“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!
நீட் - “தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு” (NEET) முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என, சென்னையில் இன்று (05.03.2018) காலை “உலகத் தமிழ் அமைப்பு” நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
“இந்திய அரசால் திணிக்கப்படும் "நீட்" தேர்வானது வருங்காலத் தமிழர் தலைமுறையினருக்கு மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும். எனவே, தமிழ்நாட்டுச் சட்டமன்றம் பிப்ரவரி, 01 2017- அன்று ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டச் சட்டமுன்வரைவுகளைச் சட்டமாக்க ஆவனச் செய்ய வேண்டும்” என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்புக்கு, உலகத் தமிழ் அமைப்பு (வட அமெரிக்கா) தலைவர் முனைவர் வை.க. தேவ் அவர்கள் தலைமை தாங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் ஜி. ஆர். இரவீந்திரநாத், திராவிடர் கழக வழக்குரைஞர் அருள்மொழி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி, தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தன்னாட்சித் தமிழகம் நெறியாளர் திரு. ஆழி செந்தில்நாதன், தமிழர் பன்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. இராச்குமார் பழனிசாமி, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் தோழர் ஆளூர் சானவாசு, ம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் திரு. அந்தரிதாஸ், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வினோத் களிகை, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தோழர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திரைப்பட இயக்குநர் திரு. வ. கவுதமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
#TNagainstNEET
#ApproveTNBillToExemptNEET
#NoNEETforTamilNadu
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment