தஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்பட்டது!
கடந்த 2017 மார்ச் மாதம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை - தமிழ்ப்பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு “பிரகதீஸ்வரர் ஆலயம்” என சமற்கிருதத்தில் பெயர்ப் பலகை வைத்தது. இது, தமிழின உணர்வாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது குறித்து, 18.03.2017 நாளிட்ட “தமிழக அரசியல்” வார ஏட்டில் தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் கடும் கண்டனம் தெரிவித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென பிரகதீஸ்வரர் ஆலயம் என்று சம்ஸ்கிருதப் பெயர் வைக்க என் காரணம்? தமிழ் மன்னன் கட்டிய கோயிலுக்கு ஏன் சமஸ்கிருதப் பெயரை வைக்க வேண்டும்?
பிரகதீஸ்வார் என்ற பெயர் சோழர் ஆட்சிக்கு பிறகு வந்த மராட்டியர்கள் ஆட்சியில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் எந்த இடத்திலும் பிரகதிஸ்வரர் என்ற பெயர் ஒரு இடத்தில்கூட இல்லை. சிலர் மட்டும்தான் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைப்பார்கள்.
தமிழக மக்கள் அனைவரும் தஞ்சை பெரிய கோவில் என்றும் பெருவுடையார் ஆலயம் என்றும்தான் அழைத்து வந்தோம். அப்படி இருக்கும்போது, திடீரென சமஸ்கிருத பெயரை தாங்கிய பலகையை வைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் செயல்பாடா இல்லை திறமையற்ற தமிழக அரசின் வெளிப்பாடா என்பது ஒன்றும் புரியவில்லை.
அதிகாரிகளிடம் கேட்டால், அனைவரும் புரிந்து கொள்வதற்காக இப்படி மாற்றி இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், காசியில் இருக்கும் விஸ்வநாதர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து பலர் செல்கிறார்கள். அதனால் காசி விஸ்வநாதரை காசி பேரருவான் கோயில் என்று மாற்றி விடுவார்களா? இல்லை! அனைவரும் புரிந்து கொள்ள தஞ்சை கோயிலில் என்ன சந்தை வியாபாரமா நடக்கிறதா?
இவையெல்லாம் இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பின் ஒரு அங்கம்தான்! தமிழர்களின் புகழையும் வரலாற்றையும் மறைக்க வேண்டும் மழுங்கடிக்க வேண்டும் என்பதுதான்!
தமிழகத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் போலவும், தஞ்சை பெரிய கோவிலைப் போலவும் உயர்ந்த கோபுரம் கொண்ட கட்டிட கலையை பறைசாற்றும் உதாரணத்தை வடக்கில் ஒன்று சொல்ல முடியுமா? இது போன்ற சிறந்த தமிழர்களை - தமிழ்க் கலைகளை அழித்து நாம் என் வேண்டுமானாலும் செய்யலாம் - எதை வேண்டுமானாலும் செய்யலாம் - எதையும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள், கேட்க ஆளுமில்லை என்ற நினைப்புதான்!
ஏற்கெனவே தமிழ் மன்னன் கட்டிய கோயிலுக்க மராத்திய வம்சத்தைச் சேர்ந்த ராஜா பான்ஸ்லேவை அறங்காவலராக நியமித்து, அவர் பலவற்றை ஆக்கிரமித்து சுருட்டி வருகிறார். அவர் நியமனத்த எதிர்த்துப் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இப்போது இது வேறு!
இந்தப் பலகை வைத்ததை கடுமையாக எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை என அனைவருக்கும் எதிர்ப்பு மனு முறையாகக் கொடுத்து இருக்கிறோம். அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறொம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள்தான் பொறுத்து இருப்போம். அதற்கு மேல் பொறுக்க மாட்டோம். அந்தப் பலகை இருந்த இடம் தெரியாமல் போகும்!”
என அப்பேட்டையில் தோழர் பெ. மணியரசன் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது தஞ்சை பெரிய கோவில் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சமற்கிருதப் பெயர்ப் பலகை நீக்கப்பட்டு, “தஞ்சை பெரிய கோவில்” என்று தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வரலாறு - கல்வெட்டுச் சான்றுகளின்படி அதை “தஞ்சை பெருவுடையார் கோவில்” என்றே வைக்க வேண்டுமென அரசிடம் மீண்டும் தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்தவுள்ளோம்.
இதற்காகக் குரல் கொடுத்த தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நெஞ்சு நிறைந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது!
தமிழ் மண்ணில், சமற்கிருத ஆதிக்கத்திற்கு இடமில்லை என முழங்குவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Post a Comment