உடனடிச்செய்திகள்

Friday, June 5, 2020

வர்ணாசிரம “பாரதம்” உருவாக்கிட “இந்தியா” பெயரை நீக்கும் கோரிக்கை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது சட்ட விரோதம்! பெ.மணியரசன் அறிக்கை!


வர்ணாசிரம “பாரதம்” உருவாக்கிட “இந்தியா” பெயரை
நீக்கும் கோரிக்கை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது சட்ட விரோதம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
இந்தியாவை “இந்தியா” என்று அழைக்க கூடாது, “பாரத்” என்று மட்டுமே அழைக்க வேண்டும், “இந்துஸ்தான்” என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆணை இடக்கோரி நமக என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை 03.06.2020 அன்று விசாரித்தத் தலைமை நீதிபதி சரத் ஏ. பொப்டே, நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, நீதிபதி ரிசிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு அளித்த ஆணை பெரும் அதிர்ச்சி தருகிறது.

“இந்தியா” என்ற பெயரை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குவது குறித்து இந்திய அரசின் அமைச்சகங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம், குறிப்பாக உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அந்த அமைச்சகங்களுக்கு இந்த மனுவை அனுப்புமாறு மூன்று நீதிபதிகளும் ஆணை இட்டுள்ளார்கள்.

இந்தியாவின் பெயர் என்பது அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு ஆகும். இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளை மாற்ற இந்திய நாடாளுமன்றத்திற்கே அதிகாரமில்லை என்று ஏற்கெனவே பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அரசமைப்புப் பேரவையால் (அரசியல் நிர்ணயசபையால்) உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதுதான் உச்சநீதிமன்றப் பணியே தவிர, அதைத் திருத்தவோ, மாற்றவோ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை நீதிபதியாக இருந்த போது, 2016-இல் இதே போல் இந்தியாவின் பெயரை “பாரத்” என்று மாற்ற வேண்டும் என்று மனு வந்தது. தலைமை நீதிபதி தாக்குர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 1-வது உறுப்பு “இந்தியா அதாவது பாரதம், அரசுகளின் ஒன்றியம்” என்று கூறுகிறது. அதிலேயே இரு பெயர்களும் இருக்கின்றன. அவரவர் விருப்பத்திற்கேற்ப இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தார். இப்போதுள்ள தலைமை நீதிபதி பொப்டே, இந்தியா என்ற பெயரை நீக்குவதற்கு – அதுவும் ஓர் அமைச்சகம் முடிவு செய்து நீக்குவதற்கு வாய்ப்பளித்து ஆணை இட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும்.

வெள்ளைக்காரக் காலனி ஆட்சி இங்கு உருவாவதற்கு முன் இந்தியா என்ற பெயரிலோ, “பாரத்” அல்லது “இந்துஸ்தான்” என்ற பெயரிலோ இன்றைய வடிவத்தில் ஒரு நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி, “பிரித்தானியப் பீரங்கிகளால் உருவாக்கப்பட்டது இந்தியா” என்று ஒரு முறை கூறினார்.

காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் “இந்து மதம் என்று பெயர் கொடுத்து நம் சமயங்களை ஒருங்கிணைத்ததும், பல தேசங்களை இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைத்ததும் வெள்ளைக்காரன் செய்த நன்மைகள்”, என்று கூறியுள்ளார்.(தெய்வத்தின் குரல், முதல் பாகம், பக்கம் 247)

வெள்ளைக்காரன் தந்த பெயரில் இந்துத்துவா என்று மதவாதக் கொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள், அவன் உருவாக்கிய இந்தியாவில் அதிகப் பலன் அனுபவிப்பவர்கள் அவன் சூட்டிய “இந்தியா” என்ற பெயர் “எங்களுக்கு அவமரியாதையாக இருக்கிறது” என்று கூறுவது நன்றி, நாணயம் சிறிதுமில்லாத ஆரியத்துவா இனவாதக் கூற்றாகும். வர்ணாசிரம பாரதத்தை உருவாக்க விரும்புவோரின் சூழ்ச்சியாகும் இது!

“பாரத்” பெயர் மாற்றத்திற்கு ஆதரவான மூன்று நீதிபதிகளின் ஆணையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு, அரசமைப்பு ஆய விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT