“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோரை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்!”
கடந்த 22.02.2018 அன்று நள்ளிரவில், விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள வெள்ளம்புதூர் கிராமத்தில் கொடூரத் தாக்குதலுக்கும், பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகி தனது இளைய மகனைப் பறிகொடுத்து தன்நினைவு இழந்து புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தாய் ஆறாயி, மகள் தனம் ஆகியோரை தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, உலகத் தமிழ்க் கழகம் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் தோழர் இரமேசு, தமிழ் தமிழர் இயக்கப் பொறுப்பாளர் தோழர் மகேசு உள்ளிட்ட தோழர்கள் நேற்று (05.03.2018) மாலை குழுவாக மருத்துவமனைக்குச் சென்று, அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
எட்டாம் படிப்பு படித்து வரும் 13 அகவைச் சிறுமி தனம், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, உடலெங்கும் 12 தையல்கள் போடும் அளவிற்கு மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் என்றும் பாராமல் நான்காம் வகுப்பு படிக்கும் 9 அகவை மாணவனான சமயனையும், ஆறாயியையும் கொலைகாரர்கள் வெட்டி வீழ்த்திய செயல், மனிதநேயமுள்ள அனைவரையும் நொறுங்கச் செய்துள்ளது.
தற்போது ஆராயியும், தனமும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர்களைப் உடனிருந்து பார்த்துக் கொள்ளும் மகன் சரத்குமாரை சந்தித்து, நம் குழுவினர் உரையாடியதுடன், மனத்தேறுதல் பெற நம்பிக்கை வார்த்தைகள் அளித்தனர். வெள்ளம்புதூர் கிராமத்தில், இதே போன்று நான்கு நிகழ்வுகள் இதற்கு முன்பு நடந்துள்ளதாக மருத்துவமனையிலிருந்த அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை குவிந்து கொண்டுள்ள வட மாநிலத்தவரால் இக்குற்றம் நடந்திருக்குமோ என்ற ஐயத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ஏனெனில், கடந்த சில நாட்களுக்கு முன்புகூட (02.03.2018), சென்னை அடையாறில், தனியாக இருந்த மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்து, சுவற்றில் தலையை மோதிக் காயப்படுத்திய வடமாநிலத்தைச் சேர்ந்த நிர்பவ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலையில் காயம்பட்ட அந்த மாணவி, சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
குற்றம் நடந்து 9 நாளாகியும் காவல்துறையினர் குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை. நேற்று மாலை, விழுப்புரம் காவல்துறையினர் குற்றவாளிகள் குறித்து பொது மக்கள் தகவல் தருவேண்டுமென அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உடனடியாக இவ்வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆறாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். ஆறாயி குடும்பத்தினர்க்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
காரைக்கால் வினோதினி, தூத்துக்குடி புனிதா, சென்னை ஆசினி என சிறுமியர்க்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இவ்வன்கொடுமைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment