவர் திரு. சே. இளையராசா ஆகியோர் இதனை தெரிவித்தனர்.
குரோம்பேட்டையைச் சேர்ந்த திருமதி. ரஃபீக்கா என்ற முதியவரின் கணவர் திரு. முகமது தவ்பீக் என்பவர் கடந்த 01.06.2015 அன்று இறந்து விட்ட நிலையில், தனக்கு வாரிசுரிமைச் சான்று கோரி பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை விண்ணப்பம் அளித்தார். அரசு விதிமுறைகளின்படி பதினைந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டிய வாரிசுச் சான்றை, உரிய சான்றுகள் வைத்திருந்தும் - பல மாதங்கள் கழித்த நிலையிலும், திருமதி. ரஃபீக்கா அவர்களால் பெறமுடியவில்லை! தள்ளாத அகவையிலும், திருமதி. ரஃபீக்கா பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருந்தார்.

வாரிசுரிமைச் சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கணக்கில் கொண்டு கடந்த 2017இல் (09.08.2017), தமிழ்நாடு அரசு – வருவாய் துறை ஆணையம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், வாரிசுரிமை கோருபவர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் (Point No 5) மற்றும் பிற வாரிசுதாரர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு சுய உறுதிமொழியும் (Self Declaration) அளித்தால் போதும் (Point No 5 - 1) என்று தெளிவுபட கூறியிருந்தது. இந்த நடைமுறைதான் சென்னை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் ஒரு புது நடைமுறை செயலில் உள்ளது. அங்கு வட்டாட்சியராக உள்ள திரு. வில்பிரட் கிச்சிங் என்பவர், வாரிசுரிமை கோருபவர் மட்டுமின்றி, இறந்தவரின் அனைத்து வாரிசுதாரர்களும் ஆளுக்கொரு சுய உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று, சட்டத்தில் இல்லாத ஒரு புது நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்.

இதற்காக “இதர வாரிசுதாரர் சுய உறுதிமொழிப் படிவம்” என்ற தனி படிவத்தை, அலுவலகத்திற்கு வெளியே ஒருவர் விற்பனை செய்து கொண்டுள்ளார். அதைக் காசு கொடுத்து வாங்கி, அதை நிரப்பிக் கொண்டு போய் திரு. வில்பிரட் அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம்!

அடுத்து, அந்த படிவங்களை இதர வாரிசுதாரர்கள் அனைவரும் நேரில் வந்துதான் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார் திரு. வில்பிரட்! இதன் காரணமாக, பலர் தங்கள் வேலைகளைவிட்டு நேரில் வந்து நிற்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரிவோர், வெளியூர்களில் பணிபுரிவோர் பல இலட்சம் செலவு செய்து ஊருக்கு வந்து, திரு. வில்பிரட் அவர்கள் முன் நேர் நிற்கின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு, திரு. வில்பிரட் அலுவலக ஊழியர்கள் நேரில் வந்து நிற்க முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்க 5,000 முதல் 25,000 ரூபாய் வரை இலஞ்சப் பணம் கேட்கின்றனர். பலர் இவ்வாறு பணம் அளித்து, வாரிசுரிமைச் சான்று பெறுகின்றனர்.

இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திருமதி. ரஃபீக்கா அவர்கள், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வேளச்சேரி வட்ட வருவாய் தாசில்தார் திரு. குமரன் என்பவரிடம், தான் அலைக்கழிக்கப்படுவது குறித்து கூறினார். கடந்த 08.03.2018 அன்று, காலை 9.15 மணிக்கு, திரு. குமரன் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, திரு. ரஃப்பீகா அவர்களைத் தள்ளாத வயதிலும் இப்படி இரண்டாண்டுகளாக அலைய விடுவது சரியல்ல என்றும், உங்கள் புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைக்கு எதிரானது என்றும் திரு. வில்பிரட் அவர்களிடம் முறையிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திரு. வில்பிரட், தனது அலுவலகத்திற்கு வந்து தனது நடைமுறையையே கேள்வி எழுப்புவதா என நியாயம் கேட்டு வந்த தாசில்தார் குமரனைத் தாக்கினார். திரு. வில்பிரட்டுக்கு உதவியாக இருந்த திரு. சுரேஷ் என்பவரும் சேர்ந்து கொண்டு, திரு. குமரனை அங்கிருந்த நில அளவை இரும்புக் கம்பியால் அடித்தனர். மேலும், திரு. குமரனை அலுவலகத்திற்குள்ளேயே வைத்துப் பூட்டினர். நிகழ்வை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திரு. குமரனை மீட்டுள்ளனர்.
இப்போது, திரு. வில்பிரட் மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் 294(b) – (தவறான வார்த்தைப் பிராயோகம்), 342 (சட்ட விரோதச் சிறை வைப்பு), 324 (ஆயுதத்தால் தாக்குதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு (வழக்கு எண் 187/2018) செய்யப்பட்டுள்ளது. இதில், இன்னொரு வேடிக்கை என்னவெனில், பல்லாவரம் வட்டாட்சியர் தனது பணியை ஏன் செய்யவில்லை என்று ஞாயம் கேட்கச் சென்று – காயம்பட்டுள்ள தாசில்தார் குமரன் மீது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த (இ.த.ச. 332) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, காவல்துறை!

சட்டப்படி அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும், சட்டத்தில் இல்லாத புதிய நடைமுறைகளைக் கூறி பொது மக்களை அலைக்கழித்து வரும் பல்லாவரம் வட்டாட்சியர் திரு. வில்பிரட் மீது, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலஞ்சம் பெறும் நோக்கில் அவர் தடுத்து வைத்துள்ள வாரிசுரிமை மனுதாரர்கள் அனைவருக்கும், முறைப்படி விசாரணை செய்து உடனடியாக வாரிசுரிமைச் சான்று வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (12.03.2018) காலை 10.30 மணிக்கு, சென்னை எழிலகத்திலுள்ள தமிழ்நாடு அரசு வருவாய் ஆணையர் திரு. சத்தியகோபால் ஐ.ஏ.எஸ், அவர்களிடமும், இணை ஆணையர் திரு. இலட்சுமி ஐ.ஏ.எஸ்., அவர்களிடமும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.


செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் வெற்றிதமிழன், தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இளங்குமரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT