ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும் காவல்துறையினர் அவரை நடத்திய விதமும் கடுங்கண்டனத்திற்குரியவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லவும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவும் வந்தவரை 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்து, இரவோடிரவாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கொண்டு சென்று 26.05.2018 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தி, அங்கிருந்து சென்னை புழல் சிறையில் கொண்டுபோய் அடைத்துள்ளார்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை கட்டண வசூல் சாவடியைத் தாக்கியதாக 01.04.2018 அன்று திரு. வேல்முருகன் உள்ளிட்ட 11 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததன் மர்மம் என்ன? 01.04.2018லிருந்தே வேல்முருகன் தலைமறைவாக இருந்தாரா? இவ்வழக்கில் ஏற்கெனவே வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பத்து பேர் பலநாள் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் வந்துள்ளார்கள்.
அவர் கட்சியின் பெயருக்கேற்ப எத்தனையோ வாழ்வுரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டும், அவற்றில் பங்கேற்றுக் கொண்டும்தான் இருந்தார். அடுத்தடுத்து மக்களுக்கான சனநாயகப் போராட்டங்களை அவர் நடத்தியதுதான் தமிழ்நாடு அரசின் பார்வையில் குற்றமா?
உளுந்தூர்பேட்டை வழக்கிற்காகக் காவல்துறை கைது செய்ய விரும்பியிருந்தால் எப்போதோ அவரைக் கைது செய்திருக்கலாம். தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்ததில் ஓர் உள்நோக்கம் இருக்கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலரை சுட்டுக்கொல்ல வேண்டும், பலரைப் படுகாயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட மனித அழிப்பும் மனித வதையும்தான் தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு! அந்த மனித அழிப்புக்குள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் “கதி இதுதான்” என்று காட்டி மக்களையும், மக்கள் போராளிகளையும் அச்சுறுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம் என்று புரிகிறது.
அண்மைக்காலமாக இவ்வாறான தேர்ந்தெடுக்கப்பட்ட அடக்குமுறையை எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு கட்டவிழ்த்துவிட்டிருப்பதைத் தமிழினப் போராளிகளும், தமிழ் மக்களும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். நான் ஏற்கெனவே ஒரு கருத்தை எடப்பாடி – ஓ.பி.எஸ். அரசு பற்றி சொல்லி வருகிறேன். இந்த அரசு பார்வைக்கு வலுவற்றதாகவும், உறுதியற்றதாகவும் தோற்றம் தருகிறது. உண்மையில் இது ஒரு தற்காலிக அரசுதான்! ஆனால் ஒடுக்குமுறையில் ஒரு எதேச்சாதிகார அரசைப் போலவே செயல்படுகிறது என்பதே அது!
காவிரிப் போராட்டச் சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவிர்க்க வலியுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில் கண்ணாடி இழைத் தடியால் தாக்கிப் பலரைப் படுகாயப்படுத்தியது இதே அரசுதான்! அதில் ஒரு காவலர் தாக்கப்பட்டதை சாக்காக வைத்து, நாம் தமிழர் கட்சியினரை வீடு வீடாகத் தேடி, கைது செய்து காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதும் இவர்கள்தான்!
அடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சனநாயக வழியில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ. கௌதமன் அவர்களையும் தோழர்களையும் புழல் சிறையில் அடைத்தார்கள். இப்போது, வேல்முருகன் அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி உள்ளார்கள். மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற பல்வேறு அமைப்புத் தோழர்களையும் ஆங்காங்கு கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், இந்த அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை. எசமானர்களின் கையாட்கள் போல் செயல்படும் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணியினர் தாம் மக்களிடமிருந்து மேலும் மேலும் அந்நியப்படுவார்கள்.
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களின் தமிழினத் துரோக அரசியலையும், அடக்குமுறையையும் கைவிட வேண்டும் என்றும், திரு. வேல்முருகன் அவர்களையும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
திரு. வேல்முருகன் கைதைக் கண்டித்து, நாளை (29.05.2018) மாலை 3 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Post a Comment