மாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
முனைவர் பட்ட ஆய்வை கனடாவில் முடித்துவிட்டு, சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பிய மாணவி சோபியா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த வானூர்தியில் பயணம் செய்திருக்கிறார். அதே வானூர்தியில் பயணம் செய்த பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்களைப் பார்த்ததும், மனம் கொதித்து “பாசிச பா.ச.க. ஆட்சி ஒழிக!” என்று முழக்கமிட்டிருக்கிறார்.
இதற்காக வானூர்தியிலிருந்து இறங்கி கீழே வந்தவுடன் வரவேற்பறையில் அம்மாணவியிடம் சண்டைக்குப் போயிருக்கிறார் தமிழிசை! அந்தக் காட்சி காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது. காவல்துறையினரும் மற்றவர்களும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், தடுத்தும் தமிழிசை அவர்கள், நிற்காமல் மேலும் மேலும் அந்த மாணவியை நோக்கி வலிந்து செல்கிறார். ஆனால், மற்றவர்கள் அவரை தடுத்து விட்டார்கள். அப்போது, அவர் காவல்துறையினரிடம் தன்னை தாக்க வந்ததாகவும், தன் உயிருக்கே ஆபத்து என்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் புகார் கொடுக்கிறார். இந்த மாணவிக்குப் பின்னால் ஏதோ ஒரு “தீவிரவாத” அமைப்பு இருக்கிறது என்றும் ஆதாரமில்லாமல் கூறுகிறார்.
இந்தப் பொய்ப் புகாரை ஏற்று காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு – 290 (பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்யும் வகையில் பேசுதல்), 505 (1)(b) – காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் 75 (1)(c) (மாநகரக் காவல் சட்டம்) – அரசதிகாரியின் கேள்விக்கு விடை கூறாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சோபியாவை சிறையில் அடைத்துள்ளார்கள். இவற்றில் 505 - பிணை மறுப்புப் பிரிவாகும்.
அதேவேளை, அம்மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை இழிவுபடுத்திப் பேசி அவமானப்படுத்தியதுடன் தாக்க முயன்ற பா.ச.க.வினர் மீது, அம்மாணவியின் தந்தை காவல்துறையிடம் கொடுத்த புகாரை பதிவு செய்யாதது கண்டனத்திற்குரியது.
விமானத்தில் பயணம் செய்யும்போது, ஓர் அரசியல் தலைவருக்கு எதிராக முழக்கம் போட வேண்டியதில்லை என்பது சரிதான்! ஆனால், தூத்துக்குடியில் 13 உயிர்கள் பலியாவதற்குக் காரணமான பா.ச.க. ஆட்சி, அதன் மாநிலத் தலைவர் தமிழிசை என்ற முறையில், அந்த மண்ணின் மகளுக்கு அடக்க முடியாத சீற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
பா.ச.க.வின் பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளின் உச்சமாக மனித உரிமை இயக்கங்களின் தலைவர்களாக விளங்கும் மக்கள் செல்வாக்கு பெற்ற பாவலர் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை – உலகெங்கும் வாழும் மனித உரிமை ஆர்வலர்களின் நெஞ்சத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்துள்ளது.
இச்சூழ்நிலையில், அம்மாணவி தமிழிசையைப் பார்த்தவுடன் பொங்கியெழுந்த ஆவேசத்தில் முழக்கமிட்டிருக்கலாம். காந்தியத்தில் நம்பிக்கையும், அரசியலில் பக்குவமும் தமிழிசைக்கு இருந்திருந்தால், வானூர்தியை விட்டு இறங்கியவுடன் அப்பெண்ணை அன்பாக அருகே அழைத்து, “என்னம்மா உனக்குக் கோபம்?” என்று கேட்டு, அம்மாணவியை ஆற்றுப் படுத்துவதற்கு முயன்றிருக்கலாம்.
இரண்டாவதாக பா.ச.க.வின் எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பின் அடையாளம் என்று இதைப் புரிந்து கொண்டு, தன் கட்சியின் தலைமைக்கு இதை எடுத்துரைத்து, தன் கட்சி தற்சோதனை செய்து கொள்ள கேட்டுக் கொண்டிருக்கலாம்!
அந்த அறவழியை விடுத்து, அதிகார வெறியோடு அந்த இளம்பெண் மீது பாய்வதும், அவர் மீது பொய் வழக்குப் போட வைப்பதும் நாகரிகச் சமூகம் செரித்துக் கொள்ள முடியாத செயலாகும்!
கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொய்ப் புகாரை பதிவு செய்து, அப்பெண்ணை சிறையில் அடைக்க காவல்துறைக்கு ஆணையிட்ட மேலதிகாரி யார், அரசியல் தலைவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழிசை சௌந்தரராசன் அவர்களுடைய அதிகார ஆணவத்தையும், பழிவாங்கும் சினத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#பாசிசபாஜகஒழிக
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக
#IsupportSophia
#ReleaseSophia
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக
#IsupportSophia
#ReleaseSophia
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment