உடனடிச்செய்திகள்

Thursday, May 31, 2018

“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்!

“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
1980-களின் பிற்பகுதியில் சிதம்பரம் பகுதியில் தலைத்தூக்கியிருந்த தீண்டாமை கொடுமைகளை ஒழிக்க நடந்த களப்போராட்டங்களில் முன்னின்றவரும், தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினருமான தோழர் பெ. சௌந்தரராசன் அவர்கள் 29.05.2018 அன்று காலமானார். அவருக்கு அகவை 70.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தீவிர செயல்பாட்டாளாராகவும், தமிழக உழவர் முன்னணி அமைப்பின் ஆதரவாகவும் விளங்கிய தோழர் பெ. சௌந்தர்ராசன் இல்லாத போராட்டங்களும் கூட்டங்களும் இல்லை என்றுச் சொல்லிவிடும் அளவிற்கு ஈடுபாடு மிகுந்தவர்.
 
கடலூர் மாவட்டம் - தெற்கு மாங்குடியில் இவர் முன்னெடுத்த இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களின் உச்சக் கட்டத்தில், இவரது வீடு சாதி ஆதிக்கவாதிகளால் கொளுத்தப்பட்டது. கடை சூறையாடப்பட்டது. இவரது மனைவி குமாரி மற்றும் மகள் ஜெயந்தி இரவு முழுவதும் முள்காட்டு புதரில் மறைந்திருந்து தப்பிப் பிழைத்தனர். தொடர் சாதித் தீண்டாமை ஒழிப்பு பணிகளால் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச் சூடு வரை சென்றது.
 
அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் இருந்த போதும் சாதி ஒழிப்பு களத்தில் சளைக்காமல் முன் நின்றவர் தோழர் பெ. சௌந்தரராசன்.
 
1991 சூலை மாதம் 17ஆம் நாள், நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தும் போராட்டத்தை தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்தபோது, அவருடன் தோழர் பெ. சௌந்தரராசன் அவர்களும் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறந்த பாடகராகவும் விளங்கிய தோழர் பெ. சௌந்தர்ராசன், கீழ்வெண்மணிப் சாதியப் படுகொலை, மார்வாடி ஆதிக்க எதிர்ப்பு, தேர்தல் சந்தர்ப்பவாதங்கள், வீராணம் உழவர் உரிமை, காவிரி உரிமை போன்ற பல பொருள்கள் குறித்தும், திரையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதி வெளியிட்ட பாடல்களையும் தமிழ்த் தேசிய பேரியக்க (த.தே.பொ.க) மேடைகளில் நெஞ்சுருகப் பாடியவர்.
 
தோழர் சௌந்தர்ராசன் இருக்கும் இடம், எப்போதும் அரசியல் உரையாடல்களும் சிரிப்பும் கலகலப்பும் நிறைந்ததாகவே இருக்கும்.
 
உடல்நலக் குறைவு, குடும்பச் சூழல் காரணமாக அமைப்பு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோழர் சௌந்தர்ராசன், “தமிழர்களுக்கே வேலைகொடு” என வலியுறுத்தி, 2016இல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் திருச்சியில் நடத்திய தென்னக மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்.
 
சுவரொட்டி ஒட்டுதல், பதாகை கட்டுதல் உள்ளிட்டு கைது - சிறை வரை சளைக்காமல் இருபது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் தம்மை அர்பணித்துக் கொண்ட தமிழ்த்தேசியப் போராளி தோழர் பெ. சௌந்தர்ராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது! அவரை இழந்து வாடும் உறவினர்க்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT