உடனடிச்செய்திகள்

Monday, September 10, 2018

தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் விடுதலை - தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்று தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (09.09.2018) முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பது பாராட்டிற்குரிய செயல்!
 
தமிழ்நாடு ஆளுநர் சட்ட வல்லுநர் கருத்துகளைக் கேட்பது ஒரு பக்கம்; இருந்தாலும், காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை பதினான்கு ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த நிலையில், அன்றைய மகாராட்டிர காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது என்ற முன்னெடுத்துக்காட்டை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்தவர்!
 
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு – 161 இன்படி, சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்பதை தொடர்ச்சியாக பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.
 
மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில், 1981இல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆயம், இரண்டு செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்று, மாநில அரசுக்கு 161இன்படி உள்ள அதிகாரம் தங்குதடையற்றது, அது நடுவண் அரசின் அனுமதிக்கோ ஆய்வுக்கோ உட்பட்டதல்ல என்பது. இரண்டு, அந்த 161-ஐப் பயன்படுத்தி ஒரு தடவை தண்டனைக் குறைப்பு செய்தால், இரண்டாம் தடவை தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்யக்கூடாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து, அரசமைப்புச் சட்டம் ஒரு தடவைதான் தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டுமென வரம்பு விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. மாரூராம் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனைக் குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரமிருக்கிறது என்று தீர்ப்பளித்தது.
 
இப்பொழுது பேரறிவாளன் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை நீக்கப்பட்ட நிலையில், மறுபடியும் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியுமா என்றால், முடியும் என்பதைத்தான் மேற்படி கிருஷ்ணய்யர் தீர்ப்பு உறுதி செய்கிறது.
 
2014இல், அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு மாநில அரசுக்கு 161இன் கீழ் உள்ள அதிகாரத்தை பாதிக்கும் வகையில் எந்தக் கருத்தும் கூறவில்லை; தீர்ப்பும் வழங்கவில்லை! நீதிபதி சதாசிவம் அமர்வின் பரிந்துரைப்படி இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கலிபுல்லா தலைமையிலான அரசமைப்பு ஆயம் 2015 திசம்பர் 2இல் வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடுவண் அரசின் காவல் துறை போட்ட வழக்கில் மாநில அரசு தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்ய வேண்டுமானால் நடுவண் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனக் கூறியது. அதேவேளை, மாநில அரசுக்கு தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலை செய்யும் அதிகாரம் 161இன்கீழ் உள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்று கூறியது.
 
இப்பொழுது, நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு, பேரறிவாளன் மனு மீது அளித்த தீர்ப்பில், மாநில அரசு 161இன் கீழ் முடிவெடுக்க (அதாவது விடுதலை செய்ய) தடை ஏதுமில்லை என்று 07.09.2018 அன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மேற்படி ஏழு தமிழர்கள் மீதான குற்றச்சாட்டு ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்பது இவ்வழக்கில் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய கே.டி. தாமஸ் அவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம்.
 
தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின் மீது ஒன்றிய அரசின் கருத்துக் கேட்க வேண்டிய நிலை இல்லை! ஆளுநர் இந்திய அரசின் கருத்துக்கேட்பு நடைமுறையில் இறங்கக் கூடாது.
 
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள கோபால் கோட்சே விடுதலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் கணக்கில் எடுத்தும், தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், இராசீவ் கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை எந்தக் காலத்தாழ்வுமின்றி உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT