உடனடிச்செய்திகள்

Wednesday, June 17, 2020

தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தை வரவேற்கிறோம்! தனி வாரியம் கோருகிறோம்! பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு
இணையத்தை வரவேற்கிறோம்!
தனி வாரியம் கோருகிறோம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் வெள்ளம்போல் புகுந்து தனியார் துறைகளிலும், இந்திய அரசுத் துறைகளிலும் வேலைகளைக் கைப்பற்றியதால், மண்ணின் மக்களுக்கு பெருமளவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என்ற கோரிக்கையை வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகப் பேராடி வருகிறது. கொரோனா காலத்தில், வெளி மாநிலத் தொழிலாளிகள் அவரவர் தாயகத்திற்குச் செல்ல விரும்பி, பலர் போய்விட்டார்கள்.

இந்நிலையில், மீண்டும் வெளி மாநிலத் தொழிலாளிகளை தமிழ்நாட்டு வேலைகளுக்கு அழைக்கக் கூடாதென்றும், தமிழர்களையே தனியார் துறை வேலைகளில் சேர்க்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். கடந்த 16.05.2020 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இதுகுறித்த கோரிக்கை மனுவை இணையம் வழியே அனுப்பியிருந்தோம்.

இன்று (17.06.2020) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனியார் வேலை வாய்ப்பு இணையத்தைத் (https://www.tnprivatejobs.tn.gov.in/) தொடங்கி வைத்திருக்கிறார்கள். அதில், தொழிலாளிகள் தேவைப்படும் நிறுவனங்களும் வேலை கோருவோரும் பதிவு செய்து கொண்டால், அவரவர்க்குத் தேவையான தொழிலாளிகளையும், வேலைகளையும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இத்திட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முழு மனதுடன் வரவேற்கிறது! அதேவேளை, இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே பதிவு செய்யலாம் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்.

அடுத்து, கடந்த 16.05.2020 அன்று முதலமைச்சருக்கு நாங்கள் அனுப்பிய மனுவில், “அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற அமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கி, அதில் வேலை கோருவோரை பதிவு செய்ய வைக்க வேண்டும். திறன் பெற்ற / தொழில் பயற்சி பெற்ற மற்றும் உடலுழைப்புத் தொழிலாளிகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பட்டியலிலிருந்து நிறுவனங்கள் கோரக்கூடிய தொழிலாளிகளை இந்த வாரியம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வாறு வாரியம் அமைத்தால், அவருடைய முயற்சி முழுமை பெற வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மிகவும் பயனளிக்கும். எனவே, இதுபோன்ற வாரியத்தை அமைக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT