உடனடிச்செய்திகள்

Friday, June 5, 2020

வேளாண் கொள்முதலும் இல்லை ரேசன் கடையும் இல்லை என்ற அபாய நிலையை இந்திய அரசின் சட்டங்கள் ஏற்படுத்தி விடும்! கி. வெங்கட்ராமன் கண்டனம்!


வேளாண் கொள்முதலும் இல்லை
ரேசன் கடையும் இல்லை என்ற அபாய நிலையை
இந்திய அரசின் சட்டங்கள் ஏற்படுத்தி விடும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


இந்திய அரசு வேளாண்மை தொடர்பாக நேற்று (03.06.2020) அறிவித்துள்ள மூன்று அவசர சட்டங்களும் வேளாண்மையை சீர்குலைத்துவிடும். ரேசன் கடைகளை செயலற்றதாக்கி விடும்.

“இன்றியமையாப் பொருட்கள்” என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்கி இன்றியமையாப் பொருட்கள் – திருத்த அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அடுத்து, “வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் – 2020” என்ற சட்டத்தின் வழியாக, தனியார் பெருவணிக நிறுவனங்களை வேளாண் சந்தையில் கால் பதிக்க அனுமதித்தும், இந்தியா முழுவதையும் ஒற்றை வேளாண் சந்தையாக மாற்றியும் அறிவித்திருக்கிறது.

மூன்றாவதாக, “உழவர்கள் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம்” என்ற பெயரில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.

அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதுபோல், வேளாண்மையிலும் வேளாண் விளை பொருட்கள் சந்தையிலும் பெருங்குழுமங்களும் அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடும் வருவதற்கு இது பயன்படுமே தவிர, உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றும் விளைவையே இச்சட்டங்கள் ஏற்படுத்தும்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் உழவர்களின் சராசரி நிலவுடைமை இரண்டரை ஏக்கர்தான். குறிப்பாகத் தமிழ்நாட்டில், 50 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் உழவர்கள் தங்கள் விளை பொருட்களை பேரம் பேசி இலாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுவது, மாயமான் வேட்டையாகும்.

பெருங்குழுமங்களிடம் பேரம் பேசி, தங்களுக்குச் சாதகமான விலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தை வலுவற்றவர்களாக உழவர்கள் இருப்பது, ஊரறிந்த உண்மையாகும்.

கடன் வாங்கி சாகுபடி செய்யும் உழவர்கள்தான் பெரும்பாலோர். இன்னொருபுறம், விளைவித்த விளைபொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக் கொள்ளும் அளவுக்கு, சேமிப்புக் கிடங்கு வசதிகள் கிட்டத்தட்ட எந்த உழவர்களிடமும் இல்லை!

நிலத்திலிருந்து தங்களுடைய விளை பொருட்களைத் தூய்மைப்படுத்தி, மூட்டை கட்டி சேமித்து வைப்பதற்கு தேவையான ஆள் கூலி கொடுப்பதற்குக் கூட வழியற்ற நிலையில்தான், மிகப் பெரும்பாலான உழவர்கள் இருக்கிறார்கள். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி என்பது இன்னொருபுறம்!

இவற்றுக்கிடையே சிக்கியிருக்கும் உழவர்கள், வணிகக் குழுமங்கள் சொல்கிற விலைக்குத் தங்கள் விளை பொருட்களை விற்கும் நிர்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். இதனால்தான், வேளாண் விளை பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டுமென்றும், அரசே கொள்முதல் செய்து கொள்ள வேண்டுமென்றும் உழவர்களின் கோரிக்கை எழுந்தது. அதன் விளைவாகத்தான், அரசுக் கொள்முதலும், ஆதார விலை அறிவிப்பும் நடந்து வருகின்றன.

உண்மையில், கொள்முதல் பொறுப்பிலிருந்தும் வேளாண் விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலையை தீர்மானிக்கும் கடமையிலிருந்தும் அரசு விலகிக் கொள்ள விரைகிறது என்பதையே பா.ச.க. அரசின் அறிவிப்பு காட்டுகிறது.

வேளாண்மைச் சந்தையை பெரிதும் தனியாருக்கு விட்டுவிட்ட பிறகு, மக்களுக்கான ரேசன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உணவு எண்ணெய் போன்றவை கிடைக்கப் போவதில்லை. ரேசன் கடைகளும் படிப்படியாக மூடப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.

2002ஆம் ஆண்டு, காங்கிரசு ஆட்சியிலிருந்தே இதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்திய அரசு அமர்த்திய சாந்தக்குமார் குழு 2015இல் கொடுத்த அறிக்கை இந்திய உணவுக் கழகத்தைப் படிப்படியாகக் கலைத்துவிட வலியுறுத்தியது. உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்திய அரசுக்கு இதே அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. அதற்கிசைவாக, இந்திய அரசு இப்போது முடிவெடுத்திருக்கிறது.

பெரும் வணிகக் குழுமங்களின் சந்தைச் சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளும் உழவர்கள், இலாபமான தொழிலாக வேளாண்மையை நடத்த முடியாமல் நிலத்திலிருந்து வெளியேறும் அவலம் நேரும். மறுபுறம், ரேசன் கடைகள் வழியாக இன்றியமையா உணவுப் பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொள்ளும் ஏழை எளிய மக்களின் உரிமையும் பறிக்கப்படும்.

இந்திய அரசுடன் போட்டி போடும் வகையில், தமிழ்நாடு அரசு 2019 அக்டோபர் இறுதியிலேயே “ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்” என்ற ஒன்றைப் பிறப்பித்துவிட்டது. அதற்கிசைவான வகையில், இப்போது 02.06.2020 அன்று “தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) சட்டத்திலும்” திருத்தம் செய்து அறிவித்திருக்கிறது.

உழவர்களையும், ஏழை எளிய நுகர்வோரையும் ஒருசேரத் தாக்கும் இந்த அவசரச் சட்டங்களை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இந்திய – தமிழ்நாடு அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT