உழவர் போராளி பி. சீனிவாசராவ் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30.9.2012 மாலை, திருத்துறைப்பூண்டி வட்டம், ஆலத்தம்பாடி கடைத்தெருவில் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ. தனஞ்செயன் தலைமை தாங்கினார்.
ஒன்றியச் செயலாளர் தோழர் க. தனபால், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சிவவடிவேலு, க.அரசு, ஆகியோர் உரையாற்றினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பி.எஸ்.ஆர் நினைவைப் போற்றி வீரவணக்க உரையாற்றினார்.
நிறைவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைவர் பி. சீனிவாசராவ் அவர்களின் பணிகளையும், ஈகத்தையும் எடுத்துக்காட்டி வீரவணக்க உரையாற்றினார்.
தோழர் கி.வெங்கட்ராமன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“ 1906ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் தெற்கு கனரா மாவட்டத்தில் பிறந்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மையக்குழு முடிவுக்கிணங்க கீழ தஞ்சை மாவட்டத்திற்கு வந்து போர்க்குணம் மிக்க உழவர் பேரியக்கத்தைக்கட்டி எழுப்பிய மகத்தான தலைவர் பி. சீனிவாசராவ்.
புழுப்பூச்சிகளைப் போல ஒடுக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களை சாதி ஆதிக்கத் திற்கும், பண்னையார் பேயாட்சிக்கும் எதிராக கிளர்ந்தெழச் செய்து தலை நிமிர்த்தப் பாடுபட்டவர் பி.எஸ்.ஆர். அடுக்கடுக்கான அற்புதமான தலைவர்களை வார்த்தெடுத்த தலைவர்களின் தலைவர் அவர். 1942இல் இந்திய கம்யூனிட்டு கட்சி “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்க்க முடிவு செய்த போது அது தவறான முடிவு என எடுத்துக்காட்டி கட்சிக்குள் கடும்புயலை ஏற்படுத்தியவர். ஆயினும் கட்டுப்பாடுமிக்க போராளி அவர்.
அவரும், அவரைப் போன்ற தலைவர்களும் தலைமறைவு காலத்திலேயே பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திலும், குத்தகை உழவர்களின் உரிமைப் போராட்டத்திலும் வெற்றிகள் பல ஈட்டினார்கள். இதனால் கீழ் தஞ்சை மாவட்டத்தில் வழுமிக்க இயக்கமாக கம்யூனிஸ்ட்டு இயக்கம் வளர்ந்தது. 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெளியில் வந்து பரப்புரை செய்ய முடியாத காலத்திலும் மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று கீழ் தஞ்சையில் மட்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து வெற்றிக் கண்டது கம்யூனிஸ்ட்டு கட்சி.
அதே கட்சிதான் இன்று கருணாநிதியிடமும், செயலலிதாவிடமும் பல்லிளித்து இரண்டு சீட்டுகளை பெற்றால் போதும் என்ற நிலையில் இருக்கிறது. ஈகி பி.எஸ்.ஆரும், ஜீவாவும், இருந்த கட்சியில்தான் இன்று தளி இராமச்சந்திரங்கள் கோலோச்சுகிறார்கள்.
கம்யூனிஸ்ட்டு கட்சியே இவ்வாறு சீரழிந்து விட்டதென்றால் பிற கட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இன்று காவிரி சிக்கலில், தமிழ்நாட்டு கட்சிகள் நடந்து கொள்ளும் விதமே தமிழ்நாட்டு அரசியல் எந்த அளவிற்கு சீரழிந்து சிதிலமடைந்து கிடக்கிறது என்பதற்கு சான்று.
மீண்டும் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுக் காவிரி நீரும் உரிமை என்ற அடிப்படையில் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகக் கயவர்கள் கொக்கரிக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். ஓசூர் எல்லையிலே வந்து நாள் தவறாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். இதிலே கர்நாடகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, புதியக் கட்சி, பெரியக் கட்சி என்ற எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் உரிமை மறுக்கப்பட்ட தமிழகத்திலோ சொந்தப் பங்காளிச் சண்டைகளை அரசியல் கருத்து வேறுபாடு போல் படம் காட்டி உரிமையை மீட்க ஒன்று சேர மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நிலவும் பதவி அரசியல் தமிழக உரிமைகளை காட்டி கொடுக்கும் அரசியலாக நிலை தாழ்ந்து போய் நீண்ட நாளாகி விட்டது. எனவேதான் எந்த தயக்கமும் இன்றி தமிழ்நாட்டை அடிமை கொண்டு சித்திரவதை செய்து வருகிறது டெல்லி ஏகாதிபத்தியம்.
எனவே இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டு அரசியலை மீட்டெடுப்பதில் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளைஞர்க முக்கியப் பங்காற்ற வேண்டும்.
தமிழ்நாடு விடுதலை பெறுவதைத் தவிர நாம் சந்திக்கும் சிக்கல் களிலிருந்து நிரந்தரமாக விடுபட வேறு வழியே இல்லை. காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை. மீனவர் படுகொலை கூடங்குளம் சிக்கல் ஆகிய அனைத்திற்கும் காரணம் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதுதான் எனவே தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியம் நோக்கி இளைஞர்கள் எழுச்சிக் கொள்ள வேண்டும் உழவர்கள் ஒன்றுதிரள வேண்டும். என தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்த பி.எஸ்.ஆர். நாளில் அழைக்கிறது” என்று உரையாற்றினார்.
(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)
Post a Comment