தோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ (SPARROW) விருது!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினருமான ம. இலட்சுமி அம்மாள் அவர்கள், தன் வாழ்க்கை குறித்து எழுதிய “இலட்சுமி எனும் பயணி” நூலை, மும்பையைத் தலைநகராகக் கொண்டு, இயங்கி வரும் - மகளிர் உரிமைக்கான “ஸ்பேரோ” (Sound and Picture Archives for Research on Women - SPARROW) அமைப்பு விருது வழங்கத் தேர்ந்தெடுத்துள்ளது!
இதுகுறித்து, இன்று (12.11.2017), தமிழ் இந்து நாளேட்டின் “பெண் இன்று” இணைப்பிதழில், “லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது” என்ற தலைப்பில் செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“போராட்டத்தை வாழ்க்கையாகப் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், லட்சுமி அம்மாவைப் போராட்டம்தான் தேர்ந்தெடுத்தது. 12, 13 வயதுகளிலேயே வறுமை, தந்தையின் கவனிப்பின்மையால் வேண்டாத மனிதராகி, குழந்தைத் தொழிலாளியாக பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே தொழிற்சங்கத்திலிருந்து தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் லட்சுமி அம்மா.
இவரது சுயசரிதையான “லட்சுமி என்னும் பயணி”க்கு சுயசரிதை வகைமையில் ஸ்பேரோ விருது கிடைத்துள்ளது. சமூகம், அரசியல், வாழ்வாதார உரிமைகளுக்காக அடித்தளத்திலிருந்து போராடும் பெண்களின் பதிவுகள் மிக அரிதான நிலையில் லட்சுமி அம்மாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கவுரவம் முக்கியமானது.
தொழிலாளர் உரிமைகள், சாதி எதிர்ப்பு, வர்க்கப் போராட்டங்களுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த லட்சுமி, சி.ஐ.டி.யூ. அமைப்பில் குழந்தைத் தொழிற்சங்கவாதியாகத் தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர்பிலேயே கட்சியின் முழுநேர உறுப்பினராகச் செயல்பட்ட, தற்போதைய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனை மணந்து கொண்டார்.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவருடன் திருமணத்தில் இணைந்த லட்சுமிக்கு ஒரு இந்திய, தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைக்கும் சாதாரணக் குடும்ப மகிழ்ச்சிகூடக் கிடைக்கவில்லை என்பதை அவரது சுயசரிதை விளக்குகிறது. பிரசவம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் எதிலுமே கணவர் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டவர் லட்சுமி அம்மா. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் கவனிப்பு, வறுமை, தனிப்பட்ட இழப்பு ஆகியவற்றோடு தனது கணவரது அனைத்துப் போராட்டங்களிலுலும் ஈடுபட்டு வருகிறார் லட்சுமி அம்மா” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோழர் ம. இலட்சுமி அம்மாள் அவர்களுக்குப் பாராட்டுகள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment