உடனடிச்செய்திகள்

Monday, September 23, 2013

தமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும் - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


தமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் அறிக்கை

ஈழத் தமிழர்களின் தாயக மாநிலங்களில் ஒன்றான வடக்கு மாநில ஆட்சி மன்றத்திற்கு 21.9.2013 அன்று நடந்த 38 இடங்களுக்கான தேர்தலில் முப்பது இடங்களில் பெரும் வாக்கு வேறுபாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஏழு இடங்களில் இராசபட்சேயின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடத்தில்  வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் செல்லுபடியான 4,43,394 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டணி 3,53,595 (80%) வாக்குகளும், இராசபட்சே கூட்டணி 82,838 (18.38%) வாக்குகளும் முஸ்லிம் காங்கிரசு 6,761 வாக்குகளும் பெற்றுள்ளன.

      இந்த மிகப்பெரும் வெற்றி, தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நேர் வகையாகக் கிடைத்தது அல்ல. “1½ இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்து, அதன் பின் தமிழர் தாயகத்தை இராணுவ வளையத்துக்குள் வைத்து, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்துள்ள இராசபட்சே ஆட்சியை நாங்கள் ஏற்கவில்லை” என்பதை அழுத்தந் திருத்தமாக உலகுக்குத் தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இத் தேர்தலைத் தமிழீழ மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

      சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற உள் கட்டுமான நிறை வேற்றங்களைக் காட்டி வாக்குக் கேட்டது இராசபட்சே அரசு. தாயக விடுதலைக்காக இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து, 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, பல்லாயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டு– பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றோர் ஆக்கப்பட்டு- இரணுவத்தால் சூழப்பட்ட பணயக் கைதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்கள் இக்கொடுமைகளை இழைத்த இராசபட்சே கும்பலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், தாயக உரிமைக்குத்தான் முன்னுரிமை தருவோமே தவிர, சில உள்கட்டுமான வேலைப்பாடுகளுக்கு அல்ல என்பதை உணர்த்தும் வகையிலும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

            ஈழத் தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது. சம்பந்தர்-விக்னேசுவரன் அரசியல் தலைமை உண்மையான தாயக உரிமை மீட்பிற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட தலைமை அன்று என்பது ஈழத்தமிழர்களுக்குத் தெரியும்.

      கட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பாக இருந்த போதிலும் இதைப் பயன்படுத்திப் பன்னாட்டு சமூகத்திற்குத் தங்களின் மன உணர்வையும் – தேவையையும் சனநாயக வழியில் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழ் ஈழ மக்கள்.அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

      ஈழத்தமிழர்களின் இந்தத் தீர்ப்பை இந்தியா மதிக்குமா? கொலைகார இராசபட்சே அரசுடன் கூடிக் குலாவுவதை நிறுத்திக் கொண்டு, 1987 – இல் இலங்கையுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள குறைந்த அளவிலான மாநில உரிமைகளையாவது தமிழ்த் தேசியக் கூட்டணி அரசுக்குப் பெற்றுத் தருமா? வடக்கு – கிழக்கு மாநிலங்களிலிருந்து முற்றாக இராணுவத்தை வெளியேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்குமா? ஈழத்தமிழர்களுக்குக் குடிமை உரிமைகள் கிடைக்க முயலுமா என்பவை நம்முன் உள்ள வினாக்கள்.

      விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்திருந்த பயங்கரவாத அமைப்பு என்ற மாயையிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வெளிவருமா? மக்களின் உண்மையான தலைமைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மெய்மையை இப்போதாவது உணருமா? இராசபட்சே இராணுவக்கும்பல் நடத்திய இன அழிப்புக்குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமா? இவையெல்லாம் விடையிறுக்கப்பட வேண்டிய வினாக்கள்.

      1987 – இல் போடப்பட்ட இராஜீவ் காந்தி- செயவர்த்தனா ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வாரி வழங்கும் அமுதசுரபி     என்று வர்ணிக்கப்பட்டு – விடுதலைப் புலிகள் மீது திணிக்கப்பட்டது. அப்போது 4.8.1987 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரன் அவர்கள் சுதுமலைக் கூட்டத்தில் கூறிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன:

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் சிங்கள இனவாத பூதம் விழுங்கிவிடும்.”


அதே சிங்கள இனவாத பூதம் தான் இப்போதும் இலங்கை அரசில் உள்ளது.

Friday, September 20, 2013

சென்னை திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்பட விழா உண்டா? இல்லையா? தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும் - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்


சென்னை திரைப்பட விழாவில்
தமிழ்த் திரைப்பட விழா உண்டா? இல்லையா?
தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்.

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவை சென்னையில் 21.09.2013 முதல் 24.09.2013 வரை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் சேர்ந்து நடத்துவது பாராட்டிற்குரியது. 21.09.2013 மாலை விழாவைத் தொடக்கிவைத்து தமிழக முதலமைச்சர் அவர்கள் பேருரை ஆற்ற உள்ளதும் வரவேற்கத்தக்கது. அவ்விழாவில் கன்னடத் திரைப்பட விழா, (22.09.2013 - முற்பகல்), தெலுங்குத் திரைப்பட விழா (22.09.2013 - பிற்பகல்), மலையாளத் திரைப்பட விழா (23.09.2013 – முற்பகல்) ஆகியவை நடக்க உள்ளதாகவும், அந்தந்த விழாவிலும் அந்தந்த மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வதாகவும் தமிழக அரசு விளம்பரத்தில் (தினத்தந்தி : 20.09.2013) குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் (24.09.2013) குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் தென் மாநிலங்கள் நான்கின் முதலமைச்சர்கள் உரையாற்றுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரலில்தமிழ்த் திரைப்பட விழாபற்றி குறிப்பேதும் இல்லை. கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்பட விழா போல் அவ்விழாவில் தமிழ்த்திரைப்பட விழா நடைபெறுகிறதா இல்லையா? ஏன் தமிழ்த் திரைப்பட விழா விடுபட்டுள்ளது? மற்ற மாநிலங்களின் அமைச்சர்கள் அவரவர் மொழித் திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் போது, தொடர்புடைய தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்வதாக தமிழகஅரசு விளம்பரத்தில் அறிவிக்கப் படவில்லையே ஏன்?
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தமிழ்த் திரைப்பட விழாவும் இடம்பெற வேண்டும். அதில் மற்ற மாநில அமைச்சர்களைப் போல தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம் : சென்னை

போராடும் பார்வையற்ற மாணவர்களுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்


போராடும் பார்வையற்ற மாணவர்களுடன்
தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

மனித மாண்புள்ள சமுதாயத்துக்கான அடையாளங்களில் ஒன்று மாற்றுத் திறனாளிகளை அச்சமூகம் எவ்வாறு மதிக்கிறது என்பதாகும். மனித நேய ஆட்சிக்கு அடையாளமாகவும் அது அமைகிறது.

ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைத் தமிழக அரசு அணுகும் முறை இங்கு மனித நேய ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாணவர்களும், பட்டதாரி இளையோரும் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பார்வையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைத்து இப்போராட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள்.

அவர்களை அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்க வேண்டிய தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறது. இந்நிலையில் 19.09.2013 அன்று சாலை மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத் தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல் கொடுமையானது. இதனைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

போராடும் பார்வையற்ற திறனாளிகளிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
இடம் : சென்னை                                                                                                                                                          கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சி

Sunday, August 25, 2013

“உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”

“உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற
கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”
புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர்
உண்ணாப் போராட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!










ஆவடியில் இயங்கும் இந்திய அரசுப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான திண்ணூர்தி தொழிற்சாலை (Heavy Vehicles Factory - HVF)யிலும், பல்வேறு அரசுத் தொழில் நிறுவனங்களிலும் 2004ஆம் ஆண்டு தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து, 25.08.2013 ஞாயிறு அன்று ஒருநாள் அடையாளப்பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு நலச்சங்கம் (NPSERA) சார்பில், ஆவடி பேருந்து நிலையம் அருகில்காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்ற இப்போராட்டத்திற்குசங்கத்தின் தலைவர் திருமு.கண்ணன்செயலாளர் திருஇரட்சகராஜா ஆகியோர் தலைமையேற்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ், தமிழ்நாடு ஆசிரியர் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் திருமதி. தமிழ்ச்செல்வி, பத்திரிகையாளர் திரு. டி.எஸ்.எஸ்.மணி, தமிழின மான மீட்பு இயக்கத் தலைவர் திரு. சேக்காடு ஐ.மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

நிறைவாக, மாலையில்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உண்ணாப் போராட்டத்தை பழரசம் வழங்கி முடித்து வைத்து, நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:

“காலை முதல் மாலை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற நாம், ஓய்வூதியத்தின் கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமெனக் கருதுகிறேன்.

வெறும் 33 ரூபாய்க்கு மேலே ஒருவர் சம்பாதித்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலானவர் என வரையறுத்துள்ள இந்தியத் திட்டக்குழுத் துணைத் தலைவராக உள்ள மாண்டேக் சிங் அலுவாலியா, தன்னுடைய அலுவலக கழிப்பறையை சீரமைப்பதற்கு மட்டும் 66 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.

அவர் கேட்கிறார், தொழிலாளர்களுக்கு வெறும் சம்பளம் மட்டும் போதுமே, வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? எதற்காக உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கேட்கிறார். உங்களால் நாட்டுக்கு என்ன செல்வமதிப்பு சேர்க்கப்படுகிறது எனக் கேட்கிறார். இது கோட்பாட்டுப் பிரச்சினை.

ஓய்வூதியம் குறித்த கோட்பாட்டை நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான் அவருக்கு நாம் பதிலளிக்க முடியும். நாம் வாங்குகின்ற சம்பளத்தின் ஒரு பகுதி தான் ஓய்வூதியமாக நமக்கு வழங்கப்படுகின்றது என்ற உண்மையை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரமராக இருந்த போது, இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது போனஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது. நிறுவனத்திற்கு இலாபம் இருந்தால் மட்டும் தான், அதன் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு போனசாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலாபமில்லையெனில் போனஸ் கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்ட போது, நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறப்பானத் தீர்ப்பை வழங்கினார். போனஸ் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் (Deffered Wage) என அவர் தீர்ப்பு வழங்கினார். போனஸ் என்பது சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்பதை அத்தீர்ப்பின் மூலம் அவர் உறுதி செய்தார்.

அதே போல ஓய்வூதியம்(Pension) என்பது உழைப்புச் சக்திக்கான தேய்மானம் (Labour Power depreciation). ஒரு எந்திரம் இருக்கிறதென்றால் அதற்கென்று உள்ள வாராண்டி(Warranty) தனியாக வழங்கப்பட்டும் கூட, இருப்பு நிலைக்குறிப்பில்(Balance Sheet) அதன் தேய்மானமும் குறிப்பிடப்படுகின்றது. கட்டிடத்திற்கு தேய்மான நிதி வழங்கப்படுகிறது. அதே போல, உழைப்புச் சக்தியை வெளியிடும் தொழிலாளர்களுக்கான தேய்மானம் தான் ஓய்வூதியம். இதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டும். இதை எல்லா நிலைகளிலும் தொழிற்சங்கத் தோழர்கள் வலியுறுத்த வேண்டும். இதில் உணருவதில், உணர்த்துவதில் எவ்வித சமரசமும் கூடாது.

ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலையில்(Automated Industry) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, உடல் உழைப்பாக இருக்கட்டும் அல்லது மூளை உழைப்பாக இருக்கட்டும், நாளொன்றுக்கு சராசரியாக 3200 கலோரிகள் சக்தி தேவைப்படுகின்றது. வயது முதிரும் போது இது நாளொன்றுக்கு 2100 ஆக தேய்கிறது.

ஒரு இயந்திரத்திற்கு பதில் இன்னொரு இயந்திரத்தை அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தொழிலாளர்களை அப்படி தூக்கிப்போட்டுவிட முடியாது. எனவே தான், தொழிலாளர் சக்தியின் (Labour power) இந்தத் தேய்மானத்தையே நாம் ஓய்வூதியமாகக் கேட்கிறோம். இந்தக் கோட்பாட்டை நாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

தொழிற்சங்கங்கள் சமூக உணர்வுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. பொதுப் பிரச்சினைகளில், பொது உரிமைச் சிக்கல்களில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும். ஆனால் நடப்பதென்ன? தொழிற்சங்கங்கள் நடைமுறையில் கூட்டு சுயநலமாக (Collective Selfishness) மாறிவிட்டன. தொழிலாளர்களின் இது போன்ற பலவீனங்களை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்ற ஆட்சியாளர்கள், அதற்கென அவர்கள் காலம் எடுத்துக் கொண்டாலும் நம்மை பிளவுபடுத்தி காரியம் சாதிக்கின்றனர்.

அதனால் தான், தொழிற்சங்கங்கள், இரசிகர்களுக்கு ஏற்ப கச்சேரி வாசிக்கும் மன்றங்களாகச் சுருங்கி விட்டன. எனவே, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மட்டுமின்றி, பொதுப் பிரச்சினைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்கின்ற நாம், அதற்கு அடிப்படையான புதிய பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்தாக வேண்டும். அதை எதிர்க்காமல் இதை மட்டும் எதிர்க்க முடியாது. நம்முடைய ஞாயங்களை வலிமையாக உணர்த்த வேண்டும். நாம் போராடுவது வீணல்ல. நம் போராட்டங்களுக்கு வலிமையுண்டு. நம்முடைய ஞாயங்களுக்கும் வலிமையுண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்!”

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இப்போராட்டத்தில், எச்.வி.எப். தொழிலாளர்களும், தமிழுணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்றனர். 

“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!

“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!



தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் சார்பில், 24.08.2013 - காரிக்கிழமை(சனி) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் காலை 9.30 முதல் இரவு 8.30 வரை ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மூன்றாம் அமர்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

Thursday, August 22, 2013

கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில் புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!


கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில்
புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும்,
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான
தோழர் பெ.மணியரசன் அறிக்கை !

ஆடுதாண்டு காவிரி என்று அறியப்பட்டுள்ள மேகத்தாட்டு வனப்பகுதியில், காவிரியின் குறுக்கே 3 நீர்த்தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நேற்று (21.08.2013) பெங்களுருவில் அறிவித்துள்ளார்.

இம்மூன்று நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 50 ஆ.மி.க.(டி.எம்.சி.) என்றும் கூறியுள்ளார். கர்நாடகத்திலிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரைத் தேக்கி, மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாகவும் இவற்றிற்கான செலவு மதிப்பீடு ரூ. 600 கோடி என்றும் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக நேற்று பாசன மற்றும் மின்துறை வல்லுநர்கள் கூட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட்டப் பிறகு, காவிரியில் புதிய அணைகள் கர்நாடகம் கட்டுவதற்கு முழு உரிமையுண்டு எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட மூன்று அணைகள் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும்.

வெள்ளக் காலத்தில் வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தையும் இந்த மூன்று அணைகளும் தேக்கிக் கொள்ளும். 50 டி.எம்.சி. அணை என்பது, இப்பொழுதுள்ள கிருட்டிணராஜசாகர் அணையை விடக் கூடுதல் கொள்ளளவு கொண்டதாகும். கிருட்ஷ்ணராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவு 44 ஆ.மி.க.

கேரளப் பகுதியில் உற்பத்தியாகி வரும் கபினியின் உபரி நீர் முழுவதும் நேரடியாக மேட்டூர் அணைக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்த கபினி அணையின் உபரி நீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்கும் சதித்திட்டம் தான் கர்நாடகம் தீட்டியுள்ள மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்.

கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும், கபினியிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் வரும் உபரி நீர் முழுக்க மேட்டூருக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்நீர் முழுவதையும் தடுத்து தேக்கி வைத்துக் கொள்வதற்காகத்தான் தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவிலுள்ள மேகத்தாட்டுவில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முனைகிறது.

வெள்ளக் காலத்தில் இப்பொழுதுள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீராக 50 ஆ.மி.க. வெளியேறுவற்கு வாய்ப்பில்லை. எனவே, உபரி நீர் முழுவதையும் ஒரு சொட்டுக் கூட தமிழ்நாட்டிற்கு விடாமல் தேக்கிக் கொள்ள புதிய அணைகள் கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உபரித் தண்ணீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ளதென்று அம்மாநில சட்ட அமைச்சர் கூறுவது முழுப்பொய். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 270 ஆ.மி.க. தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் உபரித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த 270 ஆ.மி.க.வையும் தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீரை கொடுத்துவிட்டுத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்திற்கு நடுவண் அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டா இல்லையா என்பதை நடுவண் அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும். ஏனெனில், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத்தான் எல்லா அநீதிகளையும் அட்டூழியங்களையும் கர்நாடகம் இழைத்து வருகின்றது.

அடுத்து, இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கிறதா இல்லையா, தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்திய அரசு அறிவித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டிற்குரிய இப்பொறுப்புகள் இந்திய அரசுக்கு இருக்கிறதென்றால், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இதில் தலையிட்டு, மேகத்தாட்டுவில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்றும் அந்த முன்மொழிவிற்குக் கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அரசு, உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நடுவண் அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வற்புறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு, மேகத்தாட்டுவில் அணைகள் கட்ட முயன்றால் தமிழ்நாட்டிலிருந்து உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மேகத்தாட்டுவுக்கே சென்று, கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுப்போம்! அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்போம் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

Tuesday, August 20, 2013

தமிழீழ ஏதிலிகள் மூவரை நாடு கடத்தும் இந்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறுக! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழீழ ஏதிலிகள் மூவரை நாடு கடத்தும்
இந்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறுக!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாக தமிழீழத் தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் காவு கொள்ளத் துடிப்பதை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரிலிருந்து நாம் உணர்ந்து வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாகத்தான், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்லாண்டு காலமாக இருந்து பின்விடுதலையாகி, தற்போது தாம்பரத்தில் வசித்து வரும் திரு. செந்தூரன், தற்போது திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு. ஈழநேரு, சென்னை புழல் சிறையில் அடைபட்டுள்ள திரு. சவுந்தரராஜன் ஆகிய மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்துகின்ற நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையிலிருந்து உயிர் பிழைத்து தமிழகத்திற்கு வந்த தமிழீழ ஏதிலிகளை, திரும்பவும் இலங்கை அரசின் இனவாதக் கொடுங்கரங்களிடம் ஒப்படைப்ப தென்பது, ஒரு கசாப்புக்கடையில் ஆடுகளை ஒப்படைப்பது போன்றதுதான்; அவர்களது உயிருக்கு தெரிந்தே விளைவிக்கும் தீங்காகும்.

செந்தூரன் உள்ளிட்ட இம்மூவரும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான எவ்விதக் குற்றங்களிலும் இங்கு  ஈடுபடவில்லை. தம்மை பொய் வழக்குகளில் சிறைவைத்திருப்பதைக் கண்டித்தே தொடர்ந்து, அறவழிப் போராட்டங்களை நடத்தினர்.

மார்வாடி, குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் என வந்தவனெல்லாம் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க, பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து தமிழகம் வரும் தமிழீழ ஏதிலிகளுக்கு சிறையும், நாடு கடத்தல் உத்தரவுகளும் வழங்கப்படுகின்றன.

திபெத், பர்மா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு இந்தியாவில் பெரும் சலுகைகள் அளிக்கப்படுவதும், தமிழீழ ஏதிலிகளுக்கு எந்நேரமும் கண்காணிப்பு – கெடுபிடிகளை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தர மறுப்பதும், இந்திய அரசின் தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இந்திய அரசு இம்மூவரையும் நாடு கடத்தும் உத்தரவினை திரும்பப் பெற வேண்டும். தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோரிக்கையை முன்னேடுத்து போராட வேண்டும். இம்மூவரையும் சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டும்! 

இவண், 
                                                                           பெ.மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.


இடம்: தஞ்சை



(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT