உடனடிச்செய்திகள்

Sunday, November 25, 2012

சாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது - தோழர் பெ.மணியரசன் பேச்சு


சாதி மறுப்புத் திருமணங்களை 
யார் நினைத்தாலும் தடுக்க முடியாது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

சாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என தர்மபுரி சாதி வெறியாட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு சாதி வெறியர்கள் தீ வைத்த நிகழ்வைக் கண்டித்து, மே பதினேழு இயக்கம் சார்பில், நேற்று(24.11.2012) மாலை 4.30 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் உமர் ஒருங்கிணைத்தார். மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சித் தலைவர் தோழர் துரைசிங்கவேல், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், அருள்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில், தர்மபுரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சாதி வெறிபிடித்த ஒரு கூட்டம், தீ வைத்துக் கொளுத்தி அட்டூழியம் செய்ததும், பொருட்களைக் கொள்ளையடித்ததும், தமிழ் இனத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. 12.11.2012 அன்று நானும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் நேரில் சென்று எரியூட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்த்த போது நெஞ்சு பதைத்தது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து, ஒவ்வொரு அறையாக எரித்துள்ளனர் சாதி வெறியர்கள். உழைத்துச் சேர்த்த ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் கிடந்ததைக் கொண்டு வந்து காட்டினார்கள் அம்மக்கள். தமிழீழத்தில், சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்ட தமிழர் பகுதியைப் போல, ஒரே இனத்திற்குள் உள்ள சாதி ஆதிக்கவாதிகள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீடுகள் காட்சியளித்தன.

கூடங்குளத்தில், யார் யார் என்றே தெரியாமல் தோராயமாக 50,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தர்மபுரியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் என்ற உண்மைத் தெரிந்த போதும் கூட, வெறும் 100 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்ததில் என்ன ஞாயம் உள்ளது? வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறிக்கும்பலில், பெண்கள் இருந்ததாகவும் சொல்கின்றனர். அது உண்மையாக இருப்பின், அவர்கள் மீதும் தயக்கமின்றி வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். சாதி வெறியர்களைத் தண்டிக்க, தமிழக அரசு முன்மாதிரி நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.

தர்மபுரி தீ வைப்பு போன்ற கொடிய சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். சாதியை ஒழிக்கும் வகையில், சாதி மறுப்புத் திருமணங்களை அதிகம் நடத்த வேண்டும். அவ்வாறு சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு, அரசு தனி இட ஒதுக்கீடு வழங்கி அவர்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும். அந்த இட ஒதுக்கீட்டின் அளவை ஆண்டாண்டுக்கு அதிகரிக்க வேண்டும்


உலகமயம் கோலோச்சுகின் இந்த காலகட்டத்தில், அதன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால், பல தீமைகள் ஏற்பட்டுள்ள போதிலும் கூட, அதன் ஊடாக இளையோரிடம் சாதி, மதம் கடந்து காதல் மலர்வதும் நடைபெற்றுக் கொண்டிப்பது வரவேற்கத்தக்கது. இப்படி இளைய சமுதாயம் சாதி, மதம் கடந்து கலப்பு மணங்கள் புரிந்த கொண்டிருக்கும் நிலையில், சாதி மறுப்புத் திருமணங்களை எந்த காடுவெட்டி குருவாலும், சாதிச் சங்கங்களாலும் தடுக்க முடியாது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில், அணை உடைத்த வெள்ளம் போல், இளைஞர்கள் சாதியை உடைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்வது பெருகத்தான் போகிறது.

அண்மையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்த்தேசியவாதிகள் யாரும் தர்மபுரிக்கு வரவில்லை என்றும், தர்மபுரி தீ வைப்பு குறித்து மவுனம் சாதிப்பதாகவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாங்கள் எப்போது சாதி வெறியாட்டங்களை எதிர்த்துப் பேசாமல் மவுனமானோம் என அவருக்கு நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்.

தர்மபுரிக்கு தோழர் திருமாவளவன் சென்ற அதே நாளில் தான் நாங்களும் அங்கு சென்றிருந்தோம். இது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் தோழர்களுக்கும் தெரியும். எங்கள் கட்சி இதழான, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணாட்டம் இதழில், தர்மபுரி சாதி வெறியாட்ட நிகழ்வு தமிழினத்திற்கேத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என தலையங்கம் எழுதினோம்.

கடந்த ஆண்டு, பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் 7 பேர் தமிழகக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மதுரை, தஞ்சை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினோம். நானும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட, த.தே.பொ.க. தோழர்கள் பரமக்குடிக்கு நேரில் சென்று பார்த்தோம். காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் எனவும், மக்களை ஒடுக்கிய காவல்துறையினரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தோம்.

இப்பொதுழும், தர்மபுரியில் வெறியாட்டம் நிகழ்த்திய சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் அளித்தும், புதிய வீடுகளைக் கட்டித் தந்தும் அவர்களை மறுபடியும் கவுரமாக வாழ வைக்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.


நத்தம் கிராமத்தை, 10 நிமிடத்தில் சென்றடைய முடியும் என்ற போதும், தர்மபுரியிலிருந்து பெரிய அளவில் காவலர்கள் சாதி வெறியர்களைத் தடுக்க வராதது ஏன்? அவர்களது உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறோம். இதற்குக் காரணமான, காவல்துறை அதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தண்டனை ஆகாது என்பதால், அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து,  அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறோம். பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதித் தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்கிறோம்.

இவையெல்லாம் சாதி வெறிக்கு எதிரான தமிழ்த் தேசியவாதிகளின் செயல்பாடுகள் ஆகாதா? அல்லது விடுதலை சிறுத்தைகள் எங்களை தமிழ்த் தேசிய சக்திகளாகவே பொருட்படுத்துவதில்லையா? அவ்வாறெனில், வேறு யாரைத் தான் விடுதலை சிறுத்தைகள் தமிழ்த்தேசியவாதிகள் என அழைக்கிறார்கள் என்பதையாவது அவர்கள் தெளிவுபடுத்துவார்களா? எந்த அமைப்பை, எந்தத் தலைவரை நீங்கள் தமிழ்த் தேசிய அமைப்பென்றும், தமிழ்த் தேசியவாதி என்றும் கருதுகிறீர்கள் என்பதையாவது வெளிப்படுத்துவீர்களா?


தர்மபுரி தீ வைப்பு நிகழ்வை சாக்காக பயன்படுத்தி ஒட்டு மொத்த தமிழ்த் தேசியத்தையும் எதிர்ப்பது தான் அவரது உத்தி என்பது இதிலிருந்து தெரிகிறது. ஏனெனில், ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து, தமிழ் இனவுணர்வோடு, தமிழர் சமத்துவ சிந்தனைகளோடு, இளைஞர்கள் தமிழ்த்தேசியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து, தன் அமைப்புகள் அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது உள்நோக்கம் தான் இதிலிருந்து வெளிப்படுகின்றது.

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட, பல வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தர்மபுரியில் நிகழ்த்தப்பட்டக் கொடுமையைக் கண்டிக்கும், அதே சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் உள்ளிட்ட பலரும் இங்கு எப்படி ஒன்றாகக் கூடியிருக்கிறோமோ, அதைப் போன்ற ஓர் தமிழ்த் தேசிய ஒற்றுமை தான் இன்றைக்குத் தேவை. தமிழ்த் தேசியப் புரட்சி எதிரியை வீழ்த்துவதைப் போலவே, தமிழர் மனங்களில், ஆரியர்களால் புகுத்தப்பட்ட சாதி என்ற அழுக்கையும் முழுமையாக அழிக்கும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்,  பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. முன்னணி நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவான தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார்.


 (செய்தி: த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: க.அருணபாரதி)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT