உடனடிச்செய்திகள்

Saturday, September 22, 2018

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி நேற்று (21.09.2018), அவரது நினைவிடத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
 
ஈகி வெங்கடாசலம் அவர்கள், தஞ்சை வட்டப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் தனிச்சிறப்பானவை! அவர் 1977 செப்டம்பர் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.
 
தீண்டாமை சாதி ஆதிக்க ஒழிப்பு - உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் - அரசியலில் உள்ள ஊழலை எதிர்த்துச் சமர்புரிவது - காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடுவது என நான்கு தளங்களில்போ பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் ஈகி வெங்கடாசலம் ஆவார்.
 
1970 - 71 ஆம் ஆண்டுகளில் உழவுத் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது. நடவு நடும் பெண்களுக்கு மூன்று ரூபாய் கூலி, உழவு உழும் ஆண்களுக்கு 4 ரூபாய் கூலி. கூலி உயர்வு கேட்டு உழவுத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார் ந.வெ. அவரது நினைவுகளைப் போற்றி, நன்றி செலுத்துவது மக்கள் கடமையாகும்!
 
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில், நேற்று (21.09.2018) தஞ்சை செங்கிப்பட்டியிலிருந்து இரு சக்கர ஊர்தியில் இராயமுண்டாம்பட்டியில் அமைந்துள்ள ஈகி ந.வெ. அவர்களின் நினைவிடம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அங்கு அவரது நினைவிடத்தில், தோழர் கி.வெ. அவர்கள் மலர் வளையம் வைத்து ஈகி வெங்கடாலசம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின், ஈகி வெங்கடாலசம் அவர்களின் மனைவி திருமதி. லீலாவதி அவர்களை அவர்களது இல்லத்திற்குச் சென்று தோழர் கி.வெ. அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.
 
நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், தோழர்கள் ரெ. கருணாநிதி, காமராசு, மணிகண்டன், ஆரோன், இரா.சு. முனியாண்டி, திருச்சி இனியன், தேவதாசு உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று, ஈகி வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT