உடனடிச்செய்திகள்

Monday, September 17, 2018

தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
 
கடந்த 15.09.2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் – மெய்யபுரம் கிராமத்தில் பிள்ளையார் ஊர்வலத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கட்டளைக்குப் புறம்பாக, தடைசெய்யப்பட்ட தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினர் கூறியபோது, அங்கிருந்த பா.ச.க. செயலாளர் எச். இராசா உயர்நீதிமன்றத்தை மிகவும் கேவலமான சொற்களால் கொச்சைப்படுத்தி பேசியது காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது.
 
காவல்துறையினர் அனைவரும் கிறித்துவர்களிடமும் முசுலிம்களிடமும் கையூட்டு (இலஞ்சம்) வாங்குபவர்கள், நான் உங்களுக்கு இலஞ்சம் தருகிறேன் கேளுங்கள் என்று இழிவுபடுத்திப் பேசிவிட்டு, காவல்துறையினர் கட்டளையை மீறி, தடை செய்யப்பட்ட தெருவில் பிள்ளையார் ஊர்வலத்தை அழைத்துச் சென்றுள்ளார்.
 
எச். இராசாவின் இந்தக் குற்றச்செயல்களுக்கு காணொலிக் காட்சிகள் சாட்சியமாக உள்ளன. காவல்துறையினரிடமும் இக்காணொலிப் பதிவு இருக்கும்.
 
அன்று இரவே எச். இராசா தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்று நாகரிகச் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், எச். இராசா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அமைச்சர் செயகுமார், சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆராய்வோம் என்று 16.09.2018 அன்று ஊடகங்களிடம் கூறியது பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மக்கள் மீது அக்கறையுள்ள தமிழ்நாட்டுத் தலைவர்கள் தூத்துக்குடி சென்றால் கைது, எட்டுவழிச் சாலை பகுதியில் உழவர்களைச் சந்தித்தால் கைது, பொதுக்கூட்டம் – ஊர்வலம் – ஆர்ப்பாட்டம் அனைத்துக்கும் தடை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளைப் பறித்து, எதேச்சாதிகாரத்தை செயல்படுத்தி வருகிறது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு! ஆனால், எச். இராசா காவல்துறை அதிகாரிகளைக் கையால் தள்ளிவிட்டு, சொல்லால் குத்திக் கிழித்துவிட்டு, உயர் நீதிமன்றத்தையும் கீழ்த்தரமாக இழிவுபடுத்திவிட்டு, தடை செய்யப்பட்ட பாதையில் ஊர்வலம் நடத்திய குற்றச்செயல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதில் சட்ட வல்லுநர்களைக் கலந்து “ஆராய்ச்சி” செய்ய வேண்டிய அளவிற்கு சட்டச்சிக்கல் உள்ளதா அல்லது வர்ணாசிரம மேலாதிக்கச் சிக்கல் இருக்கிறதா அல்லது எடப்பாடி அரசின் இருப்புக்கான சிக்கல் இருக்கிறதா?
 
உயர் நீதிமன்றம் தானே முன்வந்து. எச். இராசா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அமைச்சர் செயகுமார் கூறினார். சிக்கலை உயர் நீதிமன்றத்தின் பக்கம் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. அரசு கருதுவது தெரிகிறது.
 
எடப்பாடி அரசு தமிழ் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்து பா.ச.க. தலைமைக்குத் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வந்தது. அடுத்தகட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பை எச். இராசாவின் காலடியில் வீழ்த்தியும், தனது சொந்தக் காவல்துறையின் சட்டப்படியான அதிகாரத்தையும் தன்மானத்தையும் எச். இராசாவின் ஆரியத்துவாவுக்குக் கீழ்ப்படுத்தியும் தனது விசுவாசத்தை வெளிக் காட்டியுள்ளது.
 
கடைசியாக சில பிரிவுகளில் எச். இராசா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இது “சட்ட வல்லுநர்களின்” ஆலோசனைப்படி நடந்திருக்கும். ஆனால், “இலஞ்சம் கொடுக்கிறேன், வாங்கிக் கொள்” என்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய குற்றத்துக்கு எச். இராசா மீது குற்றப்பிரிவு போடப்படவில்லை!
 
உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் எச். இராசா பேசியது போல் யார் பேசினாலும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஒரு வாதத்திற்காக இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். தமிழின உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் போராடும் தலைவர்கள் எச். இராசா போல் பேசியிருந்தால், தடையை மீறியிருந்தால் எடப்பாடி அரசு என்னெ்னன செய்திருக்கும்!
 
ஏற்கெனவே பா.ச.க.வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் மீது நீதிமன்றப் பிடி ஆணை இருந்தும், அவரைத் தளைப்படுத்த மறுத்தது எடப்பாடி அரசு!
 
எடப்பாடி ஆட்சி காட்டும் விசுவாசத்தினால் துணிச்சல் பெற்ற ஆரியத்துவா – வர்ணாசிரம வகுப்புவாதிகள் மேலும் துணிச்சல் பெற்று, இன்று பெரியார் சிலையை சென்னையிலும் திருப்பூரிலும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பெரியார் மீது தமிழ்த்தேசியர்கள் வைக்கும் திறனாய்வு நமது உள் விவகாரம்! ஆரியத்துவா வர்ணாசிரம வகுப்புவாதிகள் பெரியாரை இழிவுபடுத்துவதை தமிழ்த்தேசியர்கள் அனுமதிக்க மாட்டோம்!
 
வர்ணாசிரம வகுப்புவாதிகள் தமிழ்நாட்டைக் கலவர மண்ணாக மாற்றி, குருதி குடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. இந்து மதத்தில் உள்ள தமிழர்கள் இந்த வர்ணாசிரம வகுப்புவாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகக் கூடாது.
 
தமிழை அர்ச்சனை மொழியாக்கிடத் தடை போடுகின்ற – அனைத்துச் சாதித் தமிழர்களும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கின்ற – சிவன் கோவில் கருவறை முன் தேவாரம், திருவாசகம் பாடுவதை எதிர்க்கின்ற - ஈழத்தின் இந்துக் கோயில்கள் சிங்கள பௌத்த வெறியர்களால் இடிக்கப்படும்போதெல்லாம் கண்டிக்காத இந்த வர்ணாசிரமவாதிகளின் தூண்டுதலுக்கு தமிழ் மக்கள் பலியாகக் கூடாது!
 
பா.ச.க.வுக்கு விசுவாசம் காட்டுவது மட்டுமே தனது ஆட்சிக்கான பாதுகாப்பு என்று எடப்பாடி அமைச்சரவை கருதினால், பா.ச.க.வினர் திட்டமிடும் பெரும் கலகத்தில் உங்கள் ஆட்சி வீழ்ந்துவிடும்; தமிழர்கள் பேரழிவிற்கு உள்ளாவார்கள் என்ற உண்மையை உணர்ந்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் எச். இராசாவை சிறையிலடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. திட்டமிடும் கலகத்தைத் தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT