உடனடிச்செய்திகள்

Sunday, August 5, 2012

“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே ஆகும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு!


“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே ஆகும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு!

சர்வதேச நாடுகள் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரியும், தமிழ் ஈழம் பற்றி பேசக்கூடாது என மிரட்டும் இந்திய அரசை கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சென்னையில் இன்று(04.08.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு, மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று, தமிழக மக்கள் உரிமைக் கழகம் செயலாளர் வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் கண்டன உரையாற்றினார். “தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை தமிழின உணர்வாளர்களை அச்சுறுத்த முயலும் நடவடிக்கையே” என அவர் விளக்கிப் பேசினார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ் நேயன், தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாவேந்தன், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் திரு. தடா.ஜெ.அப்துல் ரகீம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்க அமைப்பாளர் திரு. தெய்வமணி, தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழ் காப்போம் இயக்கம்(சேவ் தமிழ்ஸ்) திரு. இளங்கோவன், தமிழர் கழக அமைப்பாளர் திரு. மணிகண்டன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், தமிழக மக்கள் உரிமைக் கழக இணைச் செயலாளர் தோழர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.







இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை வெறும் இந்திய அரசின் நடவடிக்கை மட்டும் அல்ல. தமிழக அரசின் உளவுத்துறையின் அறிக்கையையும் இணைத்தே அத்தடை தீர்மானிக்கப்படுகின்றது. புலிகள் மீதான தடை நீட்டிப்பில், செயலலிதா – கருணாநிதி அரசுகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. தீர்ப்பாயத்தற்கு இரண்டு அரசுகளும், புலிகள் மீதான தடையை நீட்டிக்கவே செயல்பட்டுள்ளன.


தமிழீழம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது என்று கூறி, தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்றும், தமிழீழம் இந்தியாவிற்கு நட்பு சக்தியாகவேத் திகழும் என்றும் இந்தியப் பெருங்கடலில் வல்லாதிக்க அரசுகளின் ஆதிக்கமில்லாமல் தடுப்போம் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுறை அறிவித்தனர்.

ஆனாலும், ஆரிய இனச்சார்பு கொண்ட இந்திய அரசு, நட்பாக இருப்போம் என்று அறிவித்த ஈழ விடுதலைப் போராட்டத்தை அழியவே துணை நின்றது. இதுவரை இந்தியச் சீனப் போரிலும், வங்காள தேச விடுதலைப் போரிலும், இந்தியாவிற்கு உதவாத சிங்களனா, இந்தியாவை நேசிக்கின்ற ஈழத்தமிழனா என்று வந்தால், இருவரில் சிங்களனையே இந்திய அரசு நம்பும். அதே போல், இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையில் ஆதிக்க வலைவிரித்திருக்கும் சீன அரசின் தந்திரங்கள் இந்திய அரசுக்குத் தெரியும். இருந்தும், முதலில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள், தமிழர்களா, சீனாவா என்றால், தமிழர்களையே தேர்ந்தெடுக்கும் இந்திய அரசு. அந்தளவிற்கு, தமிழர்களை தனது இனப்பகை சக்தியாகவே இந்திய அரசு கருதுகிறது.

உண்மையில், இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தமிழீழமா அழித்து விடப்போகிறது? இல்லை. இந்திய அரசு தான் இந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் தானே அழிக்க முன் நிற்கிறது. காவிரியில் கன்னடன் பக்கம் நின்று தமிழினத்தை வஞ்சிப்பது, முல்லைப் பெரியாறு – பாலாறு சிக்கலில் தமிழினத்திற்கு எதிராக நிற்பது, கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரை வார்ப்பது, தமிழக மீனவர்களை சிங்களன் சுட்டுக் கொல்லத் துணை நிற்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு தான், தமிழ்நாட்டுத் தமிழன் நெஞ்சிலும், தமிழச்சி நெஞ்சிலும் இந்தியாவிலிருந்து பிரிந்தால் தான் நமக்கு வாழ்வு உண்டு என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு விடுதலையை விடுதலைப்புலிகள் தூண்டவில்லை. இந்திய அரசே தூண்டுகிறது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு முதல் எதிரியாக உள்ளது, இந்திய அரசேத் தவிர தமிழீழம் அல்ல. ” என பேசினார்.

(செய்தி – த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் – பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT