உடனடிச்செய்திகள்

Monday, May 9, 2016

“நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழையவிடாதத் தேர்வு!” மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில்தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை 

நுழையவிடாதத் தேர்வு!”


மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான 
புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில்



தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!



மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வு, நுழைவுத் தேர்வு அல்ல! தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழையவிடாதத் தேர்வு!” என, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.


சமூகநீதியை சிதைக்கும் வகையிலும் - மாநில உரிமையைப் பறிக்கும் வகையிலும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில், 06.05.2016 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகில், நடைபெற்றம் இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். தோழர் வெ. கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.

புதுச்சேரி  செயலாளர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ்க் கழகம் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி ஒருங்கிணப்பாளர் தோழர் தமிழன் மீரான், இலக்கியப் பொழில் இயக்கிய மன்றத் தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழ் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. .. பிரதாபசந்திரன், செந்தமிழர் இயக்கம் திரு. .மு. தமிழ்மணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் திரு. தீனா, புதுச்சேரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ.. செகன்நாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பூ.. இளையரசன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் திரு. இரா. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.



ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பின்வருமாறு பேசினார்:


மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும், உண்மையில் இவ்வாறு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியதே இந்திய அரசுதான்!

இந்திய அரசின் அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வுத் திட்டம், வெறும் சமூக நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல! அது ஆரிய சூழ்ச்சி! பல்வேறு தேசிய இனங்கள்மொழிகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்குள், மாநிலங்களின் அதிகாரங்களை ஒடுக்கி, தன்னுடைய மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் முயற்சி இது!

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுதான், உச்ச நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்திய அரசு சில சாக்குபோக்குகளைக் கூறியது. இந்த ஆண்டு வேண்டுமானால் விட்டுவிடுங்கள், ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து அனைத்திந்திய நுழைவுத் தேர்வை நடத்தலாம் என இந்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

இவற்றையெல்லாம் யாரிடம் கலந்து பேசி, உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது?
தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமும் மருத்துவப் பல்கலைக்கழகங்களிடமும் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதன் காரணமாகவும், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளின் காரணமாகவும் ஏற்கெனவே கலைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.). என்ற அமைப்பிடம்தான், இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் கலந்து பேசி அறிவிக்கிறது.

ஏற்கெனவே ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஓர் அமைப்பில், தற்காலிகமாகஇடைக்காலமாக சிலரை வைத்துக் கொண்டு, அதே ஊழல் முறைகேடுகளைக் காரணமாகச் சொல்லி, மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம்முறைகேடுகளை ஒழிக்கிறோம் என்றெல்லாம் கூறி, பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவது அப்பட்டமான மோசடிச் செயலாகும்!

இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்கள்மொழிகளை ஒடுக்குவது, சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியைத் திணிப்பது, சமூகநீதியை அழித்து ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, ஊழல் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது ஆகியவையே இந்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமெனச் சொல்வதெல்லாம் உண்மையான நோக்கமல்ல!

இங்கே தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், பன்னிரெண்டாம் வகுப்பில் மொத்தமுள்ள 200 மதிப்பெண்ணில், 190க்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பைப் பற்றி சிந்திக்க முடியும். 200க்கும் 190க்கும் இடையிலான 10 மதிப்பெண்களுக்கிடையேதான் இங்கு போட்டியே நடைபெறுகிறது.

இந்த மதிப்பெண் போட்டியை வைத்துதான், தமிழ்நாட்டில் நாமக்கல் போன்ற இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளைப் போல, மதிப்பெண் பட்டறைகள் உருவாக்கப்படுகின்றன.

பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 190க்கு மேல் பெறுவதை விட, வேறு என்ன தகுதி மருத்துவக் கல்விக்குத் தேவைப்படுகிறது? இந்திய அரசு நடத்தும் எந்த பொது நுழைவுத் தேர்வு மோசடியில்லாமல் நடக்கிறது?

வடநாட்டிலே நடத்தப்படும் தேர்வுகளில் எந்தளவிற்கு முறைகேடுகள் நடைபெறுகின்றன என நமக்குத் தெரியும். மும்பை போன்ற இடங்களில் தேர்வில் பார்த்து எழுதுவது, பிட் அடிப்பது போன்றவற்றிற்கு தனியார் நிறுவனங்களே உள்ளன.

இங்கே நாம் பேருந்துக்குள் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைப்போம். சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டும் வருவோம். ஒருவர் துண்டு போட்டிருந்தால், இன்னொருவர் அதில் அமர மாட்டார்கள். ஆனால் வடநாட்டிலே, தொடர்வண்டிகளிலே முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுக்குள் திபுதிபுவென ஏறுவார்கள். பயணச்சீட்டு எடுப்பதில் கூட, வடநாட்டவர்களிடம் ஒழுங்கு இருக்காது.

இப்படிப்பட்ட இவர்கள், நமது மருத்துவக் கல்வியை ஒழுங்கமைக்கிறோம் எனச் சொல்லி, தமிழ்நாட்டின் மீது இந்த நுழைவுத் தேர்வை வேண்டுமென்றே வீம்புக்காகத் திணிக்கிறார்கள்.

இந்த நுழைவுத் தேர்வு வெறும் சமூக அநீதி மட்டுமல்ல, மருத்துவக் கல்வியை தரம் உயர்த்தலுக்கும்கூட இது எவ்வகையிலும் பயன்படாது என்பதை உண்மை!
இந்திய அரசின் நடுவண் பாடத்திட்டத்தின் (சி.பி.எஸ்..) அடிப்படையில், இப்பொது நுழைவுத் தேர்வை நடத்தவுள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தைவிட அந்தப் பாடத்திட்டம் உண்மையில் அவ்வளவு தரமானதல்ல. தரமானதென்றால், வடநாட்டவர்கள் ஏன் தமிழ்நாட்டில் மருத்துவம் பெற படையெடுத்து வருகிறார்கள்?

இந்த நுழைவுத் தேர்வை இந்திஆங்கில மொழிகளில் நடத்துவார்களாம். வடநாட்டவர்கள் தங்கள் தாய் மொழியான இந்தியில் தேர்வெழுதி தேறிவிடுவார்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை இந்திஆங்கிலம் இரண்டுமே அயல் மொழிகள்தான்! ஆக, தமிழர்களை ஒட்டுமொத்தப் புறக்கணிக்கவே இந்தத் தேர்வுமுறை நம் மீது வலிந்துத் திணிக்கப்படுகிறது.

இத்தேர்வு முறை வந்தால், தமிழ்வழியில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், இத்தேர்வுகளினால் பின்தங்கி, மருத்துவக் கல்வியில் சேர முடியாத அபாயகரமான நிலை ஏற்படும்.

எனவே இது நுழைவுத் தேர்வல்ல, தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைய விடாதத் தேர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, மாநில நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு நடத்திப் பார்த்துவிட்டுதான், அது வேண்டாம் என பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தற்போது கலந்தாய்வு முறையில் மருத்துவக்கல்விக்கான சேர்க்கை இங்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மருத்துவக் கல்வியின் தரம் சிறிதும் குறையவில்லை என்பதை நாம் நேரடியாகவே காண்கிறோம்.

இப்போது புதிதாக இந்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதால், மருத்துவக் கல்வியின் தரம் உயரப் போவதில்லை. மாறாக, இந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லி புதிது புதிதாக கோச்சிங் சென்டர்கள் உருவாகி, பெற்றோரிடமிருந்து பணம் கறக்கவே இது பயன்படும்.

எனவே, இந்திய அரசு மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது. நயவஞ்சகமானசமூக நீதியை - தேசிய நீதியை - மொழி நீதியை மறுக்கின்ற அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாம் உறுதியுடன் நின்று போராட வேண்டும். இந்திய அரசு தேர்வு நடத்த முன்வந்தாலும், தமிழ்நாடுபுதுச்சேரி அரசுகள் அத்தேர்வை நடத்தவிடக் கூடாது”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் இரா. அழகிரி, தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ்க் கழகம் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி ஒருங்கிணப்பாளர் தோழர் தமிழன் மீரான், இலக்கியப் பொழில் இயக்கிய மன்றத் தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழ் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. .. பிரதாபசந்திரன், செந்தமிழர் இயக்கம் திரு. .மு. தமிழ்மணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் திரு. தீனா, புதுச்சேரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ.. செகன்நாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பூ.. இளையரசன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் திரு. இரா. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் . குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர்கள் . ஆனந்தன், மதியழகன், பெருமாள் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

Friday, May 6, 2016

தனித்தமிழ்நாடு கேட்டால் திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா? “தமிழ் இந்து”வில் பி.ஏ.கிருஷ்ணனின் வஞ்சக வாதத்திற்கு தோழர் பெ.மணியரசன் எதிர்வினை!


தனித்தமிழ்நாடு கேட்டால் திருநெல்வேலியும்  தனிநாடு கேட்குமா?

“தமிழ் இந்து”வில் பி.ஏ.கிருஷ்ணனின் வஞ்சக வாதத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எதிர்வினை!

நாளேடுகளிலும் மற்ற தமிழ் இதழ்களிலும் பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் கட்டுரைகள் எழுதி வருகிறார். பெரும்பாலான கட்டுரைகளில் அவர் தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களைச் சிதைக்கும் வகையிலும் தமிழ் மக்களிடையே பிளவுகளை உண்டாக்கும் வகையிலும் எழுதி வருகிறார். அவ்வப்போது அவற்றை விமர்சித்திள்ளோம்.

தமிழ் இந்து நாளிதழில் 4.5.2016 அன்று “அரசியல் கட்சிகளுக்கு நன்றி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் உத்தியை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார் கிருஷ்ணன்.

அசாம் - விடுதலைக்குப் போராடும் அசாம் விடுதலைக்கூட்டணியில் (ULFA) பிளவுகள் ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார்.

“தமிழ்நாட்டுக்கு அசாம் மிக முக்கியமான பாடத்தைக் கொடுத்திருக்கிறது. பிரிந்து போகத் துடிப்பவர்களிடமிருந்து பிரிந்து போகத் துடிப்பவர்களும் கட்டாயம் இருப்பர். தனித்தமிழ்நாடு கேட்டால், எங்களுக்குத் தனித் திருநெல்வேலி கொடு என்று கேட்பார்கள்; அவர்களுக்குச் சரியாகப் பதில் சொல்லி மீள்வது கடினம்” என்று கூறுகிறார்.

எங்களைப் போன்றவர்கள் தனித் தமிழ்நாடு கோருவதை விமர்சிக்கும் உரிமை அவருக்குண்டு. ஆனால் பொருந்தாத உவமைகளையும், கற்பனை வாதங்களையும் நயவஞ்சகமாகக் கூறித் தமிழர்களிடையே பிளவு உண்டாக்கும் முயற்சி வன்மையான கண்டனத்திற்குரியது.

அசாமில் வெவ்வேறு மொழி பேசும் பழங்குடியினங்கள் சற்றொப்ப எட்டு இருக்கின்றன. அவற்றுள் போடா, கர்பி பழங்குடியினங்கள் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கணிசமான மக்கள் தொகை கொண்டவை. அசாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்த அப்பழங்குடிகள் அதிலிருந்து விலகித் தங்கள் தங்கள் தனித்தாயகத்திற்குப் போராடுகின்றன. இதை எடுத்துக்காட்டி, தனித்தமிழ்நாடு கேட்டால், தமிழ்நாட்டு மாவட்டங்கள் தனிநாடு கேட்கும் என்கிறார்.

இப்பொழுதுள்ள தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரிமுனை வரை தமிழர்களே 85 விழுக்காட்டினர். பிறமொழி பேசுவோரும் தமிழைத் தங்கள் தாய்மொழிப்போல் ஏற்றுக் கொண்ட தமிழ் மக்களே!

1949 லிருந்து 1963 வரை தி.மு.க. தனிநாடு கேட்டுத் தமிழ்மக்களைத் திரட்டிய போது வெகுமக்கள் திரண்டார்கள். 1962 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கை வைத்திருந்த தி.மு.க. 50 தொகுதிகளில் வென்றது. அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி தனிநாடாக வேண்டும், கோவை தனிநாடாக வேண்டும் என்று கோரிக்கை வைத்து எந்த இயக்கமும் தோன்றவும் இல்லை. மக்கள் ஆதரவைப் பெறவும் இல்லை.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு மொழிகள் பேசும் பல பழங்குடி இனமக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்துதான் அசாம் விடுதலை கேட்கிறார்கள்; நாகாலாந்து விடுதலை கேட்கிறார்கள். மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் விடுதலை இயக்கங்கள் அவ்வாறே இயங்குகின்றன. இவற்றில் இணைந்திருந்த சில பழங்குடிகள் பிரிவதும் நடக்கிறது.

 தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடையே பழங்குடி இன அடிப்படையில் பிளவுகள் வரக்காரணம் எதுவுமில்லை. தமிழர் என்போர் வளர்ச்சியடைந்த தேசிய இனமாக (Nationality) விளங்குகின்றனர். அவர்களின் தாய்மொழியான தமிழ் அவர்கள் அனைவர்க்கும் தாய்மொழியாகவும் பொதுமொழியாகவும் வரலாற்று வழியில் வளர்ந்துள்ளது. எனவே தமிழர்களிடையே மண்டல வாரியாகத் தனிநாடு கேட்கும் கோரிக்கை ஒருநாளும் எழாது.

பி.ஏ.கிருட்டிணன் அவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக அவர் பாணியில் ஓர் உவமை சொல்லலாம்.

அண்ணன் அண்ணி ஆதிக்கமும் கொடுமையும் தாங்காமல், திருமணமான தம்பி தனிக்குடித்தனம் போகிறேன், என் பங்கை ஒதுக்கி விடு என்கிறான் – அதற்கு அண்ணன்காரன் “இன்று நீ என்னிடமிருந்து பிரிந்தால் நாளை உன் மனைவி உன்னிடமிருந்து பிரிந்து விடுவாள்” என்று சொன்னானாம்! அந்த அண்ணனைப் போல் பேசுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 3, 2016

தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள்!

தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற
மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள்!


உழைப்பாளர் நாளான மேநாளையொட்டி, தமிழகமெங்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மேநாள் கொடியேற்ற நிகழ்வுகள் நேற்று (01.05.2016) எழுச்சியுடன் நடைபெற்றன.


பூதலூர் ஒன்றியம் 
----------------------------
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில், பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில் மேநாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. பூதலூர் ஒன்றியத்திலுள்ள வன்னியம்பட்டி, ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, டி.பி. சானிடோரியம், பாலையப்பட்டி, நந்தம்பட்டி, சுருசிப்பட்டி, காதாட்டிப்பட்டி, வலம்பக்குடி, மனையேறிப்பட்டி, வெண்டையம்பட்டி, திருவிழாப்பட்டி, புதுக்குடி நரிக்குறவர் காலனி, புதுக்குடி முதன்மைச் சாலை, காமாட்சிபுரம், சமத்துவபுரம், தக்கனூர், நந்தவனப்பட்டி, முத்துவீரன்கண்டையம்பட்டி, வீரப்புடையான் பட்டி, பூதலூர், புதுப்பட்டி, செங்கிப்பட்டி, சானூரப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பேரியக்கக் கொடிகளை முன்னணிச் செயல்பாட்டாளகள் ஏற்றி வைத்தனர்.


ஆச்சாம்பட்டியில், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கக் கொடியைத் தாங்கி அமைக்கப்பட்ட பீடத்தைத் திறந்து வைத்தார். பின்னர், சாணூரப்பட்டியில், பேரியக்க்க் கொடியை ஏற்றி வைத்து, பூதலூரில் பேரியக்க ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் ச. அருள்தாசன் தலைமையில் நடைபெற்ற மேநாள் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில், பேரியக்க மாவட்டச் செயற்குழுத் தோழர் ரெ. கருணாநிதி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தெட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தோழர் செபஸ்டியார், இராசசசேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தஞ்சை நகரம்
---------------------
தஞ்சை நகரில் மேநாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. பேரியக்க தஞ்சை மாநகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி தலைமை தாங்கினார். புதுஆற்றுச் சாலை பேரியக்க அலுவலகம், அண்ணா நகர், முனியாண்டவர் காலனி, கோரிகுளம், கலைஞர் நகர், வடக்கு வாசல், பழைய பேருந்து நிலையம் பழக்கடை ஆகிய இடங்களில் பேரியக்கக் கொடிகளை, பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை ஆகியோர் ஏற்றி வைத்து மேநாள் குறித்து உரையாற்றினர். 

தஞ்சை மாநகரச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரெ. சிவராசு, நகரக்கிளைச் செயலாளர் தோழர் செந்திறல், கலைஞர் நகர் செயலாளர் தோழர் சீனிவாசன், தோழர்கள் இராமதாசு, அப்பண்ணமுத்து க.மு. இராசேந்திரன், அண்ணா காலனி இராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முருகன்குடி
-------------------
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு, பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் அர. கனகசபை தலைமை தாங்கனார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கொடியேற்றி வைத்து, அங்கு நடைபெற்ற மேநாள் சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தோழர் இராமகிருட்டிணன் (தமிழக உழவர் முன்னணி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.



சென்னை
----------------
சென்னையில் பேரியக்கத் தலைமையகம் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நகரில் மேநாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்பற நடைபெற்றது. பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி கொடியேற்றி வைத்து, தலைமையகத்தில் நடைபெற்ற மேநாள் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். பேரியக்க சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் நன்றி கூறினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில் தோழர்கள் செழியன்,நல்ல சிவம், காளிராசு, சுரேசு, முகிலன், பாலசுப்பரமணியன் மகளிர் ஆயம் தோழர் மாதவி, நிலா உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.



திருச்சி
------------
திருச்சியில் மேநாள் கொடியேற்றம் சிறப்புற நடைபெற்றது. அண்ணா வளைவு பகுதியில் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், அரியமங்கலம் பகுதியில் மூத்தத் தோழர் இரெ.சு.மணி, விமான நிலையம் பகுதியில் தோழர் மு.வ. இரத்தினம், இராமச்சந்திரா நகர் பகுதியில் பொறியாளர் சு. செயராமன் ஆகியோர் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்தனர். பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் நா. இராசாரகுநாதன், தோழர்கள் இனியன், இராசாங்கம், காட்டூர் தியாகராசன், வேங்கூர் மு. தியாகராசன், பால்ராசு, அன்புச்செல்வன், கண்ணன், வெள்ளம்மாள், கிருட்டிணமூர்த்தி உள்ளிட்டோரும், பகுதிவாழ் இன உணர்வாளர்களும் பங்கேற்றனர்.



மதுரை
------------
மதுரை செல்லூரில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர் தமிழ்மணி கொடியேற்றி வைத்தார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தோழர் இராசு ஆகியோர் மேநாள் குறித்து உரையாற்றினார். தோழர்கள் மேரி, இளமதி, அழகர், தியாகலிங்கம், கரிகாலன், தங்கப்பழனி, பாசுகர், முருகேசன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஓசூர் 
--------
கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற மேநாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, பேரியக்க ஒசூர் நகரச் செயலாளர் தோழர் முருகேசன் தலைமை தாங்கினார். ஒசூர் அசோக் லேலண்ட் (அலகு – 1) - தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தோழர் ரோம்லட்ஸ், தோழர் மதியழகன் (அலகு - 2), தமிழக உழவர் முன்னணி தமிழகச் செயலாளர் தோழர் தூருவாசன் ஆகியோர் உரையாற்றினர். பாவலர் சங்கரராமன் மேநாள் குறித்து பாவீச்சு நிகழ்த்தினார். நிறைவில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து நிறைவுரையாற்றினார். தோழர் முருகப்பெருமாள் நன்றி கூறினார்.


குடந்தை
--------------
குடந்தையில் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் மேநாள் கொடியேற்றம் நடைபெற்றது. பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.தீந்தமிழன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச. செந்தமிழன், தோழர்கள் ச.செழியன், கார்த்திக் இமயம், அருளானந்தம், ரெ.அன்பழகன், மு.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சாமிமலை
-----------------
குடந்தை வட்டம் சாமிமலை சன்னதித் தெருவில் நடைபெற்ற மேநாள் கொடியயேற்று நிகழ்வுக்கு, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர் ஆசிரியர் இராசேந்திரன் கொடியேற்றி வைத்தார். தோழர்கள் ம.புரட்சி, தண்டபானி, அருண், சிவக்குமார், மு. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தேவராயன்பேட்டை
-------------------------------
பாபநாசம் வட்டம் தேவராயன்பேட்டை மேட்டுத் தெருவில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு, பேரியக்கத் தோழர் பிரபு தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி செயற்பாட்டாளர் தோழர் மனோகரன் கொடியேற்றி வைத்தார். தோழர்கள் சங்கர், பிரபாகரன், புண்ணியமூர்த்தி, முருகானந்தம், குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


திருத்துறைப்பூண்டி
------------------------------
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காமராசர் சிலை அருகில், மே 2 அன்று நடைபெற்ற மேநாள் கொடியேற்றம் மற்றும் மேநாள் சிறப்புக் கூட்டத்திற்கு, பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, பேரியக்க மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தோழர் தனபால் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தோழர் இரமேசு நன்றி கூறினார்.


தஞ்சை ஒன்றியம்
----------------------------
தஞ்சை ஒன்றியத்தில் வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருங்குளம், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மேநாள் கொடியேற்ற நிகழ்வுகளில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சி. முருகையன், வல்லம் ஒன்றியச் செயற்குழு தோழர் வே. தனசேகரன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


ஈரோடு
------------
ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு, பேரியக்க நகரச் செயலாளர் தோழர் வெ. இளங்கோவன் தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் கொடியேற்றி வைத்தார். பேரியக்கத் தோழர் சரவணன் மேநாள் குறித்து உரையாற்றினார்.


சிதம்பரம், தியாகராயர் நகர்(சென்னை) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேநாள் கொடியேற்ற நிகழ்வுகளுக்கு, தேர்தலைக் காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.


Sunday, May 1, 2016

உலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் உழைப்போர் ஆளட்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் மேநாள் வாழ்த்து!


உலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் 
உழைப்போர் ஆளட்டும்!

தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர்
தோழர் கி. வெங்கட்ராமன் மேநாள் வாழ்த்து! 


உலகம் முழுவதும் 130ஆவது மே நாளை கொண்டாடும் பாட்டாளிகளோடு இணைந்து தமிழ்நாட்டிலும் இம் மே நாளை எழுச்சியோடு கொண்டாடும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி சார்பில், புரட்சிகரமான மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்து தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னோடியாக தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள்தான் ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் தலைமையில் மே நாளை 1923ஆம் ஆண்டு கொண்டாடினார்கள். இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதல் ஒழுங்கமைக்கப்பட்டத் தொழிற்சங்கம், ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. முன்முயற்சியில், வாடியா தலைமையில், உருவான ‘மதராஸ் லேபர் யூனியன்’ ஆகும்.

வருங்காலத்திலும் இந்த முன்னோடிப் பாத்திரத்தை வகிப்போம் என தமிழ்நாட்டு உழைப்பாளர்கள் இந்நாளில் உறுதியேற்போம்.

இன்று உழைப்புச் சுரண்டலின் கொடிய வளர்ச்சி நிலையாக உலகமயப் பொருளியல் கோலோச்சுகிறது. இந்த உலகமயம் இயற்கை வளத்தையும், கண்மண் தெரியாமல் சூறையாடுகிறது. ஒட்டுமொத்த மக்களும் உலகமய சந்தைத் தேவைக்காக சுழலும் எந்திரங்களாகவும் சந்தைக்கு உற்பத்தியாகும் பொருள்களை நுகரும் வாடிக்கையாளர்களாகவும் மாற்றப்பட்டுவிட்டார்கள். மண்ணும் நீரும் காற்றும் கேள்விமுறையற்று உறிஞ்சப்பட்டு அவற்றுள் கண்மண் தெரியாமல் நச்சுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

உலகமயம் தன் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு ஏற்ப உலக நாட்டு அரசியலை, ஆட்சி முறையை மாற்றியமைத்துவிட்டது. எல்லா நாட்டு அரசுகளும் உலகமய வேட்டைக்கு ஏற்றாற்போல் தகவமைக்கப்பட்டுவிட்டன. இந்திய அரசும் இதில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் நிற்க முயல்கிறது.

தொழிலாளி வர்க்கம் இதுவரை ஈகங்கள் பல செய்து பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. மே நாள் வீரர்கள் எட்டு மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கும் அரசியல் உரிமை ஆகிய முதன்மை நோக்கங்களுக்காக போராடியதன் அடையாளமாகத்தான் மேநாளைப் படைத்தார்கள். 

இன்று தமிழகத்தில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் எட்டு மணி நேர வேலை என்பது இல்லை. பத்து மணி நேரம் – பன்னிரெண்டு மணி நேரம் என்ற வரம்பற்ற உழைப்புச் சுரண்டல் பொது விதியாகிவிட்டது.

 நிரந்தர வேலை வாய்ப்பு என்பது மறைந்து வருகிறது. எல்லா இடத்திலும் வேலை வாய்ப்பு இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், குறைகூலிக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் மறைமுக வேலையின்மையே தொடர்கிறது.

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்திய அரசு அடுத்தடுத்து சட்டங்களைப் பிறப்பித்து வருகிறது. தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் அடிப்படை சனநாயக உரிமையேகூட, கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை பெற்றிருந்த தொழிற்சங்க உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்கே தொழிலாளர்கள் கடும் போராட்டங்களை நடத்தியாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

தொழிலாளர்களும் ஒட்டுமொத்த மக்களும் யாரோ சிலத் தலைவர்களை அண்டிப் பிழைக்கும் அநாதைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள். தங்கள் கைகளை எதிர்பார்க்கும் பயனாளிக் கூட்டமாக உழைக்கும் மக்கள் இருக்க வேண்டும் என்பதையே அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான தொழிற்சங்கத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்களாக மக்கள் வைக்கப்பட்டிருப்பதைப் போலவே தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர்கள் பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் பங்கேற்பு சனநாயகத்தை மீட்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

உலகமயப் பொருளியலை செயல்படுத்தும் எந்திரமாக இந்திய அரசு விளங்குகிறது. உலகமயத்தை வீழத்துவது என்பது உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க அரசை ஏற்படுத்துவது என்ற பொருள் அல்ல. மாறாக, உலகமயத்திலிருந்து விடுபட்டு உள்ளூர் வளத்தைப் பாதுகாப்பது என்பதாகும்.

உலகமயச் சந்தையிலிருந்து விடுபட்டு, அந்தந்த தேசிய இன சந்தையை, தேசியப் பொருளியலை மீட்டெடுப்பது என்பதே உலகமயத்தை வீழ்த்தும் செயல் முறையாகும். இந்த வரலாற்றுக் கடமையில் தொழிலாளர்கள் முகாமையானப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
தாங்கள் பணிபுரியும் இடங்களில் நிலவும் கான்ட்ராக்ட்மயம், தற்காலிகமயம், வெளிப்பணி முறை (அவுட்சோர்சிங்) ஆகியவற்றை எதிர்த்தும், எந்திரத்தோடு எந்திரமாக பிழியப்படும் நிலையிலிருந்து மீளவும், தொழிலாளர்களின் சனநாயக உரிமையை மீட்கவும் சமரசமற்ற போராட்டத்தை விடாப்பிடியாக நடத்த வேண்டும். வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அழுத்தமானப் போராட்டங்களாக அவை அமைய வேண்டும்.

தொழிற்சங்க இயக்கங்கள் தங்களது அன்றாட சொந்த சிக்கல்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், மேற்சொன்ன தற்காப்புப் போராட்டங்களைக்கூட வெற்றிகரமாக நடத்த முடியாது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும், தொழில் உற்பத்தி முறையும் வெறும் தொழிற்சங்கப் போராட்டங்கள் மட்டும் முழு வெற்றியை ஈட்டித் தராது என்பதைத் தெளிவாக்குகிறது.

தொழிலாளர்கள் தங்களைச் சுற்றி வாழும் மக்கள் சிக்கல்களிலும் கவனம் செலுத்தி அந்தந்த மண்ணின் தேவைக்கேற்ற இலட்சியங்களை முன்னிறுத்தி போராடினால்தான் தங்களுக்குரிய நட்பு ஆற்றல்களையே பெருக்கிக் கொள்ள முடியும். அதுதான் தொழிற்சங்கப் போராட்டத்திற்கே அரணாக அமையும்.

இவ்வாறு மண் உரிமை மீட்பு, மக்கள் உரிமை மீட்புப் போராட்டங்களோடு இணைந்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மறு வார்ப்பு செய்யப்பட வேண்டும். 
பதவி அரசியலின் தொங்கு சதையாகவோ, தொழிற்சங்கக் கிழார்களின் அடிப்பொடி அமைப்பாகவோ, திசை தெரியாமல் வெற்றுக் கூச்சல் எழுப்பும் கூடாரமாகவோ இன்று இருக்கும் நிலையிலிருந்து தொழிற்சங்க இயக்கம் மீட்கப்படுவது முன் தேவையாகிறது.

இந்த முன் தேவையை உடனடியாக நிறைவு செய்து தொழிற்சங்க உரிமையையும் தொழிலாளர் உரிமையையும் பாதுகாத்துக் கொள்வதோடு வரலாறு விதித்திருக்கிற தனது கடமையை செயல்படுத்தும் படை வரிசையாக தொழிலாளி வர்க்கம் எழ வேண்டும்.

இதுதான் இந்த மே நாளில் உழைக்கும் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.

உலகமயம் வீழ...
ஒடுக்குண்ட தேசங்கள் மீள...
உழைப்பாளர்கள் உலகை ஆள...
விழிப்புற்ற எழுவோம்! 
வீறு கொண்டு வெல்வோம்!



தமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் ! தோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து !




தமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்போம் !

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் மே நாள் வாழ்த்து !

இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக மே நாள் கொண்டாடியது தமிழ்நாடு. தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமையாளரான சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் அவர் தோழர்களும் 1923 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் மே நாள் கொண்டாடினர்.

 இந்தியாவிலேயே முதல் முதலாக முறைப்படுத்தப்பட்ட தொழிற்சங்கம் தொடங்கப்பட்ட இடம் சென்னை. தமிழ்த்தென்றல் திரு வி.க. அவர்களும் அவருடைய தோழர்களும் 1918 ஆம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்கம் (Madras Labor Union) தொடங்கினர். 

1917 இரசியப் புரட்சியை இந்தியாவிலேயே முதல் முதலாக வாழ்த்தி வரவேற்றுப் பாடியப் பாவலர் பாரதியார்.

வரலாற்றுப் புகழ்மிக்க விடுதலைப் போர்க்களத்தில் பகைவர்களோடு போராடிக் கொண்டிருந்த காலத்திலும் ஆண்டு தோறும் தமிழீழத்தில் மே நாள் போராளிகளும் மே நாள் எழுச்சி நிகழ்வுகளும் கடைபிடித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

அவ்வாறான பெருமைமிக்கத் தமிழ் மரபின் சிறந்த பிரதிநிதியாய் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 2016 மே நாள் வாழ்த்துகளை உழைக்கும் மக்களுக்கும், இன அடிப்படையில் ஒடுக்கப்பட்டுள்ள தமிழின மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளிகள் மட்டுமின்றி உரிமைக்குப் போராடும் அனைத்து மக்களும் தங்களுக்கான எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் மேதை லெனின்!

காலனி நாடுகளைப் பிடிக்க அந்தக் காலத்தில் கையில் பீரங்கியும், துப்பாக்கியும் கொண்டு வந்தன ஏகாதிபத்தியங்கள். இந்தக் காலத்தில் உலகமயம் பொருளியல் என்ற ஆக்கிரமிப்பு வலையும் வளர்ந்த தொழில் நுட்பமும் கொண்டு வருகின்றன.

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்களை முறியடிப்பது என்பது ஒவ்வோரு தேசிய இனமும் நாடும் தங்கள் தாயகத்தை ஏகாதிபத்தியப் பொருளியல் அண்டாமல் தடுத்துக்கொள்வது தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்களும் அண்டை ஏகாதிபத்தியமான இந்தியாவும் சேர்ந்துதான் நமது பொருளியலைச் சூறையாடுகின்றன.

 நம் உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறிக்கின்றன. நம் வாழ்வியல் – சுற்றுச்சுழல் அனைத்தையும் சீரழித்து வருகின்றன.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் மிகை நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழக் கற்றுக் கொள்ளப் மரபு வழிப்பட்ட நமது சிறந்த வாழ்க்கை முறையை மீட்டல், இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக சமத்துவம், உழைக்கும் மக்கள் உரிமை, பெண்ணுரிமை முதலிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த்தேசியமே நமது உரிமைப் போராட்டத்தின் இலட்சியமாகும்.

உலகெங்கும் கடைபிடிக்கப்படும் உரிமை எழுச்சி நாளான மே 1 இல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தைப் புரிந்து கொள்ளவும் தமிழ்த்தேசிய இலட்சியத்தைக் கையில் ஏந்தவும் முன்வருமாறு கேட்டுக் கொண்டு, மே நாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT