உடனடிச்செய்திகள்

Tuesday, June 30, 2020

வெளியுறவுக் கொள்கை வெறும் வாண வேடிக்கையா? கி. வெங்கட்ராமன் கட்டுரை!


வெளியுறவுக் கொள்கை
வெறும் வாண வேடிக்கையா?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்
செயலாளர் கி. வெங்கட்ராமன் கட்டுரை!


கொள்ளை நடந்த வங்கியின் காவலாளி, “அப்படி எதுவும் நடக்கவில்லை, எல்லாம் பத்திரமாக இருக்கிறது” என்று சொன்னதுபோல், “இந்திய எல்லையில் யாரும் ஊருடுவவில்லை, ஒரு அங்குல நிலம் கூட பறிபோகவில்லை” என்று இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 19.06.2020 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறினார்.

அப்படியானால், கால்வான் பள்ளத்தாக்கில் 2020 மே 15 - 16 இரவில் சீனப் படையினர் தாக்குதலில் 20 இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டார்களே, அது ஏன் நிகழ்ந்தது என்ற வினாவை ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பினர். அதன் பிறகு, செய்மதிப் படங்களை வெளியிட்டு முதன்மை ஊடகங்கள் சீனப்படை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, லடாக்கிற்கு அருகில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 60 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கைப்பற்றி நிற்கிறது என்று தெளிவுபடுத்தின. அதன் பிறகு, வேறு வழியின்றி இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற உண்மையை மோடி ஒத்துக் கொண்டார்.

இந்திய வெளியுறவுத்துறை 26.06.2020 அன்று வெளியிட்ட விரிவான அறிக்கையை நோக்கினால், ஒரு பக்கம் மோதல் தவிர்ப்பு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே, ஆக்கிரமித்த பகுதிகளில் நிரந்தரக் கட்டுமானங்களை சீனப்படை உருவாக்கி வருவது தெளிவாகிறது.

பதிலடியாக, இந்தியப் படையினரும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 4,000 கிலோ மீட்டர் வரை நீண்டிருக்கும் இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் எது யார் எல்லை எனத் தெளிவாக வரையறுக்கப்படாத பகுதிகளே அதிகம்!

எடுத்துக்காட்டாக, லடாக் அருகிலுள்ள அக்சாய் சின் பகுதியை இந்தியா உரிமை கொண்டாடுகிற தென்றால், சீனா இந்தியாவிலுள்ள அருணாச்சலப்பிரதேசம் முழுவதுமே தங்களது என உரிமை கொண்டாடுகிறது.

இவ்வளவு சிக்கலான பிரச்சினையின் ஆழத்தை நரேந்திர மோடி ஆட்சி புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. இதற்கு முன் இருந்த காங்கிரசு ஆட்சியும் படை மோதல் வராமல் பார்த்துக் கொண்டார்களே தவிர, எல்லைச் சிக்கலைத் தீர்த்துக் கொள்வதில், எள்ளளவு முன்னேற்றமும் காணவில்லை!

மறுபுறம், பொருளியல் வகையில் இந்தியா பெரிதும் சீனாவை சார்ந்திருப்பதாக மாறியது. குறிப்பாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் ஒப்புதலோடு சீனா இணைத்துக் கொள்ளப்பட்டதற்குப் பிறகு, இந்தியாவின் திறந்தப் பொருளியல் கொள்கையில் அதிகம் பயன்பெற்ற நாடாக சீனா மாறியது. அதிலும் குறிப்பாக, மோடி ஆட்சியில்தான் சீன நிறுவனங்கள் இந்தியாவில் கூடுதலாகக் கோலோச்சத் தொடங்கின.

இந்தியாவின் தானியங்கித் தொழிலில் உதிரி உறுப்புகள் தேவைக்கு 85 விழுக்காடு சீனாவையே இந்தியா சார்ந்திருக்கிறது. மருந்துத் தயாரிப்பில், அடிப்படையான மூலப் பொருட்களுக்கு (Active Pharma Ingredients) 73 விழுக்காடு வரை இந்திய நிறுவனங்கள் சீனாவைச் சார்ந்திருக்கின்றன. இரும்பு எஃகு, பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்ட மிகப்பெரும்பாலான தயாரிப்புகளில் குறைந்தது 40 விழுக்காடு வரை சீனத் தயாரிப்புகளை சார்ந்து இந்தியத் தொழில்கள் இருக்கின்றன.

100 கோடி டாலர் மதிப்பில் எழுச்சி பெறும் புதிய நிறுவனங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள பேட்டிஎம், பிளிப்கார்ட், ஓலா, ஸ்னாப்டீல் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் 30 முதல் 70 விழுக்காடு வரை சீன மூலதனம் உள்ளது. மோடியின் “மேக் இன் இந்தியா” கூக்குரல் உள்ளிட்டு, ஆட்சியாளர்களின் தொடர் கொள்கையின் காரணமாக இந்த சீனச்சார்பு உறுதிப்பட்டுள்ளது.

இச்சூழலில், டிக்டாக், கேம் ஸ்கேன்னர், வீ சாட் போன்ற 59 கைப்பேசி செயலிகளைத் தடை செய்வதால் சீனாவுக்கு எந்த வலியும் ஏற்படப் போவதில்லை! “பாரத மாதா” கூச்சலுக்கு மட்டுமே பயன்படும்!

வாச்பாய் ஆட்சி தொடங்கி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இசுரேல் சார்பு - அமெரிக்க சார்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. மறுபுறம், மோடி சீன உறவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதுபோல் காட்டிக் கொண்டு, 2014-க்குப் பிறகு 5 முறை சீனாவுக்கு சென்றார். சீனத் தலைவர் ஜின் பிங்குக்கு அகமதாபாத், கோவா, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து மாபெரும் வரவேற்பு விழாக்களை மோடி நடத்தினார். ஆனால், விளைந்த பயன் எதுவுமில்லை!

இதற்கு முன்னர், 2014-இல் அகமதாபாத்தில் ஜீஜின் பிங் மோடி அளித்த கோலகல வரவேற்பில் இருந்த போதுதான், ஜெம் ஜக், டூமெக் போன்ற இந்தியப் பகுதிகளில் சீனப்படைகள் ஊடுருவித் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றன. இதிலிருந்தெல்லாம் சீனா குறித்து, மோடி ஆட்சி விழிப்படைந்ததாகத் தெரியவில்லை!

பாக்கித்தானோடு எப்போதும் பகை; நேப்பாளம் - பூட்டான் - வங்காளதேசம் - மாலத்தீவு ஆகிய எந்த அண்டை நாட்டோடும் நம்பகமான நல்லுறவில்லை; அணிசேராக் கொள்கையும் வலுப்படுத்தப் படவில்லை; எல்லாத் திசையிலும் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை அடைந்துள்ள தோல்வியின் வெளிப்பாடுதான் இன்றைய நிலை!

எல்லோரையும் விட தாங்கள்தான் “இந்தியப் பற்றாளர்”கள் என்றும், “பாரத மாதா” முழக்கமிட்டுக் கொண்டும் ஆட்சி நடத்தும் பா.ச.க. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு நட்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதிலும் எள்ளளவும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஆரியத்துவா மேலாதிக்க அரசியலை இந்தியாவில் நிலைநாட்டுவதிலேயே முதற்பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதிலிருந்து இந்திய அரசு பாடம் பெற வேண்டும். எல்லையில் படை வலிமையை உறுதிப்படுத்திக் கொண்டு, வலுவான நிலையில் மோதல் தவிர்ப்புப் பேச்சுவார்த்தையை சீனாவுடன் மேற்கொண்டு,அதே நேரத்தில் முழு அளவிலான போர் ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்.

பொருளியலில் இவ்வளவு மோசமான சீனச் சார்பிலிருந்து விரைவில் வெளி வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். அண்டை நாடுகளோடு நல்லுறவு, அணிசேராக் கொள்கை வலுப்படுவது போன்ற அடித்தளம் இருக்க வேண்டும். சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தலைமையிலான நான்கு முனை குவாட் (Quad) இராணுவக் கூட்டணியில் இணைந்து கொள்வது பேயை எதிர்கொள்ள பிசாசோடு சேர்ந்ததாக முடியும்.

சீன - இந்திய உறவில் உடனடியாக நட்பு நிலை வருவதற்கு வாய்ப்பில்லை. இப்போதைக்கு போரை தவிர்க்க முனைப்புக் காட்ட வேண்டும்!

இச்சிக்கலில் அனைத்துக் கட்சியினரையும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் அணுகுமுறை மிகவும் கட்டாயம்!

இந்த மோதலைக் காரணம் காட்டி, சனநாயக உரிமைகளைப் பறிப்பது, மாநில உரிமைகளைப் பறித்து தில்லியில் குவிப்பது போன்றவை மக்களை ஒன்றிணைக்கப் பயன்படாது.

வெளியறவுக் கொள்கை, பொருளியல் கொள்கை, உள்நாட்டு அரசியல் கொள்கை போன்றவற்றில் தெளிவான மாற்றங்கள் வராமல், இந்திய - சீனச் சிக்கலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது என்பதை மோடி ஆட்சி, இனியாவது உணர வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT