உடனடிச்செய்திகள்

Tuesday, June 21, 2011

PRESS RELEASE[21.06.2011]:: சமச்சீர் கல்விக்கு தடை கூடாது! - சென்னையில் நாளை(22.06.2011) த.தே.பொ.க.ஆர்ப்பாட்டம்!

"சமச்சீர் கல்வியை தடை செய்யாதே!

கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

சென்னையில் நாளை(22.06.2011) ஆர்ப்பாட்டம்!

பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரை!

 

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு நான்கு வகையான பாடத் திட்டங்கள் இருந்தன. தமிழக அரசு அமைத்த முனைவர் ச.முத்துக்குமரன் குழு நீண்ட காலம் ஆய்வு செய்து, பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, ஒரே வகை பாடத்திட்டத்தை பரிந்துரைத்தது. ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்றுக் கொண்டு, மற்ற பாடங்களை தமிழ்வழியில் படிக்கவும் பரிந்துரைத்தது இன்னும் பல நல்ல பரிந்துரைகளை அக்குழு வழங்கியது. இதற்கு சமச்சீர்க் கல்வித் திட்டம் என்று பெயர்.

 

கொள்ளை லாபம் தரும் வணிகமாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளை நடத்தி வரும் வலுவான கல்வி முதலாளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதே போல் சமூகத்தில் வர்ண சாதி ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் பிற்போக்காளர்களும் சமச்சீர்க் கல்வியை எதிர்த்தனர்.

 

அரசு பள்ளிகளை விட தங்கள் பள்ளிகளில் மிக உயர்ந்த தரத்துடன் பாடத் திட்டம் உள்ளது என்று கூறிக்கொண்டுதான் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் தங்கள் வணிகத்தை நடத்துகின்றனர். இந்த பூடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மெட்ரிக் பள்ளி பாடத்திட்டத்தைவிட தரத்தில் கூடுதலாக உள்ள சமச்சீர் பாடத்திட்டம் அனைவருக்கும் பொதுவாக வந்தவுடன் அவர்கள் தரம் பற்றி பேசி, பெற்றோர்களிடம் பீதி கிளப்புகிறார்கள்.

 

சென்னை உயர்நீதிமன்றம் 10.6.2011 அன்று அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வியை செயல்படுத்திக்கொண்டே, தேவைப்படும் தர மேம்பாட்டை செய்து கொள்ளலாம் என்று கூறியதை போலவே நீக்க வேண்டிய பாடங்கள் இருந்தால் அதை மட்டும் நீக்கிக் கொள்ளலாம் என்று கூறியது.

 

இந்த அடிப்படையில் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துவதற்கு மாறாக அத்திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்சநீதிமன்றம் சென்று அத்திட்டத்தை நீக்கக் கோரியது செல்வி செயலலிதா அரசு.

 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வி பற்றி அதனிடம் பரிந்துரை பெற்று, அதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி செயல்படவேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் 15.6.2011 அன்று தீர்ப்பளித்தது.

 

தமிழக முதல்வர் செயலலிதா அமைத்துள்ள வல்லுநர் குழுவில் சமச்சீர்க் கல்வியைத் தொடர்ந்து எதிர்த்து வரும், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகி விஜயலட்சுமி சீனிவாசன், சென்னை டி.ஏ.வி மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதலாளி சி.ஜெயதேவ், சென்னை பத்மா சேசாத்ரி பாலபவன் பள்ளிகள் முதலாளி இராஜ லெட்சுமி பார்த்த சாரதி ஆகியோரை சேர்த்துள்ளார். நடுவண் கல்வித்துறை சார்ந்த இருவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் தமிழக அரசின் அதிகாரிகள். தமிழக அரசு நடத்தும் பள்ளிகளிலிருந்து ஒருவரைக் கூட இக்குழுவில் சேர்க்கவில்லை.

 

 

 

 

 

10 பேர் கொண்ட இந்தக் குழு எப்படி பரிந்துரை செய்யும் என்பது இப்போதே புரிகிறது. சமச்சீர்க் கல்விக்கு எதிராகப் பரிந்துரை வர வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இந்த குழுவை முதலைமைச்சர் அமைத்துள்ளார்.

 

சமச்சீர் கல்வி என்பது சமூக நீதியில் ஒரு முக்கிய கூறாகும். அனைவர்க்கும் சம வாய்ப்பு தரும் திட்டமாகும். அதே போல் மெட்ரிகுலேசன் முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கும் இது ஒரு வேகத்தடையாகும்.

 

இப்பொழுது நீதிபதி இரவிராஜா பாண்டியன், நீதிபதி கோவிந்தரசான் குழு வரையறுத்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் நிர்ணயத்துள்ளார். அவர் நிர்ணயத்த தொகையையும் தாண்டி பல பள்ளிகள் கூடுதலாக வசூல் வேட்டை நடத்துகின்றன.

 

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்று சமச்சீர்க் கல்வியை செயல்படுத்த வலியுறுத்தியும், முதலமைச்சர் தலையிட்டு கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

நாளை மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

அனைவருக்கும் சமமான பொதுக்கல்வியை விரும்பும் ஆர்வலர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.


இவண்,

வெளியீட்டுப் பிரிவு,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

 

நாள் : 21.06.2011,

இடம்  : சென்னை-17


தொடர்புக்கு: tamizhdesiyam@gmail.com 

இணையம்: http://tamizhdesiyam.blogspot.com

Saturday, June 18, 2011

சமச்சீர்க் கல்விக்கு எதிரான குழுவை கலைத்துவிட்டு புதிய குழுவை அமைக்க வேண்டும் ! - பெ.மணியரசன் அறிக்கை!

சமச்சீர்க் கல்விக்கு எதிரான குழுவை கலைத்துவிட்டு

புதிய குழுவை அமைக்க வேண்டும் !

  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  பொதுச்செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை


 


ஆட்சிக்கு வந்தவுடனேயே சமச்சீர்க்கல்வித் திட்டத்தைக் கைகழுவ முனைப்புக் காட்டினார் முதல்வர் செயலலிதா. தி.மு.க ஆட்சியில் சமச்சீர்க் கல்வியைச் செயல்படுத்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாததாக்கும் வகையில், சட்டப்பேரவையில் புதிய திருத்தம் ஒன்றை நிறைவேற்றினார். அத்திருத்ததிற்கு இடைக்காலத் தடை வழங்கி, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை இவ்வாண்டு செயல்படுத்துமாறு 10.6.2011 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

 

அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் செயலலிதா. உச்ச நீதிமன்றம் 14.6.2011 அன்று அளித்த இடைக்கால ஆணையில் தமிழக அரசுத் தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்து, அக்குழுவின் பரிந்துரையை சென்னை உயர் நீதி மன்றத்தில் அளிக்குமாறும், அதன் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி செயல்படுமாறும் கூறியிருந்தது.

 

இதற்காக 17.6.2011 அன்று செல்வி செயலலிதா தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி  தலைமையில் அமைத்த குழுவில் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகளான சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த விசயலட்சுமி சீனிவாசன், சென்னை டி.ஏ.வி. மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த சி. ஜெயதேவ் ஆகியோரைச் சேர்த்துள்ளார். அத்துடன் சமச்சீர்க் கல்வியில் எவ்வகைத் தொடர்புமில்லாத சி.பி.எஸ்.இ. பிரிவைச் சேர்ந்த சென்னை பத்மா சேசாத்திரி பள்ளிகளின் நிர்வாகியான இராஜேஸ்வரி பார்த்தசாரதியை இக்குழுவில் சேர்த்துள்ளார்.

 

மற்றொருவர் நடுவண் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) முன்னாள் இயக்குநர் ஜி. பாலசுப்பிரமணியன் ஆவார். இன்னும் இருவர் நடுவண் அரசின் உயர் கல்விக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பி. திரிபாதி, அனில் சேத்தி ஆகியோர். அடுத்தவர் தமிழகப்பள்ளிக் கல்வி செயலாளர் டி. சபீதா. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆவார். சாரங்கி உள்ளிட்ட இம் மூவரும் செயலலிதாவின் கீழ் பணியாற்றுவோர் ஆவர்.

 

இக்குழுவில் தமிழக அரசின் பள்ளிகள் சார்பாக ஆசிரியர் யாரும் சேர்க்கப்படவில்லை.

 

சமச்சீர்க் கல்விக்கு எதிராகப் பரிந்துரை பெறுவதற்காகத் திட்டமிட்டு இக்குழுவை அமைத்துள்ளார் செயலலிதா.

 

தமிழகக் கல்வி வளர்ச்சியிலும், மாணவ்ர் நலனிலும், சமூக நீதியிலும் அக்கறையுள்ள மக்கள் இக்குழுவை ஏற்க மாட்டார்கள்.

 

தமிழக முதல்வர் இக்குழுவைக் கலைத்து விட்டு, இலாப நோக்கில்லாத கல்வியாளர் களையும், தமிழக அரசுப் பள்ளிகள் சார்பாக பிதிநிதிகளையும் சேர்த்து புதிதாகக் குழு அமைக்குமாறு தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

தோழமையுடன்>

                                                                    பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

 

இடம்  : சென்னை-17.

நாள்  : 18.06.2011 

 


Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது மாணவர்களுக்குக் கேடு பயக்கும் :: பெ.மணியரசன் அறிக்கை!

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது மாணவர்களுக்குக் கேடு பயக்கும்

கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர்

பெ.மணியரசன் அறிக்கை

23.05.2011, சென்னை-17.

 

முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் குழு பரிந்துரைத்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் 20 விழுக்காட்டளவிற்கு உள்ளவற்றை மட்டுமே கருணாநிதி செயல் படுத்தினார். அதையும் நிறுத்தி வைக்க தமிழக முதல்வர் செயலலிதா முடிவு செய்த்தது பெறும் பின்னடைவாகும்.

 

தமிழக அரசுப் பள்ளிகளுக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற ஒன்றைத் தவிர மற்றவற்றை முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல் படுத்த வில்லை.

 

அரை குறையாகக் கட்டண ஒழுங்கமைப்பைக் கொண்டு வந்தார் கருணாநிதி. இவற்றை ஏற்க விரும்பாத மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை எதிர்த்துப் பல வடிவங்களில் போராடினார்கள். உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வியை ஆதரித்துத் தீர்ப்பளித்த பின் ஒருவாறு ஓய்ந்தனர் கல்வி முதலாளிகள்.

 

இப்போது என்ன மாயம் நடந்ததோ, வந்ததும் வராததுமாக செயலலிதா சமச்சீர் கல்வியை ஓராண்டிற்கு நிறுத்தி வைத்து விட்டார். அவர் அமைக்கும் வல்லுநர் குழுவின் பரிந்துரைபடி அடுத்த ஆண்டு செயல்படுவாராம்!

 

சமச்சீர் திட்டப்படி 216 கோடி ரூபாய் செலவில் 9 கோடி நூல்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் வீண்! இனி பழைய பாடத்திட்டப்படி பாட நூல்கள் அச்சிட 110 கோடி செலவாகுமாம். மக்கள் வரிப்பணத்தை துச்சமாக விரையம் செய்வதில் முதல்வர் செயலலிதாவிற்குக் கொஞ்சம் கூட மன நெருடல் இல்லையா?.

 

சூன் 1-ஆம் நாள் திறக்க வேண்டிய பள்ளிகளை சூன் 15-ஆம் நாள் திறக்கும் படி தள்ளி வைத்துள்ளார் செயலலிதா. இந்த நாள்களைப் பின்னர் மே மாத வெயிலில் ஈடுகட்டுவார்களா? எல்லாத் தொல்லையும் மாணவ்ர்கள் தலையில் விடியப் போகிறது.

 

 பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் செம்மொழி என்ற பாடத்தில் கடைசி ஒரு பத்தியில் மட்டுமே கருணாநிதி குறிப்பிடப்பட்டுள்ளார். சங்கத்தமிழ் குறித்து கருணாநிதி எழுதிய பாடம் ஒன்றும் உள்ளது. கருணாநிதி குறித்த பாடத்தை நீக்க வேண்டுமானால் அப்பக்கங்களை மட்டுமே நீக்கிவிட்டு நூல்களை வழங்கலாம்.

 

1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்கு முன் செயலலிதா பற்றி 12 பக்கம் இருந்த பாடத்தை மட்டும் நீக்கி விட்டு பழைய ஆட்சி அச்சிட்டிருந்த பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்கியது. சமச்சீர் பாட நூல்களில் குறையிருந்தால் அவற்றை மட்டும் சரி செய்யலாம். அவ்வாறின்றி ஒட்டு மொத்தத் திட்டத்தைக் கடைசி நேரத்தில் நிறுத்தி வைப்பது

 

 

மாணவர்களுக்குக் கேடு பயப்பதாகும். பாட நூல் மாற்றத்தோடு நில்லாமல் பழையபடி கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும்.

 

ஏற்கெனவே, கல்வித்துறை, உயிரோடு இருக்கும் தலைவர்கள் குறித்து பாடங்களைப் பாட நூல்களில் வைப்பதில்லை என்ற நடைமுறை வைத்திருந்தது. அந்த நடை முறையை மாற்றியவர்கள் கழக ஆட்சியினர்தாம்.

 

சமச்சீர் கல்விப்பாட நூல்கள் தரமாக இல்லை என்று மெட்ரிக் பள்ளி முதலாளிகள் கூறிய அதே குற்றச்சாட்டைத்தான் செயலலிதாவும் தமது முடிவுக்குக் காரணமாகக் கூறியுள்ளார். இருக்கும் சில குறைகளை நீக்கி இப்போது அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாட நூல்களை வழங்குவதே  கல்வி வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட செயலாகும்.

 

எனவே தமிழக முதல்வர் செல்வி செயலலிதா தமது முடிவை மறு ஆய்வு செய்து சம்ச்சீர் கல்வித் திட்டத்தை வரும்  சூன் மாதம் செயல்படுத்துமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


தோழமையுடன்,

பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.



Saturday, May 21, 2011

இதரத் தென் மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் மின்சாரம் தர நெய்வேலியில் புதிய மின் நிலையங்கள் கட்டக்கூடாது நடுவணரசுக்குத் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்



இதரத் தென் மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் மின்சாரம் தர

நெய்வேலியில் புதிய மின் நிலையங்கள் கட்டக்கூடாது

 நடுவணரசுக்குத்  தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்

 

      ந்திய அரசு சார்பில் நெய்வேலியில் 5,907 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரு அனல் மின் நிலையங்கள் நிறுவ 19.5.2011 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விரு அனல் மின் நிலையங்களும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும். இவ்விரு அனல் மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் தென் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது.

 

மின் பற்றாக்குறையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு. இந்நிலையில் தமிழகத்தில் தமிழக உழவர்கள் கொடுத்த நிலங்களில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்க வேண்டும்.இப்போது நெய்வேலி மின்சாரம் மற்ற தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. இனி புதிதாக உற்பத்தியாகும் மின்சாரத்தையும் மற்ற தென் மாநிலங்களுக்கு வழங்குவது அநீதி ஆகும். தமிழகத்தையும் அதில் வாழும் ஏழுகோடி மக்களையும் அவர்களின் மின் தேவையையும் துச்சமாகக் கருதி இந்திய அரசு செயல்படுவது மொழிவாரி மாநில உரிமைகளை சட்டை செய்யாத  காலனிய ஆட்சி முறையாகும்.

 

 கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் காவிரித் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தர மறுப்பவை. தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மேற்கண்ட தென் மாநிலங்களிடமிருந்து மீட்டுத்தர இந்திய அரசு சுட்டு விரலைக் கூட அசைத்ததில்லை. இப்போது மிகத் தாராளமாகத் தமிழகத்தின் கனிம வளத்தை எடுத்து மின் உற்பத்தி செய்து அதைக் கர்நாடகம், கேரளம் , ஆந்திரம் ஆகிய  மாநிலங்களுக்கு வழங்க இந்திய அரசு முனைவது  தமிழ்நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.

 

       அது மட்டு மின்றி, இந்திய அரசு இலங்கைக்கு மின்சாரம் தர ஒப்பந்தம் போட்டுள்ளது. புதிதாக உற்பத்தி செய்ய உள்ள நெய்வேலி மின்சாரத்தை, தமிழினத்தை அழித்த இலங்கைக்குத் தர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை நின்றதைப் போலவே இப்போழுது தமிழக மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பத் திட்ட மிட்டுள்ள செயல் தமிழினத்தின் மீது இந்திய அரசுக்குள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது.

 

புதிதாக உற்பத்தி செய்யும் நெய்வேலி மின்சாரத்தை ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களுக்கும், இலங்கைக்கும் இந்திய அரசு வழங்கத் திட்ட மிடுவதைத் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, இந்திய அரசு நெய்வேலியில் புதிதாக அணுமின் நிலையங்கள் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, அங்கு புதிய அனல்மின் நிலையங்களைத் தமிழக அரசின் மின் வாரியப் பொறுப்பில்  கட்ட அனுமதி பெற்றுப் பணிகளைத் தொடங்குமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, May 14, 2011

PRESS RELEASE[15.05.2011]: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: ஏமாற்றியவர் ஏமாந்தார்: பெ.மணியரசன் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: ஏமாற்றியவர் ஏமாந்தார்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை

 

அ.இ.அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை விட, தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி தமிழக மக்களிடம் பரவலாக இருந்திருக்கிறது. தி.மு.க.வின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இந்த அளவு படுதோல்வி அடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

 

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தடுத்துவிட்டதால் தி.மு.க.வுக்கு இந்தப் படுதோல்வி ஏற்பட்டது என்று கருதினால் அது பிழை. வாக்குப் பதிவுக்கு முந்திய இருநாள்களும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் திட்டமிட்டு ஒதுங்கிக் கொண்டன. தி.மு.க. ஒரு வாக்காளர்க்கு ஓர் ஆயிரம் ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைத் தமிழகமெங்கும் கொடுத்தது. அ.இ.அ.தி.மு.க. நேர்மையின் நிலைக்களன் அன்று. ஆட்சி நடத்தி அடித்த கொள்ளைப்பணம் தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.விடம் இப்போது சேமிப்பில் இல்லை. ஆட்சியை இழந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா! எனவே, அ.இ.அ.தி.மு.க. வாக்காளர்களுக்குக் குறைவாகப் பணம் கொடுத்தது.

 

      தி.மு.க. திணித்த பணத்தை வாங்கிக் கொண்டு அ.இ.அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்தோர் விகிதம் அதிகம். இது புதியப் போக்கு!

 

      துடைத்தெறியப்பட்ட தோல்வியைத் தி.மு.க. சந்தித்ததற்கான காரணங்களை இரண்டு வகையாகக் காணலாம். ஒன்று அமைப்பு வழிப்பட்டவை. மற்றொன்று அரசியல் வழிபட்டவை.

 

      தி.மு.க., கலைஞர் கருணாநிதியின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவில்லை. ஒன்றையொன்று காலைவாரிவிடும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கக் குழுக்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. குடும்பக் குழுக்களின் ஆதிக்கச் சண்டையை அவ்வப்போது சமரசம் செய்து வைக்கும் வேலைதான் கருணாநிதியின் பொதுத் தலைமைக்கான அன்றாட வேலையாக இருக்கிறது. தலைமையில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் போலவே, மாவட்டங்களிலும், அதற்குக் கீழும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் குடும்ப ஆதிக்கமும், அதனால் வீச்சுப்பெற்ற குழுச் சண்டைகளும் தி.மு.க.வை ஆட்டி அலைக்கழித்துவிட்டன.

 

      தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து, கலைஞரின் "உயிரினும் மேலான உடன்பிறப்புகள்" பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக நின்றனர். இந்த விரிசலைக் கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் நடத்தும் குடும்பக் குழுக்களின் ஆதிக்க அரசியல், அவரின் வேண்டுகோள்களையும், கட்டளைகளையும் காலில் போட்டு மிதிக்கும் அளவிற்குக் கழகக் கண்மணிகளுக்குத் துணிச்சல் தந்தன.

 

கழகப் போட்டி வேட்பாளர் நிற்காத தொகுதிகளில், மாவட்ட மற்றும் அதற்குக் கீழே உள்ள தி.மு.க. பிரமுகர்கள் சிலர் தங்கள் கழகத்திற்கு அல்லது கூட்டணிக் கட்சிக்கு இரண்டகம் செய்து எதிரணியினர்க்கு ஆதரவாகக் கீழறுப்பு வேலை செய்தார்கள்.

 

தி.மு.க.கூட்டணியில், தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான உறவில், மோதல்களும் முறிவுகளும் ஏற்பட்டு தேர்தல் நேரத்தில் அக்கட்சிகள் ஒட்டிக் கொண்டன. இக்கட்சிகள் கசப்பைச் சப்புக் கொட்டிக் கொண்டே கைகோத்துச் சென்றனர் மக்களிடம்.

 

காங்கிரசுக் கென்று வாக்கு வங்கி இருந்த காலம் மூப்பனாரோடு முடிந்து விட்டது. கொசுவுக்கு ராஜபிளவை நோய் வந்தது போல, சிறுத்தப் போன காங்கிரசுக்குள் பற்பல குழுப்பிளவுகள். கோயில் மாடுகளைப் போல் திரியும் அக்குழுக்களின் பிரமுகர்கள் கூட்டணி தயவில் அவ்வப்போது தமிழகத் தேர்தலில் மஞ்சள் குளிப்பார்கள்; மணம் பெறுவார்கள். தில்லி அரசியலையும், தில்லி ஆட்சியையும் சார்ந்து தமிழ்நாட்டில் பேரம் பேசி பதவி பெறும் புல்லுருவிச் செடிகள் அப்பிரமுகர்கள்.

 

இந்தக் காங்கிரசுப் பிரமுகர்களின் கீழறுப்பு வேலை இந்தத் தேர்தலில் மிக அதிகம்.

 

மேற்கண்ட கோளாறுகள், தி.மு.க.வின் படுதோல்விக்கான அமைப்பு வழிக் காரணிகள். அதன் அரசியல்வழிக் காரணங்களில் முகாமையானவற்றைப் பின்வருமாறு கூறலாம். அரசியல் காரணங்கள் என்று இங்கு நாம் கூறுபவை, தி.மு.க. ஆட்சி நடத்திய வகையில் ஏற்பட்ட குறைபாடுகள்.

 

கருணாநிதி குடும்பங்களின் ஆதிக்க அரசியல் மற்றும் அவை அடித்த கொள்ளைகள்

கருணாநிதி உருவாக்கி நிலைப்படுத்தியுள்ள வாரிசு அரசியல், அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள யாரும், எத்தனை தகுதிகள் பெற்றிருந்தாலும் கழகத் தலைமைக்கு வர முடியாது என்று வேலி கட்டி வைத்து விட்டது. அடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அண்டிப் பிழைக்கும் அல்லக்கையாக இருந்தால் தான் கழகத்தில் இரண்டாம் நிலைத் தலைவராக வர மாவட்டச் செயலாளராக ஆக முடியும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது.

 

இந்த நிலை கழக உறுப்பினர்களை மட்டுமின்றி, பொது மக்களையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது.

கருணாநிதி முரசொலிமாறன் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்து, பல்வேறு தொழில்களில் புகுந்து அரம்பத்தனம் (ரவுடித்தனம்) செய்து, அத்தொழில்களில் ஏற்கெனவே இருந்து வந்த பலரை அடித்து வீழ்த்தினார்கள்; அத்தொழில்களை விட்டே விரட்டினார்கள்.

 

திரைப்படத்துறை, தொலைக்காட்சித் துறை, கம்பிவிடத் தொலைக்காட்சி, செய்தி ஏடுகள், தாளிகைகள் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. திரைப்படத் துறையில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கூட அக்கட்சிக்கு வாக்களித்திருக்க மாவட்டார்கள். அக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று அஞ்சினார்கள். கருணாநிதியுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ரஜினிகாந்தே, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

 

கருணாநிதி குடும்பத்தாரின் மலைக் கொள்ளை, மணற் கொள்ளை ஆகியவை தமிழகத்தின் இயற்கை வளத்தையே சூறையாடியது.

 

இரண்டாம் அலைக்கற்றை ஊழல், கருணாநிதி குடும்பத்தாரின் பல்லாயிரம் கோடி பகற்கொள்ளையை ஐயத்திற்கிடமில்லாமல் அம்பலப்படுத்தி விட்டது.

 

விலை உயர்வு

விலை உயர்வு நச்சுக்காய்ச்சல் வெப்பம் போல உயர்ந்து வருகிறது. நல்ல அரிசி வாங்கிச் சாப்பிட விரும்பும் நடுத்தர மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ. 18க்கு வாங்கினார்கள். தி.மு.க. ஆட்சியில் அது கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தருவது, அந்த மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது? மற்ற அனைத்துப் பொருள்களின் விலையும் அப்படியே கிடுகிடு என உயர்ந்தது. நடுவண் ஆட்சிக்கு இந்த விலை உயர்வில் முகாமையான பொறுப்பு உண்டு. அங்கேயும் தி.மு.க. ஆளுங்கட்சி தானே!

 

கொழுந்துவிட்டு எரிந்த விலைவாசி உயர்வு என்ற நெருப்பு கருணாநிதி கொடுத்த தொ.கா.பெட்டி,  எரிவளி அடுப்பு போன்ற இலவசங்களைப் பொசுக்கிவிட்டது.

வீட்டிற்குள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு மின்வெட்டால் இருட்டும் புழக்கமும், வெளியில் தொழில், வணிகம், செய்ய முடியாத அளவிற்கு மேலும் மேலும் மோசமடைந்து வந்த மின்வெட்டு!

 

இன இரண்டகம்

 

2009இல் முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் தமிழர்களை குண்டுபோட்டுக் கொன்ற சிங்கள இந்தியக் கூட்டுக் கொலைகாரர்களை, மனிதகுலப் பவைவர்களை, தமிழின அழிப்பாளர்களை ஆதரித்துக் கொண்டே, எதிர்ப்பது போல் நாடகமாடிய கருணாநிதியின் நயவஞ்சகம், இன இரண்டகம் இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழன்-தமிழச்சி நெஞ்சிலும், மனித நேயர் நெஞ்சிலும் நெருப்பாய்க கனன்று கொண்டிருக்கிறது.

 

தமிழக ஆட்சியைப் பயன்படுத்தியும், தில்லி ஆட்சிக்குத் தி.மு.க.வின் துணை தேவைப் பட்டதைப் பயன்படுத்தியும், மெய்யாகவே கருணாநிதி போராடியிருந்தால், போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும். தமிழினத்தைக் காத்திருக்க முடியும். அவ்வாறு காக்க முடியாவிட்டால் தமிழ் மக்களோடு சேர்ந்து உண்மையாகப் போராடி ஈகி ஆகியிருக்கலாம். பசப்பு நாடகங்களை நடத்தித் தமிழினத்தை ஏமாற்றினார். ஏமாற்றியவர் இப்போது ஏமாந்தார்.

 

தமிழின அழிப்பில், காங்கிரசு, தி.மு.க. ஆகியவை வகித்த பங்கு தி.மு.க. அணியின் படுதோல்விக்கான காரணங்களுள் ஒன்று. அதுவே முதன்மைக் காரணி என்று நாம் பிழைபடக் கணிக்க வேண்டியதில்லை.

 

செயலலிதா, மாற்று அரசியல், பொருளியல், கொள்கைகள் கொண்டுள்ளார்  என்பதற்காகவோ அவர் தமிழின உரிமைகளை மீட்பார் என்ற நம்பிக்கையினாலோ, ஊழல் அற்ற நேர்மையாளர் என்பதற்காகவோ அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து விடவில்லை. தி.மு.க. ஆட்சியின் கொடுமை தாங்க முடியாதவர்கள் உடனடித் துயர் நீக்கம் என்ற உளவியலில் செயலலிதாவுக்குப் பேராதரவு தந்துள்ளனர்.

 

செயலலிதாவின் சசிகலாக் குடும்பக் கொடுங்கோன்மை, ஊழல், கொள்ளை, உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி், தமிழினத்திற்கெதிரான காழ்ப்புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், ஒடுக்குமுறை, தொழிற் சங்க உரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது.

தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டி கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவை கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சிலவேறுபாடுகள் இருக்கின்றன.

 

சரியான மாற்று சக்தி இல்லாத போது ஒன்றின் தகிப்பைத் தாங்க முடியாத மக்கள், தகித்து ஓய்ந்துள்ள இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 

ஆயிரம் குற்றங்குறை இருந்தாலும், அனைவர்க்குமான அரசியல் கட்சிகளைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். சாதிக் கட்சிகளை ஓரங்கட்டி விடுகிறார்கள். இது தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் நல்ல அறிகுறி.

 

2004 மக்களவைத் தேர்தலில் ஓர் இடம் கூட அ.இ.அ.தி.மு.க. அணி பெறவில்லை. நாற்பதையும் தி.மு.க. அணி பெற்றது. கிட்டத்தட்ட அந்த நிலை இப்பொழுது நடந்துள்ள தமிழகத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஏற்பட்டுள்ளது.

 

தேர்தல் வெற்றி தோல்விகளால் தேர்தல்ல கட்சியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது.

 

மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அம்மாநிலங்களின் தனித்தனிச் சிறப்புகளுக்கேற்பவே வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அனைத்திந்தியப் போக்கு என்பது இல்லை என்பதனை அது நிரூபித்துள்ளது.

 

புரட்சிரத் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை, அதன் செயற்களம் தேர்தல் அன்று! இனவிடுதலை, இனஉரிமைக்கான போராட்டக் களம்! தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் ஆரவாரம் கொண்டு, அதில் மிதந்து செல்லும் தக்கையன்று தமிழ்த் தேசியம்!

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

Thursday, April 7, 2011

“யாருக்கும் வெட்கமில்லை எவருக்கும் நம் வாக்கில்லை” - த.தே.பொ.க பரப்புரை!

"யாருக்கும் வெட்கமில்லை  எவருக்கும் நம் வாக்கில்லை" - த.தே.பொ.க பரப்புரை!

நடக்கவிருக்கும் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரப்புரை செய்து வருகின்றது. இந்நிலைப்பாட்டை விளக்கும் துண்டறிக்கையை த.தே.பொ.க. வெளியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது.

தேர்தல் சீட்டாட்டம் இந்த முறை மிகவும் கேவலமாகிவிட்டது.  கூட்டணி சேரும் கட்சிகளுக்கிடையே கொடும்பாவி கொளுத்திக் கொண்டார்கள். கட்டித் தழுவிக் கொள்ளப் போனவர்கள் காரி உமிழ்ந்து கொண்டார்கள்.

சாவொன்றும் நிகழாமலே சொந்தக் கட்சிக் கொடியை இறக்கி ஒரு கூட்டத்தினர் அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர். வேறொரு கூட்டத்தினர் தன் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி மேசை நாற்காலிகளை உடைத்தார்கள். மற்றொரு இடத்தில் ஒரு கூட்டத்தினர் தங்களின் கட்சி உறுப்பினர் அட்டைகளை சாலையில் குவித்துக் கொளுத்தினார்கள்.

தன்கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் கட்சியிலும் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள்.  எதிர்க்கட்சியினரால் வீழ்த்தப்படுவதை விட சொந்தக் கட்சிக்காரர்களால் பலர் வீழ்த்தப்பட உள்ளார்கள்.

2011 ஏப்ரல் 13இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நடைபெறும் இத்தனை அலங்கோலங்கள், அருவருப்புக் காட்சிகள் இதற்கு முன் இந்த அளவிற்கு அரங்கேறியதில்லை. இதற்குக் காரணமென்ன?

வினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள். தங்களின் பதவி வெறிக்காக, பண வெறிக்காக கொள்கையற்ற அரசியலை மக்களிடம் விதைதார்கள் தலைவர்கள். அவர்கள் தொலைநோக்கு இலட்சியமோ, சமகாலக் கொள்கைகளோ வைத்துக் கொள்ளவில்லை. வஞ்சகமாக மக்களை ஏமாற்றும் தந்திரம், எதிர்க்கட்சிகள் மீது பகை உணர்சியைத் தூண்டிவிடும் உத்தி, சமூக இலட்சியம் உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலித்தனம், பொய் பேசுதல், இலஞ்ச ஊழலில் ஈடுபடுதல், தனது சொந்தக் கம்பெனியாக, தனது குடும்பக் கம்பெனியாகக் கட்சியை மாற்றிக் கொள்ளுதல் முதலிய சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

தலைவர்களைப்  போலவே தந்திரமிக்க அடுத்த நிலைப் பிரமுகர்கள் உருவானார்கள்.

கூட்டணி என்பது பதவி வேட்டைக்கும் பணவேட்டைக்கும் ஒரு கட்சி இன்னொரு கட்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு என்று ஆனது. அதனால் தான் அந்த உறவுக்குப் பெயர் கொள்கை உடன்பாடு அல்ல, தொகுதி உடன்பாடு! சக்திக்கேற்ற பதவி, பதவிக்கேற்ற உதவி என்று புதிய நிகரமை(சோசலிச)க் கோட்பாட்டை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மாசடைந்த தலைவர்கள் மக்களின் மனநிலையையும் மாசுபடுத்துகிறார்கள். வாக்காளர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பது, கையூட்டின் சட்ட வடிவமாக இலவசங்களை அறிவிப்பது, இதனால் ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட அரசே சாராயக் கடைகளை நடத்தி சமுதாயத்தைச் சீரழிப்பது என்று அவர்கள் எல்லா வகையிலும் மனித அறம், மனித மாண்பு, மனித ஒழுக்கம் அனைத்தையும் கெடுக்கிறார்கள். மனித பலவீனங்களைப் பயன்படுத்தி, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிக்கும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்ச்சியை சிதைத்து இலவசங்களுக்காக ஏங்குவோராக மாற்றுகின்றனர்.

வாக்கு வாங்குவதற்காக, சாதி உணர்ச்சியைத் தூண்டி விட்டார்கள் தேர்தல் கட்சித் தலைவர்கள். இப்பொழுது சாதித் தலைவர்கள் சாதி அமைப்புகளை உருவாக்கி, தேர்தல் கட்சிகளுக்குச் சவாலாக வந்து விட்டார்கள். இதனால் சாதி உணர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரப்பட்டுள்ளது.

இனி சாதிகள் பகை முகாம்களாகவோ அல்லது போட்டி முகாம்களாகவோ செயல்பட்டு தமிழினத்தின் ஒற்றுமையையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கப் போகின்றன.

இவ்வளவுக்குப் பின் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதால்  விலை கொடுத்து இத்தேர்தலில் பங்கெடுப்பதால் வாக்களிப்பதால் என்ன பயன் தமிழ் இனத்திற்குக் கிடைக்கப் போகிறது?.தமிழக சட்டப்பேரவைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

மின்சாரப்பற்றாக்குறையால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத் தேவைக்கு எடுத்துக் கொள்வோம் என்று இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற முடியுமா? முடியாது. குறைந்தது காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்குச் செல்லும் நெய்வேலி மின்சாரத்தையாவது தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லை.

நரிமணம், கோவில்களப்பாள், கமலாபுரம், அடியக்கமங்கலம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை உரிமையைத் தமிழக அரசு எடுத்துக் கொள்ள இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற முடியுமா? முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை (ரயில்வே), பி.எச்.இ.எல்., நெய்வேலி நிறுவனம், நரிமணம் பெட்ரோலிய நிறுவனம், வருமானவரித்துறை, உற்பத்திவரித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள் முதலியவற்றில் 85 விழுக்காடு வேலைகளை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப்பேரவை சட்டமியற்ற முடியுமா?

தமிழகத்தின் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு அனைத்தையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டமியற்றும் அதிகாரம் தமிழக சட்டப் பேரவைக்கு இருக்கிறதா? இல்லை.

மண்ணின் மக்களாகிய தமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக வெளிமாநிலத்தவர் மக்கள் தொகை உயரும் வகையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் புகுந்து வருகிறார்கள். இந்த வெளியார் வெள்ளத்தைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டா? இல்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு ஆகியவற்றின் உரிமைகளை மீட்கும்  வகையில் சட்டம் இயற்றிட தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டா? இல்லை.

வேறு என்ன அதிகாரம் இருக்கிறது?

உரிமைக்குப் போராடும் சொந்த மக்களைத் தாக்க, சிறையில் தள்ள, காவல்துறையைப் பயன்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்க இருக்கிறது.ஒரு மாநகராட்சியை விட சற்றுக் கூடுதல் அதிகாரம் தமிழக சட்டப்பேரவைக்கு இருக்கிறது. அந்தக் குறைந்த அதிகாரத்திற்குள் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது.  இந்தக் கொள்ளைக்குப் பழகிப்போனவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு விசுவாச ஊழியர்களாக மாறிவிடுவார்கள்.

தமிழகச் சட்டமன்றம் மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். மசோதா சட்டமாக வேண்டுமெனில், தில்லியின் கையாளாக உள்ள ஆளுநர் அதில் கையொப்பமிடவேண்டும்.  தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உடன்பாடில்லாத எந்த மசோதாவிலும் ஆளுநர் கையொப்பமிடமாட்டார். 234 சோதாக்கள் கைதூக்கி மசோதாக்கள் நிறைவேற்றும் மன்றம்தான் தமிழகச் சட்டமன்றம். அது சட்டமன்றம் இல்லை. மசோதா மன்றம். தமிழ்நாடு இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ளது.

எனவே தான், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கிறது.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவதற்கான மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களைத் திரட்ட வேண்டும் என்கிறது த.தே.பொ.க.

தமிழ்ப் பெருமக்களே,

இந்தக் கட்சிக்கு மாற்றாக அந்தக் கட்சி என்று தேர்வு செய்யாதீர்கள். இப்பொழுதுள்ள சிக்கல்களுக்குத் தீர்வென்று ஏதாவதொரு கட்சியைத் தேந்தெடுக்க முனையாதீர்கள். எல்லா தேர்தல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! கானல் நீர் தேடித் தேடிக் களைத்துப் போகாதீர்கள்! "யாருக்கும் வெட்கமில்லை, எவருக்கும் நம் வாக்கில்லை" என்று அறிவியுங்கள். தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள்! வாக்களிக்க மறுங்கள்!

 

இவ்வாறு அத்துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, March 24, 2011

கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!

கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!

தமிழக உழவர் முன்னணி அறிக்கை!

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் முக்கிய கட்சிகள் அனைத்தும் வேளாண்மையைப் புறக்கணித்திருப்பது உழவர்களுக்கு வேதனை அளிக்கிறது.

அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று முந்திக் கொண்டு இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கிறார்களே அன்றி தமிழக மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையையும், சிறுதொழில்களையும் பாதுகாப்பதற்கு உருப்படியான திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

தமிழக வேளாண் சந்தையை பாதுகாப்பது, வேளாண் விளைபொருள்களுக்கு
இலாபவிலை உறுதி செய்வது, வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கட்சிகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவை அண்டை மாநிலங்களால் முடக்கப்பட்டு தமிழகம் ஒரு வகை நீர் முற்றுகையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கும், குடிநீர் தேவைக்கும் அடிப்படை ஆதாரமான ஆற்றுநீர் உரிமையை மீட்பதற்கு அண்டை மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் அரசியல்-பொருளியல் அழுத்தம் கொடுப்பது பற்றி இக்கட்சிகள் சிந்திக்கவே இல்லை.

வற்றிய ஆறுகளில் மணல் அள்ளி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து கொள்ளையடிப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன.வேளாண் நிலங்கள் சிறப்பு பொருளியல் மண்டலத்திற்காகவும், அடுக்குமாடி கட்டடங்களுக்காகவும் மிக வேகமாக மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மனை வணிகத்தில் கட்சி வேறுபாடின்றி தேர்தல் தலைவர்கள் அனைத்து மட்டத்திலும் தரகர்களாக செயல்படுகின்றனர்.

வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உலைவைக்கும் மரபீனி மாற்று விதைகளைப்பற்றி இத்தேர்தலில் போட்டியிடும் பெரியகட்சிகள் எதுவும் கண்டுக்கொள்ளவேயில்லை.

ஒரு ரூபாய் அரிசித்திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவை நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் அழுத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

இந்திய அரசு வேளாண் மானியத்தையும், வங்கிக் கடன்களையும் பெருமளவு வெட்டியுள்ள சூழலில் தமிழக உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே குறைந்த வட்டிக்கடனுக்கு சார்ந்து நிற்கும் நிலை உள்ளது.ஆனால் கூட்டுறவு வங்கிகள் வேளாண் கருவிகளை வாங்க கடன் வழங்குவது பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து உழவர்களுக்கு வேளாண் கடன்கள் தாரளமாக வழங்குவது பற்றி கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பெரும்பாலான கட்சிகள் வேளாண்மையையும் உழவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன. இலவ சங்கள் அறிவித்தும் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தும் பதவியைப் பெறுவது என்பது மட்டுமே அவர்கள் கடைபிடிக்கும் அரசியல் பாதையாக உள்ளது. எந்தத் தேர்தல் கட்சியிலும் உழவர்கள் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வலுவுள்ள சக்தியாக இல்லை.ஆனால் கிராமப்புற வாக்காளர்கள் தான் எந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டு உழவர்கள் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் மறந்து இவ்வாறான கட்சிகளில் கரைந்து பிரிந்து கிடப்பதே இந்த அவல நிலைக்கு முதன்மையான காரணமாகும்.

இனியாவது உழவர் பெருமக்கள் இந்தத் தேர்தல் சூதாட்ட அரசியலைப் புரிந்துக் கொண்டு கட்சிகளுக்கு அப்பால் அணிதிரண்டு உரிமைகளை வலியுறுத்தும் மாற்று அரசியல் சக்தியாக மாற வேண்டும்; உழவர்களாய் அணிதிரளவேண்டும் என தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
சி.ஆறுமுகம்,
செயலாளர்,
தமிழக உழவர் முன்னணி

23.03.2011

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT