உடனடிச்செய்திகள்

Thursday, August 22, 2019

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டையில் கால்ஸ் மது ஆலையை மூடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயமும், நாம் தமிழர் கட்சியும் திரட்டிய பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இன்று (22.08.2019) காலை, தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டம் - கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கால்ஸ் மது உற்பத்தி ஆலை, கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட பின் கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்ட கிராமங்களின் மக்கள் போதிய குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆழ்குழாய்க் கிணறுகள் வழியாகக் கால்ஸ் நிறுவனம் உறிஞ்சுகிறது. அந்த சாராய ஆலைக்கு அருகில் 600 ஏக்கரில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு வேளாண் விதைப்பண்ணை தண்ணீரில்லாமல் மூடப்பட்டு விட்டது.

கால்ஸ் ஆலை தொடங்கப்பட்டால் இவ்வாறான பாதிப்புகள் வரும் என்று கடந்த 2008இல் சனநாயக வழியில் போராடிய சுற்று வட்ட மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு, சிறையிலடைத்து அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். ஒருவர் மீது நான்கு, ஐந்து வழக்குகள் போட்டுள்ளார்கள். இன்னும் அந்த வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் அலைந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” தலைமையில் கடந்த 14.05.2019 அன்று கல்லாக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட வலியுறுத்தி அவ்வாலை முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் சுற்று வட்ட மக்களும் பங்கேற்று கைதாகினர்.

அதன்பிறபு, நாம் தமிழர் கட்சியினரும் மகளிர் ஆயத்தினரும் இணைந்து கடந்த 28.06.2019லிருந்து 05.07.2019 வரை கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் மக்களிடம் இக்கோரிக்கைகளுக்காக பத்தாயிரம் கையெழுத்துகள் வாங்கினர். இக்கையெழுத்துகள் கொண்ட மனு இன்று (22.08.2019) காலை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி கந்தர்வக்கோட்டை செயலாளர் திரு. செல்வக்குமார், புதுக்கோட்டை நடுவண் செயலாளர் திரு. முருகானந்தம், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் செயற்குழு தோழர் பிருந்தா, தோழர்கள் கோ. செந்தாமரை, த. சத்தியா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அளித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய ஐயா பெ. மணியரசன் தலைமையிலான தோழர்கள், 2008இல் மது ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டுமெனக் கோரினர். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி திரு. டி. பாஸ்கரபாண்டிய் இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து பத்தாயிரம் மக்கள் கையெழுத்துகள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐயா மணியரசன் அவர்கள், “கல்லாக்கோட்டையிலுள்ள கால்ஸ் மது உற்பத்தி ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால், சுற்றுவட்டத்தில் 20 கிராமங்கள் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிநீரும் இல்லை. எனவே, கால்ஸ் மது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாலையைத் தொடங்கக் கூடாது என்று 2008இல் போராடிய மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும். கல்லாக்கோட்டையில் நிலத்தடி நீரின்றி மூடப்பட்டுள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கால்ஸ் மது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, August 20, 2019

நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது! கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை!




“நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் 

பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது!”

கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் 

பேரியக்கக்குழு ஆய்வறிக்கை!



“மலைகளின் அரசி” என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், கடந்த 2019 ஆகத்து இரண்டாம் வாரத்தில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால், தன் இயல்பை இழந்து தவித்து வருகிறது. சற்றொப்ப 300க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களும், தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இப்போதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடு – உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிந்து வர, கடந்த 18.08.2019 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், தோழர்கள் தமிழ்ச்செல்வன், திருவள்ளுவன், ஸ்டீபன், இராசேசுக்குமார் ஆகியோர் ஒரு குழுவாக கூடலூருக்குப் பயணம் மேற்கொண்டோம்.
வழியெங்கும் நிலச்சரிவுகள்
---------------------------------------------
குன்னூரைக் கடந்து ஊட்டியை நோக்கிச் செல்லும் மலைச் சாலைகளிலும், அங்கிருந்து கூடலூர் நோக்கிச் செல்லும் மலைச் சாலைகளிலும், கூடலூரிலிருந்து தேவாலா செல்லும் வரையிலான சாலைகளிலும் என திரும்பிய திசையெங்கும் உள்ள மலைச் சாலைகளில் ஆங்காங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிந்தது. சில இடங்களில் சாலையோர மரங்கள் சரிந்ததுடன், தார்சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அங்கெல்லாம் சாலையில் தடுப்பு வைக்கப்பட்டு, ஊர்திகள் ஒரு வழியாக மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மலைப்பாதையின் பல இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

அனுமாபுரம், பதினாறு, வாளவயல் போன்ற பல இடங்களில் சாலை வளைவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை நேரில் ஆய்வு செய்தோம். வாளவயல் கிராமத்தில், தார்ச்சாலையின் நடுவிலேயே மண் அரிக்கப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. கொளப்பள்ளிச் சாலையில் மிகப்பெரும் அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின்போது அங்கு தன்னார்வப் பணியில் ஈடுபட்ட “கன்சர்வ் எர்த்” அறக்கட்டளைத் தலைவர் இரவிக்குமார், அப்போது தங்கள் குழுவினர் எடுத்த கைப்பேசி படங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
மண் பலமிழந்து நிலச்சரிவு ஏற்படக்கூடும் என ஏற்கெனவே ஊகிக்கப்பட்ட பல சாலை வளைவுகளில், இம்மழைக்கு முன்னதாகவே சாலையைப் பலப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. சில இடங்களில் அப்பணிகள் நடந்து முடிந்திருந்தாலும், சில இடங்களில் அவை பாதியில் நின்று கொண்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவில் இதுபோன்ற பணிகள் முன்னெடுக்கப் பட்டாலும், மழைக்கால சீற்றங்களால் மட்டுமின்றி, சாலைகள், தடுப்புச்சுவர் போன்றவற்றின் தரமற்ற தன்மையாலும் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு என்கின்றனர் அப்பகுதி மக்கள்!
மழைப்பொழிவு அளவு
------------------------------------ 
சென்னையின் ஒரு ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1,383 மில்லி மீட்டர் ஆகும். அதுபோல், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கோவையில் ஓராண்டுக்கு சராசரியாக 618 மில்லி மீட்டர் மழை கிடைக்கிறது. கடந்த ஆகத்து 6 தொடங்கி ஐந்து நாட்களுக்கு – நீலகரி மாவட்டத்தின் அவலாஞ்சி கிராமத்தில் பெய்த மழையோ 2,528 மில்லி மீட்டர்! இதற்கு முன்பு கடந்த 1943இல் கடலூரில் ஒரே நாளில் 570 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளதே மிகப்பெரும் மழைப் பொழிவாகக் கருதப்பட்டு வந்தது.

இப்போது, அதையெல்லாம் முறியடித்து அவலாஞ்சியில் ஒரே நாளில் 911 மில்லி மீட்டர் மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. அவலாஞ்சியில் பெய்த இந்தப் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கூடலூர் மலைக் கிராமங்களின் வீடுகளுக்குள் திடீரெனப் புகுந்ததும், இதன் காரணமாக ஆங்காங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளும்தான் இந்த அவலங்களுக்கு முகாமையான காரணம்!
உயிரிழப்புகள்
----------------------- 
மழைப் பொழிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்பால் ஆறு பேர் இதுவரை இறந்துள்ளனர். உதகை அருகே இத்தலார் வினோபாஜி நகரில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்து சென்னி (அகவை 70) என்ற முதியவர் உயிரிழந்தார். குருத்துக்குளி கிராமத்தில் பணிக்குச் சென்று திரும்பிய விமலா, சுசீலா ஆகிய இரு பெண்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கூடலூர் அருகிலுள்ள நடுவட்டம் இந்திரா நகரில் வீட்டின் மீது மண் சரிந்ததில் அமுதா, அவரது மகள் பாவனா (அகவை 10) ஆகியோர் உயிரிழந்தனர். மஞ்சூர் அருகே காட்டுக்குப்பை பகுதியில் மின்வாரிய ஒப்பந்தப் பணி மேற்கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்ததில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சஜீவ் (அகவை 30) உயிரிழந்தார். அதுபோல், கோவை மாவட்டம் – பொள்ளாச்சி அருகில் மழைப் பொழிவால் வீடு இடிந்து இருவர் பலியாகினர். தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

நீலகிரியின் கூடலூரையொட்டியுள்ள பாலவாடி, சூண்டி, பார்வுட், கல்லறைமூலா, சேரன் நகர் போன்ற பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் நிலைமை சீராகவில்லை. பாதை தடைபட்டுள்ளதால், அங்கெல்லாம் நமது குழு செல்ல இயலவில்லை!
மழைப்பொழிவுக்கு காரணம் என்ன?
--------------------------------------------------------- 
நீலகிரியில் மட்டுமின்றி, இம்மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள – கர்நாடக வனப்பகுதிகளில் பொழிந்த மழைப்பொழிவு அங்கும் இதுபோல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறோம். கேரளாவின் வயநாடு பகுதியில் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கடற்கரை மாவட்டங்களிலும் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக, ஒரே நாளில் அதிகளவிலான மழைப் பொழிவு ஏற்படும் புதிய இயற்கைப் போக்கு உலகெங்கும் எழுந்துள்ளது. மிகப்பெரும் அளவுக்கு புவியின் காற்று வெளி மாசுபட்டு, புவிவெப்பமயமாவதே இதற்கு முதன்மைக் காரணம் என்றாலும், பிற காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
தொல் தமிழர் வாழ்விடமான நீலகிரி
---------------------------------------------------------- 
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பேரழகைப் பார்த்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள்தான், இந்த மாவட்டத்தில் “கான்கிரீட்” கட்டடங்களைக் கட்டி முதன் முதலில் இங்கு பழங்குடி அல்லாத மனிதக் குடியேற்றங்களை ஊக்குவித்தனர். நீலகிரி மலைக்குத் தொடர்பில்லாத தேயிலை, காபி, தைலம் (யுகலிப்டஸ்), இரப்பர் போன்ற பல புதிய வகைப் பயிர்களையும், மரங்களையும் இங்கு கொண்டு வந்தனர். இந்தக் குடியேற்றங்களுக்கு முன்பு வரை, நீலகிரி மாவட்டம் – பல்வேறு பழங்குடியின மக்களின் தாயகப் பகுதியாக விளங்கியது. இப்போதும் அவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ள பல சித்திரக் குறியீடுகள் பாறை ஓவியங்களாக தமிழ்நாட்டின் விழுப்புரம் (கீழ்வாலை), தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டது. பாறை ஓவியங்கள் கிடைத்த மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் முகாமையானது!
கடந்த (2019) சூன் மாதம், நீலகிரியின் கரிக்கையூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறை ஓவியம்தான், தென் இந்தியாவில் கிடைத்த பாறை ஓவியங்களிலேயே மிகப்பெரியது என்கிறார் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவாநந்தம். இவை இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் வரைப் பழமையானவை என்ற செய்தி, நீலகிரி மலைத்தொடரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருவதை விளக்குகிறது.
நீலகிரியில் இப்போதும் வாழ்ந்து வரும் குரும்பர் பழங்குடியின மக்கள், இன்றைக்கும் அதே ஓவிய மரபோடு விளங்குவது இந்த மரபுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. குரும்பர்கள் மட்டுமின்றி, தொதவர், கோத்தர், குறும்பர், பணியர், இருளர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய படுகர் இன மக்களும் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டம் என்பதால், மலையாளிகளும், கன்னடர்களும் கணிசமான அளவில் இங்கு வாழ்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது வறுமை காரணமாக - தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழ் மக்களில் கணிசமானோரை 1948ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட மலையகத் தமிழர்கள் நீலகிரி – கோவை – தேனி போன்ற தேயிலைப் பயிரிடப்பட்ட மலை மாவட்டங்களில் குடியேறினர். அவர்களில் கணிசமானோருக்குப் பணி வாய்ப்பு வழங்கவே 1968இல் தமிழ்நாடு அரசின் தேயிலைக் கழகம் (TANTEA - Tamilnadu Tea Plantation Corporation Limited) உருவானது. நீலகிரியிலுள்ள அரசுத் தேயிலைக் கழகத் தோட்டங்களில் தற்போது மலையகத் தமிழர்கள் கணிசமான அளவில் பணிபுரிகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் தாயகப் பகுதியாக விளங்கும் நீலகிரியில், இன்றைக்கு மண்ணின் மக்களான பழங்குடியினரும், தமிழர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டு மலையாளிகளும், கன்னடர்களும், மார்வாடிகளும் பொருளியல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர். கூடலூரின் முக்கிய வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் மலையாளப் பெயர்கள் பொறிக்கப்படுவது இயல்பாகிவிட்டதை அங்கு காணலாம்.
நீலகிரி மாவட்டத்தின் கணிசமான தனியார் தேயிலைத் தோட்டங்களும், பணப்பயிர் தோட்டங்களும், சொகுசு சுற்றுலா விடுதிகளும், வணிக நிறுவனங்களும் அயலார்க்கே சொந்தமானதாக உள்ளது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் முகாமையான சுற்றுலா நகரங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது.
வரைமுறையற்ற மனித ஆக்கிரமிப்புகள்
மண்ணின் மக்களான பழங்குடியினர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த இப்பகுதிகள், இப்போது மிக மோசமான சூழலியல் சீர்கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. அவ்வப்போது இங்கு நடைபெறும் இயற்கைச் சீற்றங்களுக்கு முகாமையான காரணமாக இதுவே உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட “கான்கிரீட்” கட்டட மரபு, இன்றைக்கு மலையையே தகர்த்துவிட்டு சுற்றுலா விடுதி கட்டும் அளவுக்கு சீரழிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மசினக்குடி, மோயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள், உணவகங்கள் முதலியவை யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருபுறம், நீர்த்தொட்டியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தின் முகாமையான நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்து மாசுபடுவது நடக்கிறது; இன்னொருபுறத்தில், பணப்பயிர் வேளாண்மைக் காகவும், கட்டடக் கட்டுமானங்களுக்காகவும் நீர்நிலைகளும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற மனித அத்துமீறல்களால் நீலகிரியின் மலைகள் தனது சூழலியல் தற்சார்பை மெல்ல இழந்து வருகின்றன. இவ்வாறு, கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2017 வரையிலான 12 ஆண்டுகளில் சற்றொப்ப 32,000 ஹெக்டேர் வனப்பகுதியை இழந்துள்ளது நீலகிரி மாவட்டம்!
நீர்வழித்தடங்கள் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாலும் வெள்ள நீர், பாய்ந்தோடு வழியின்றி வீடுகளையும், விளை நிலங்களையும் விட்டு வைக்காமல் சென்றுள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.
பணப்பயிர் வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்படுவது ஒருபுறம் நடக்க, இன்னொருபுறத்தில் சட்டவிரோதமாக அரிய வகை மரங்கள் வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் நடப்பதாக நீலகிரி சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சோலைக்காடுகள், முட்புதர்காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் எனப் பலவகையான வனப்பகுதிகளும் இவ்வாறு அழிவை சந்தித்து வரும் நிலையில், இது மழைப் பொழிவை குறைப்பதுடன், நீரை உள்ளே தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையை இம்மலைகள் இழந்து விடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், நீலகிரியில் மட்டும் இவ்வாறு நான்காயிரம் ஓடைகள் வற்றி விட்டதாகத் தெரிவிக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் மலைப்பகுதி கட்டுமான விதிமுறை களை மீறிக் கட்டப்பட்ட கட்டுமானங்களின் எண்ணிக்கை 1,337 என நீதிமன்றத்திலேயே தெரிவித்தார் நீலகிரி நகராட்சி ஆணையர் சிவக்குமார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன் பேரில் காட்டையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 39 சொகுசு விடுதிகளை மாவட்ட நிர்வாகம் இழுத்து மூடியது. உதகையிலிருந்து கூடலூர் செல்லும் வழியிலுள்ள டி.ஆர். பசார் என்ற பகுதியில் மலைச்சரிவில் ஆபத்தான முறையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட சொகுசு விடுதியை நாங்கள் நேரில் கண்டோம். இவற்றைக் கண்டவுடன், குளிர்ச்சியான நீலகிரிப் பகுதி இதுபோன்ற அடுக்கடுக்கான கான்க்ரீட் கட்டடங்களால் வெப்ப மண்டலமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழத் தொடங்கியது.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின்போது நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இப்போது நீலகிரியிலும் கிட்டத்தட்ட அதுதான் நடந்துள்ளது. மலைப்பாங்கான சரிவுப் பகுதி என்பதால் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பதும் இங்கு நடக்கிறது. இந்த மழையில் கூட அவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களை எட்டியுள்ள “வளர்ச்சிப் பேரழிவு” நீலகிரியையும் விட்டு வைக்கவில்லை!
மாறுபடும் நிலத்தின் தன்மை
-----------------------------------------------
அந்தந்த திணைக்கும் அந்தந்த தாவரங்கள் என்பது இயற்கையின் திணை ஒழுங்கு. இது மீறப்படுவதை “திணை மயக்கம்” என்று பழந்தமிழர்கள் குறித்தனர். இது அழிவை உண்டாக்கும் என எச்சரித்தனர். நீலகிரியில் இந்த மீறல்தான் “வளர்ச்சி” என்ற பெயரால் நடந்துள்ளது.

மண்ணின் பழங்குடியின மக்களின் அரவணைப்பில் மண்ணுக்கேற்ற மரங்கள் இயல்பாக வளர்ந்திருந்தபோது நீடித்து நின்ற நீலகிரி மலைகள், இப்போது மண்ணுக்குத் தொடர்பில்லாத தேயிலை, தைலம் போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்ட பிறகு தனது இறுக்கத்தன்மையை மெல்ல இழந்து நிற்கின்றன. இந்த நிலையில், திடீரென ஏற்படும் பெருமழைப் பொழிவு நிலத்தை நெகிழ வைத்து விடுகிறது. இதன் காரணமாகவே, ஆங்காங்கு நிலச்சரிவுகளும், குடியிருப்புகள் தகர்வதும் நடந்துள்ளது. பல இடங்களில் தேயிலைத் தோட்டத்தையொட்டி நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம்.
வன உயிரினங்களுக்கு பேராபத்து
ஐ.நா.வின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு, தமிழ்நாடு - கேரளா - கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களையொட்டியுள்ள 5,520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை – 1986ஆம் ஆண்டு “நீலகிரி உயிர்க்கோள் காப்பகம்” (Biosphere reserves) என அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் “உயிர்க்கோள் காப்பகம்” இதுதான்! முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் இங்குதான் அமைந்துள்ளது. அந்தளவிற்கு மிக முகாமையான உயிரியல் பன்மைத்துவம் பேணப்பட வேண்டிய பகுதி இது. ஆனால், மனித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் - வன உயிரினங்களுக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது.

காடுகள் அழிக்கப்பட்டு செயற்கையாக வேளாண் நிலங்கள் உருவாக்கப்படுவதும், விடுதிகளும் கட்டுமானங்களும் விரிவாக்கப்படுவதும் வன உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை அளித்துள்ளது. எனவேதான், அவை மனிதக் குடியிருப்புகளை நோக்கி சீற்றமிடுகின்றன. யானைகள், கரடிகள், காட்டுமாடுகள் ஆகியவை அவ்வப்போது குடியிருப்பு நோக்கி வருவதற்கு உணவுத் தேடலே முதன்மைக் காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்!
யானைகளுக்கு மிகப்பிடித்த உணவான எலுமிச்சை வகைப் புற்கள் (லெமன் கிராஸ்) அழிக்கப்படுவதால், மலை உச்சிகளில் அவை வளரும் இடத்தை நோக்கி யானைகள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக அவ்வப்போது மலைகளிலிருந்து கீழே விழுந்து அவை இறக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அதுபோல், பொதுவாகவே அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மேய்ச்சலில் ஈடுபடும் பழக்கம் கொண்ட காட்டுமாடுகள் இப்போது, உணவு தேடி இரவில் பயணிக்கும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலை இப்படியே நீடிப்பது வன உயிரினங்களுக்கு மட்டுமின்றி, வனத்திற்குமே நல்லதல்ல!
அடர்ந்த வனங்களுக்கு அருகில் உள்ள வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் வேதி உரங்களும், முறைப்படுத்தப்படாத சுற்றுலாவும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. வெறும் 7.5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலாவுக்காக இங்கு குவிகின்றனர். இதனால் ஏற்படும் மாசுபாடு மற்றும் போக்குவரத்துகளால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவை கவனம் கொள்ள வேண்டிய முகாமையான சிக்கலாகும்.
தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைவிட நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறைவுதான் என்றாலும், தற்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ளவை எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும். நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகாமையான உயிர்ச்சூழல் மையங்களில் ஏற்படும் பாதிப்புகள், அங்கிருப்போரை மட்டும் பாதிக்கப்போவதில்லை – அங்கிருந்து நமக்கு வரும் ஆறுகள் சுருங்கி சமவெளி மக்களும் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவோம் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்? - பரிந்துரைகள்
---------------------------------------------------------------- 
1. முதலில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் போர்க்கால வேகத்தில் சாலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

2. அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
3. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.
4. வனப்பகுதிக்குள் வசித்தாலும் கூட, வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசே வீடு கட்டித் தர வேண்டும்.
5. நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகள், நிறுவனங்கள், வீடுகள், வேளாண் நிலங்கள் இருப்பின் அவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். வீடுகள் இழக்கும் ஏழைகளுக்கு பகுதிகளில் வீடு ஒதுக்கித் தரலாம்.
6. நீலகிரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா விடுதிகளுக்கோ, தோட்ட விரிவாக்கத்திற்கோ அனுமதி தரக்கூடாது.
7. பாதுகாக்கப்பட்ட நிலங்களாக உள்ள “பிரிவு 17” வகை நிலங்களில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பட்டா வழங்குவதுடன், இவ்வகை நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனங்களை அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற வேண்டும்.
8. சாலை வளைவுகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, கான்க்ரீட் பலப்படுத்தும் முறைகளை மட்டும் கையாளாமல், மண்ணை இறுக்கமாக்கும் மரங்களை நட்டு வளர்க்கும் பணியையும் வனத்துறை மேற்கொள்ள வேண்டும்.
9. மலையையொட்டி சாய்வான பகுதிகளில் கட்டுமானங்கள் கட்டுவோர், சம உயர வரப்புகள் ஏற்படுத்தியே அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு கட்டாததால் நிலச்சரிவுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இவற்றை மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும்.
10. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்து வரும் சிகை, உண்ணி போன்ற களைத் தாவரங்களை அகற்றி, யானைகளுக்கான உணவாக உள்ள புற்களை வனத்துறையே நடவு செய்ய வேண்டும்.
11. நீலகிரி மாவட்டத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகளையும், இம்மாவட்டத்தின் உயிர்ச்சூழல் முக்கியத்துவத்தையும் இம்மாவட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வைத்து, வளரும் தலைமுறையினரிடம் இதைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.
12. வரைமுறையற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை வரம்புக்குள் கொண்டு வர, வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போல் உள் அனுமதிச் சீட்டு (Inner Line Permit) முறையைக் கொண்டு வர வேண்டும். நெகிழிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.
13. நீலகிரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள், இப்பகுதியை சுற்றுலா மண்டலமாகப் பார்க்காமல் உயிர்ச்சூழல் மண்டலமாகப் பார்க்கும் பொறுப்புணர்வுடன் இங்கு வர வேண்டும்.
14. நீலகிரி மாவட்டத்திற்குள் மண்ணின் பழங்குடியினர், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட பூர்வகுடி மக்கள் தவிர்த்து பிறர் இங்கே குடியேற நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
15. நீலகிரி பெருமழை பாதிப்புகளை சரி செய்ய 200 கோடி ரூபாய் வேண்டுமென தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ வெறும் 30 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளார். இந்தத் தொகை போதுமானதல்ல – கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து பாதிப்புகளைப் பார்வையிட்டு துயர் துடைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கை விரைந்து செயல்படுத்தினால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழலியல் பேராபத்திலிருந்தும் நீலகிரி மலைமகளைப் பாதுகாக்கலாம்!
சூழலை - வனங்களைப் பாதுகாக்கும் பணியில் பொது மக்களையும் ஈடுபடுத்தும் வகையிலான முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இந்நோக்கில், 1800களில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட “நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கம்” தனது பணியிலிருந்து விலகி நிற்பதை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரே அதிலிருந்து விலகும் நிற்கும் அளவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளின் “கேளிக்கை மன்றம்” போல் மாறி நிற்கும் அச்சங்கத்தை ஏன் கலைத்து விடக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே, இதுபோல் இல்லாமல் அந்தந்த வட்டார அளவில் உள்ள பழங்குடியின மக்கள், பூர்வகுடிமக்கள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து புதிய சூழல் காப்பு தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னால் இயன்ற அளவில் மலைவாழ் மக்களுக்கான துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது! நீலகிரியைப் பாதுகாப்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Friday, August 16, 2019

சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!

சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் நான்காவது கூட்டம், 2019 ஆகத்து 15 – 16 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் வட்டம் – குரும்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குரும்பூர் மு. தமிழ்மணி, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், க. முருகன், தை. செயபால், முழுநிலவன் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு தோழர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுக்குழு தோழர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்!

சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 35A மற்றும் 370 ஆகியவை வழங்கியிருந்த சிறப்பு அதிகாரங்களைப் பறித்து, அத்தாயகத்தையே இரண்டாக சிதைத்து கடந்த 05.08.2019 அன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்க சட்ட விரோத நடவடிக்கையாகும்!

தனி நாடாக இருந்து ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியாவில் இணைந்த சம்மு காசுமீரில் அம்மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியத் தலைமையமைச்சர் நேரு ஐ.நா.வில் வழங்கிய உறுதிமொழி ஏற்கெனவே மீறப்பட்ட நிலையில், இப்போது அம் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டது அம்மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்!

சம்மு காசுமீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் நிலையில், பா.ச.க. அரசு இந்த சனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். காசுமீரைப் போல், தமிழ்நாடும் நாளை பிரிக்கப்படலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்!

இந்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக காசுமீர் மக்கள் இராணுவ முற்றுகைக்குள் அறப்போராட்டம் நடத்தி வருவதாகவும், அதை துப்பாக்கிக் குண்டுகளால் இந்திய அரசு ஒடுக்கி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு இப்போக்கைக் கைவிட்டு, உடனடியாக சம்மு காசுமீருக்குப் பறிக்கப்பட்ட அதிகாரத்தைத் திரும்ப வழங்கி, அம்மாநிலத்தை இரண்டாக சிதைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்! அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை மீள அழைத்து, காசுமீரி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வித்திட வேண்டும் என இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 2

புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் குவிக்க, முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்யக்கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பெருமுதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் தொழில் தொடங்க அழைப்பதற்காக 28.08.2019 அன்று வட அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தானியங்கி ஊர்தித் தொழிலகங்கள், வேதியியல் தொழிற்சாலைகள், அணு உலைகள் என்று வெளிநாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழும நிறுவனங்கள் - மக்கள் தொகை மிகை அடர்த்தி உள்ள தமிழ்நாட்டில் நீர் வளத்தை உறிஞ்சி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி விட்டன.

இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 375 பேர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியோ 555 பேர். சென்னையில் 26,553 பேர். திருவள்ளுர் மாவட்டத்தில் 1,098 பேர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 892 பேர் என்று மக்கள் தொகை அடர்த்தி இருக்கிறது. ஆனால், மக்களின் தேவைக்குரிய நீர் வளமோ, நிலப்பரப்போ போதிய அளவு கிடைக்காத நெருக்கடியான பகுதி தமிழ்நாடு. இந்நிலையில், ஏற்கெனவே மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைந்து, கிடைக்கிற குறைவான நீர் வளத்தையும் உறிஞ்சி வருகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவை அதிக அளவில் மாசுபட்டு வருகின்றன.

இப்போது அமெரிக்க நாட்டிலிருந்து பெருங்குழுமத் தொழிற்சாலைகளை புதிதாக இங்கே அழைத்து வரப் போவதாக முதலமைச்சர் கூறுகிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும் என்றும் முதலமைச்சர் கூறுவது உண்மை நிலவரத்திற்கு மாறாக உள்ளது.

ஏற்கெனவே இங்கு உள்ள பெருந்தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு எந்த சட்டப் பாதுகாப்பும் தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கு இட ஒதுக்கீடு ஒழுங்கு செய்யும் வகையில் கர்நாடகம், ஆந்திரம், குசராத், மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வழங்குவதற்கான ஒதுக்கீடு கோரி சட்ட மாதிரி வரைவையும் அணியப்படுத்தி முதலமைச்சர் அவர்களிடம் கடந்த 2018 மார்ச் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வழங்கியிருக்கிறது.

இதுவரை அவ்வாறான சட்ட வரம்புகள் வழங்கப்படாததால், தமிழ்நாடு திறந்த வீடாக மாறி எல்லாத் தொழில்களிலும் இந்திக்காரர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பைக் கைப்பற்றி வரும் நிலை உள்ளது. இப்போக்கு புதிதாக வரப்போகும் தொழிற்சாலைகளிலும் தொடரவே செய்யும். தமிழ்நாட்டில் உரிய கல்வி கற்று வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு சிறு – நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாறான முயற்சியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மற்றபடி அமெரிக்க அரசியல் தலைவர்களை சந்திக்கவும், அங்கு வாழும் தமிழர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பயணம் சென்றால் அது வரவேற்கத்தக்கதே! அமெரிக்கப் பெருங்குழும நிறுவனங்களைத் தமிழ்நாட்டுக்கு அழைக்கும் முயற்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 3

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது!

தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரசு – பா.ச.க. உள்ளிட்ட இந்தியத்தேசிய வெறிக் கட்சிகள், இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டைக் கருதுகின்றன. இதன் வெளிப்பாடாகவே, இந்தியாவின் பிற மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்குக் கேடு என எதிர்க்கப்படும் திட்டங்கள் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றன.

இப்போது, தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் இந்தியாவெங்கும் உள்ள அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் “அணுக்கழிவு மையம்” அமைக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அணுக்கழிவிலிருந்து வெளிப்படும் ஆபத்தானக் கதிரியக்கம் பாதி குறையவே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். வெறும் ஐந்தாண்டுக்கே கூட முறையாகத் திட்டமிட முடியாத அரசுகளை வைத்துக் கொண்டு, இவ்வளவு நீண்ட காலத்திற்கு இவர்கள் அணுக் கழிவைப் பாதுகாப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

ஏற்கெனவே, அணுக்கழிவுகளை வெளியே கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பான எந்தவொரு தொழில்நுட்பமும் தங்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றத்திலேயே கைவிரித்த இந்திய அரசு, அதற்குப் பதிலாக அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்திற்குள்ளேயே நிறுவ உள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்!

எனவே, இந்திய அரசு கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக் கூடாது! ஏற்கெனவே இங்கு நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் இயங்க இயங்க அணுக்கழிவு வந்து கொண்டேதான் இருக்கும் என்பதால், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”ஐ திரும்பப் பெறுக!

இந்திய அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”, ஆரிய சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு பெருங்குழுமங்களுக்கான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப இந்திய அரசிடம் அதிகாரக்குவிப்பு ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

மழலையர் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை உள்ள கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மொழிவழி தேசிய இன மாநிலங்களிடமிருந்து பறித்து இந்திய அரசின் கைகளில் குவிக்க இக்கல்விக் கொள்கை வரைவு வழிசெய்கிறது. 
பல்வேறு கல்வி மரபும், கல்வி வாய்ப்புகளும், பண்பாடும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களின் கல்வித் தேவைகள் பெரிதும் வேறுபடுகின்றன. அந்தந்த மாநில மொழிகளில் கல்வி வழங்க வேண்டிய தேவைகள் பெருகி வருகின்றன. இச்சூழலில் கல்வி அதிகாரம் தில்லியில் குவிக்கப்படுவது மாநில உரிமைப் பறிப்பு மட்டுமின்றி, கல்வியில் நிலவ வேண்டிய பன்மைத்தன்மையை மறுப்பதாகும்.

அனைத்து நிலையிலும் மக்களின் கல்வி உரிமைக்கும், மொழிவழி தேசிய இனங்களுக்கும் எதிராக உள்ள “தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019”-ஐ இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், கல்வி குறித்த அதிகாரத்தை மாநில அரசிற்குத் திரும்ப அளிக்க வேண்டுமென்றும் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் இந்த பிற்போக்கான கல்விக் கொள்கையை முற்றிலும் மறுத்து கல்வி அதிகாரத்தை மாநிலத்திற்கு மீட்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு மாநில அரசைக் கோருகிறது!

தீர்மானம் – 5

தேசிய இன உரிமைகளைப் பறிக்கும் என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்!

அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, தேசிய இன மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிப்பது, சனநாயகம் என்பதை மிகப்பெரும் அளவுக்கு சுருக்குவது என்பதை நோக்கி அடுக்கடுக்கான சட்டங்களை மோடி ஆட்சி பிறப்பித்து வருகிறது.

“தானியங்கி ஊர்தி சட்டத்திருத்தம் – 2019” என்ற பெயரால் மொத்த சாலைப் போக்கு வரத்து அதிகாரத்தையே இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்திய மருத்துவக் கழகச் சட்டத் திருத்தம், மருத்துவப் படிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதோடு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவப் பட்டமே இந்திய அரசு நடத்தும் “தேசிய இறுதித் தேர்வு” (NEXT) அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறது. அதன்பிறகு, இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் முடக்கிப்போடும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.

இதன் அடுத்தகட்டமாக, “இசுலாமியர்களை மட்டுமல்ல, தமிழ் அமைப்புகளையும் ஒடுக்கவே இந்தச்சட்டம்” என்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கொக்கரிப்போடு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட “தேசிய புலனாய்வு முகமை” திருத்தச்சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது, மோடி அரசு. எதிர்த்துப் பேசுவது, ஆதரித்து நடந்து கொள்வது என்பதில் அ.தி.மு.க.வுக்கு சற்றும் சளைத்ததல்ல தி.மு.க. என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இத்திருத்தச்சட்டம் நிறைவேறி இருக்கிறது. இத்திருத்தத்திற்கு இசைவாக “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் - 1967”-இல் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

முற்றிலும் சனநாயக விரோத அடக்குமுறைச் சட்டங்களான என்.ஐ.ஏ., சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்தம் ஆகிய அரச பயங்கரவாத சட்டங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு - மக்கள் இயக்கங்களின்பாலும், மனித உரிமையை நேசிக்கும் ஊடகத்தினர் பாலும் வைக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டங்களுக்கு எதிரான பரந்துபட்ட போராட்டத்தைக் கட்டமைக்க சனநாயக ஆற்றல்களை இப்பொதுக்குழு அழைக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

ஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே!" ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கைக்கு எதிர்வினை! பெ. மணியரசன்.


"ஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே!"


ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 

அறிக்கைக்கு எதிர்வினை!


ஐயா பெ. மணியரசன்,

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்


திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி ( @asiriyarkv ) அவர்கள் “திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று சிலரைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றும், “பெரியார் ஊட்டிய தமிழ்த்தேசிய உணர்வை திசைத்திருப்பும் எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது" என்றும், “இது தான் பெரும் ஆபத்து” என்றும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.



பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை என்பதால், இதுகுறித்து, சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.



“சமத்துவம், சுயமரியாதை என்பது திராவிடம்” என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஆசிரியர். திராவிடம் என்பது ஆரியர் உருவாக்கிப் பயன்படுத்திய சொல்; இப்போதும் அவர்களில் ஒரு சாரார் திராவிட பிராமண சங்கம் வைத்துள்ளார்கள்.

திராவிடம் என்ற பெயரில் மொழியோ, நாடோ, இனமோ இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. 

பெரியார் பரப்புரை செய்த சுயமரியாதை, ஆரிய – பிராமண ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவம் ஆகியவற்றைக் குறிக்க “பெரியார் சிந்தனைகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். (பெரியார் சிந்தனைகள் மீது எமக்குள்ள விமர்சனங்கள் வேறு). திராவிடம் என்ற சொல்லை அருள்கூர்ந்து பயன்படுத்தாதீர்கள். அந்தத் திராவிடம் என்ற சொல் தமிழினத்தை மறைக்கிறது; ஒரு வகையில் மறுக்கிறது. தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் அவரவர் தேசிய இனப்பெயரை நேரடியாகச் சொல்கிறார்கள். தமிழர்கள் மட்டும், அவர்களை எல்லாம் உள்ளடக்கும் பொதுப்பெயர் என்று நீங்கள் கருதும் “திராவிடர்” என்ற பெயரில் அழைக்குமாறு வலியுறுத்துகிறீர்கள். இது ஓரவஞ்சனை இல்லையா?

தமிழறிஞர்களாலும் அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும் “தமிழர் திருநாள்” என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, நீங்கள் தான் வலிந்து “திராவிடர் திருநாள்” என்று அண்மைக் காலமாக அழைத்து வருகிறீர்கள். 

பெரியார் தமிழ்த்தேசிய உணர்வு ஊட்டினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழ்த்தேசியம் என்பதையே ஏற்க மறுத்து வந்த தாங்கள் – அதை ஏற்று அறிக்கை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்!

பெரியார் தமக்கு இந்தியத் தேசியத்தின் மீது மட்டுமல்ல எந்தத் தேசியத்தின் மீதும் நம்பிக்கை இல்லை, தேசியம் என்பது மோசடி; தேசியத்திலிருந்துதான் பாசிசம், நாஜிசம் எல்லாம் தோன்றின் என்றார். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அரண் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளவற்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். “ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக பெரியார் நம் மண்ணில் நிற்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

பா.ச.க. தலைமையில் தி.மு.க., நடுவண் அமைச்சரவையில் கூட்டணி சேர்ந்த போதும் பெரியார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்கப்படாமல்தான் இருந்தாரா? 

அப்படிப்பட்ட தி.மு.க.வை தி.க. ஆதரித்து வரும் போதும் பெரியார் ஆரியத்தால் விழுங்கபடாமல் இருக்கிறாரா? செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரித்ததுடன், அவருக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' பட்டம் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத்தபோதும் ஆரியத்துடன் திராவிட இயக்கம் உறவு கொள்ளாமல் தான் இருந்ததா?

ஆரியம், இந்துத்துவம், இந்துத்தேசியம் ஆகியவற்றின் இரட்டைப்பிள்ளைகள் தாம் காங்கிரசும் பா.ச.க.வும். அத்திசையில் பா.ச.க. தீவிரமாகச் செயல்படும். காங்கிரசு நிதானமாக செயல்படும். இராகுல் காந்திகூட தன் பூணூலை இழுத்து காட்டி, தத்தாத்திரேய கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னை கூறிக்கொண்டார். காங்கிரசுடன், அணிசேர்ந்து கொண்டு, பா.ச.க.வின் ஆரியத்தை - இந்துத்துவாவை திராவிடர் கழகம் எதிர்ப்பதாகச் சொல்வது சரியா?

உங்களின் இந்த அரசியல் நிலைபாடு பெரியாரின் அணுகுமுறைக்கு ஒத்ததுதான். 1949க்குப் பின் தி.மு.க ஒழிப்பில் தீவிரமாக இருந்த பெரியார் 1954 முதல் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக மாறினார். காமராசர் ஆதரவு என்று அதற்கு பேர் பண்ணிக் கொண்டார். நீதிக்கட்சியிலும். திராவிட இயக்கத்திலும் மிகவும் பிரபலமாக விளங்கிய 'சண்டே அப்சர்வர்' பி. பாலசுப்ரமணியம் அவர்கள் 1957 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்சென்னையில் போட்டியிட்டார். அவரைத் தோற்கடித்து காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிப் பெற செய்வதற்காக அத்தொகுதியில் தீவிரப்பரப்புரையில் ஈடுபட்டார் பெரியார். அதே பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவைத் தோற்கடிப்பதற்காக காங்கிரசு வேட்பாளர் சீனிவாசய்யரை ஆதரித்துக் காஞ்சிக்கு சென்று தீவிரப்பரப்புரை செய்தார் பெரியார்.

தமிழ்நாட்டு மக்களால் 1967 இல் வீழ்த்தப்பட்ட காங்கிரசின் வெற்றிக்காக அத்தேர்தலில் (1967) அரும்பாடுபட்டவர் பெரியார். 

1947 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து. அதிகாரம் காங்கிரசு கைக்கு வந்தபோது பெரியார் “இது பார்ப்பன – பனியா ஆட்சி; நமக்கு பகை ஆட்சி என்றார்”. ஆனால் அந்தக் காங்கிரசின் ஆரியச் சார்பை, வடநாட்டுப் பெருமுதலாளிய (பனியா)ச் சார்பை, காங்கிரசுத் தலைமையின் வர்ணசாதி – வர்க்கச்சார்பு உள்ளடக்கத்தை காமராசர் மாற்றிவிட்டாரா? அப்படி பெரியார் கருதினால் அது சமூக அறிவியல் சார்ந்ததா அல்லது சந்தர்ப்பவாதம் சார்ந்ததா? காமராசர் அனைத்திந்திய காங்கிரசுத் தலைவராக கோலோச்சிய காலத்தில் தான் இந்தி திணிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் 300 பேரை இராணுவத்தையும், காவல்துறையையும் ஏவி சுட்டுக்கொன்றது. அப்போதும் பெரியார் காங்கிரசைத் தான் ஆதரித்தார்.

ஆசிரியர் அவர்களே, இவற்றையெல்லாம் குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக நான் குறிப்பிடவில்லை. நடந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். நடப்பவை சரியானவையாக மாறட்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன்.

ஆய்வாளர் அரண் கட்டுரையில், தமிழ்நாட்டில் ஆரியப் பிராமணியம் அன்றாடம் நடத்தும் ஆக்கிரமிப்புகளைப் பற்றி அடுக்கியவற்றை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அவற்றையெல்லாம் பெரியார் கைத்தடியால் மட்டுமே தடுக்க முடியும் என்று அரண் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. ஆரியப்படையை விரட்டியடித்ததை சிறப்பு பட்டமாகப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தமிழ்ச்சான்றோர்கள் வழங்கியுள்ளார்கள். தமிழையும் தமிழ் மன்னர்களையும், இழிவாகப் பேசிய ஆரிய மன்னர்கள் கனகன், விசயன் இருவரையும் வென்று அவர்கள் தலையில் இமயமலைக் கல்லை ஏற்றிவந்து சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. திருவள்ளுவப் பேராசன் ஆரிய வர்ணாசிரமக் கொள்கையை எதிர்த்துப் பிறப்பால் அனைவரும் சமம் என்றார். எவ்வளவு பெரியவர் சொன்னாலும் அது சரியா என்று உன் அறிவைக் கொண்டு உரசிப்பார் என்றார்.

பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட மன்னருக்குப் பொல்லாத நோய்வரும், மக்களுக்குப் பஞ்சமும் பிணியும் ஏற்படும் என்று எச்சரித்தார் திருமூலர். சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் எனப் பிராமண ஆதிக்க எதிர்ப்பு – வேத எதிர்ப்புச் சான்றோர்கள் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

பெரியார் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியதையும், பட்டி தொட்டி எங்கும் தொடர்ந்து பரப்புரை செய்ததையும் இன்றும் தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம். அவருடைய அரசியல் நிலைபாடுகள், தமிழின மறுப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு போன்றவற்றைத்தான் எதிர்க்கிறோம்.

ஆரியப் பிராமணிய ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் இக்காலதத்தில் அவற்றைத் தடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளீர்கள். மிகச்சரி! அருள் கூர்ந்து நீங்கள் “திராவிடம்” என்பதைக் கைவிட்டு பெரியார் சிந்தனைகள் பற்றிப் பேசுங்கள். தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டும் மக்கள் அனைவருக்கும் உரியது; தாய்ப்பால் போன்றது. தமிழ்த்தேசியத்துடன் இணக்கமாக இருங்கள்.

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள அரண் கட்டுரையில், ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், கபடி, சில ஆன்மிக விழாக்கள் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். ஆக்கிரமித்து இந்துத்துவ மயமாக்குகிறது என்று கூறியுள்ளார். தமிழ்த்தேசியம் வளர்ந்தால் இவ்வாறான ஆரிய சூதாட்டங்கள் அரங்கேற முடியாது. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பது ஆரியத்திற்கு நேர் எதிரானது. தமிழர் ஆன்மிகமும் ஆரியத்திற்கு எதிரானது. அதனால்தான் மறைமலையடிகளார், ஞானியார் அடிகள், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழர் ஆன்மிகச் செம்மல்கள் தமிழர் உரிமைச் சிக்கல்களில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டனர். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம், பெரியாரை அயல் இனத்தார் என்று கருதுவதில்லை. அந்தக்கோணத்தில் – அவரை விமர்சிப்பதில்லை. தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் – மற்ற மொழி பேசும் மக்கள் உட்பட அனைவரும் – சம உரிமை உள்ளவர்கள் என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!

பெரியாரையும், மற்றமொழி பேசுவோரையும் விமர்சித்து வரும் இளைஞர்கள் சிலர்க்கு நாங்கள் மேற்படி அறிவுரையை வழங்கி வருகிறோம். ஆரிய – பிராமணிய இந்திய ஏகாதிபத்தியம் தான் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து வருகிறது; அதன் அமைப்புகள் தாம் பா.ச.க., காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ். போன்றவை என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு! 

ஆசிரியர் அவர்களே அன்புகூர்ந்து எங்கள் கருத்துகளையும் எண்ணிப் பாருங்கள்!


தலைமைச் செயலகம், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, August 13, 2019

வீடு - விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியக் குழாய்களா? அனுமதிக்க மாட்டோம்..! தமிழக உழவர் முன்னணி எதிர்ப்பு!


வீடு - விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியக் குழாய்களா? அனுமதிக்க மாட்டோம்..! தமிழக உழவர் முன்னணி எதிர்ப்பு!

கர்நாடக மாநிலம் தேவனகுந்திக்கு பெட்ரோல் கொண்டு செல்வதற்காக, கிருட்டிணகிரி மாவட்டத்தின் இருகூர் வழியாக பெட்ரோலியக் குழாய்ப் பதிப்புத் திட்டத்தை இந்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.


கேரளாவில் செயல்படுத்துவதைப் போல் சாலை வழியாக பெட்ரோலியக் குழாய்களைக் கொண்டு செல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் வீடுகள் - விளைநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த பெட்ரோலியக் குழாய்கள் உழவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும். இதைச் சுட்டிக்காட்டியும் இத்திட்டத்திற்குத் தங்கள் நிலங்களைத் தர மாட்டோம் என தெரிவித்தும் தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன் தலைமையில் இன்று (13.08.2019) காலை கிருட்டிணகிரி மாவட்டத் துணை ஆட்சியர் திரு. ஆர். புஷ்பா அவர்களை நேரில் சந்தித்து உழவர்கள் முறையிட்டனர். த.உ.மு. ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒடையாண்டஹள்ளி, எச்சனஹள்ளி, எதிர்கோட்டை, இராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரிஅக்ரகாரம், கொப்பக்கரை, கோனேரி அக்ரகாரம், லிங்கனம்பட்டி, நடுக்காலம்பட்டி, கடவரஅள்ளி, பண்டப்பட்டி, பந்தாரப்பட்டி, சின்னபண்டப்பட்டி, அயர்னப்பள்ளி, ஆழமரத்துக்கொட்டாய், கொடகாரலஅள்ளி, சீபம், துப்புகானப்பள்ளி, உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் இதில் பங்கேற்று மனு அளித்தனர்.

இந்திய அரசே! வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாயப் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு!

செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி

பேச: 94432 91201, 76670 77075 
முகநூல் : தமிழக உழவர் முன்னணி

Wednesday, August 7, 2019

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” தோழர் க. அருணபாரதி செவ்வி!

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” புதிய தலைமுறை வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி செவ்வி!

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” என புதிய தலைமுறை வார ஏட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு தோழர் க. அருணபாரதி தெரிவித்துள்ளார்.

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து வருவது குறித்து “தடுப்பணை உயரம் பாலாற்றுத் துயரம்!” என்ற தலைப்பில், 08.08.2019 நாளிட்ட “புதிய தலைமுறை” வார ஏடு செய்திக் கட்டுரை வரைந்துள்ளது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதியின் செவ்வி இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுவதாவது :

“இதுபோல பல மாநிலங்கள் ஊடாக ஓடும் நதிகளில் தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். மேலும், எப்போது ஒரு அணை அல்லது தடுப்பணைகளில் கட்டுமான பணிகளைச் செய்தாலும் அதன் கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே விதி. ஆனால் இதையெல்லாம் ஆந்திரா மதிப்பதே இல்லை. மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே இப்போது ஆந்திரா அரசு இந்த பணிகளைச் செய்கிறது. மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஏற்கெனவே இதுபோல ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே குப்பம் என்ற பகுதியில் ஆந்திரா அணைகட்ட முயன்றபோது அதனை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்தினோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. இதையெல்லாம் துளியும் மதிக்காமல் தடுப்பணைகளைக் கட்டுகிறது ஆந்திரம். தமிழக அரசு வழக்கம்போல இந்த விசயத்திலும் மவுனம் காத்து வருகிறது. இதனால், பாலாற்றில் நமது உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னர் சீனிவாசபுரம் என்ற இடத்தில் அணையின் கட்டுமான பணிகளை ஆந்திரம் செய்தபோது மனமுடைந்த தமிழக விவசாயி ஒருவர் அந்த அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பாலாற்றில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும் பட்சத்தில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதன் காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பாலைவனமாகும். இங்குள்ள விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாகும்”.

இவ்வாறு தோழர் க. அருணபாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, உடனடியாகத் தலையிட்டு ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகளுக்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அறிக்கை!
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, 66 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் தேக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை கேட்டிருந்தது. கர்நாடக அரசு அனுப்பிய அவ்வறிக்கையை நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது.

அந்த வல்லுநர் குழு, கர்நாடக அரசு குறிப்பிடும் இடங்களில் மேக்கேத்தாட்டு அணை கட்டினால் 4,996 ஹெக்டேருக்கு (12,345 ஏக்கர்) மேல் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அழிவு ஏற்படும் என்றும், மற்றும் சில முக்கியக் காரணங்களைக் கூறியும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டியதில்லை, மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி தர தேவையில்லை என அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

மேக்கேத்தாட்டு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து கொடுத்த விவரங்களை இந்த வல்லுநர் குழு கணக்கிலெடுத்து ஆராய்ந்ததையும் அப்பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்ட மறுப்புத் தெரிவித்து நடுவண் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சக வல்லுநர் குழு அளித்துள்ள இந்த அறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் பாராட்டுகிறேன்.

அதேவேளை அப்பரிந்துரையில், மேக்கேத்தாட்டு அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையெல்லாம் சொல்லிவிட்டு தமிழ்நாடும், கர்நாடகமும் கூடிப் பேசி இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

காவிரியின் குறுக்கு மேக்கேத்தாட்டில் அணை கட்டினால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது என்ற உண்மையை வெளிப்படுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேக்கேத்தாட்டில் மறியல் செய்வதற்காக கடந்த 07.03.2015 அன்று கர்நாடக எல்லையான தேன்கனிக்கோட்டை யிலிருந்து ஐயாயிரம் உழவர்களும், உணர்வாளர்களும் பேரணியாகப் புறப்பட்டோம். அப்போது, காவல்துறை எங்களை தமிழ்நாடு எல்லையில் மறித்துக் கைது செய்து பள்ளிக்கூடங்களிலும், மண்டபங்களிலும் வைத்திருந்தார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்டக் கூடாதென்று தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராடி வந்துள்ளன.

இந்த நிலையில், மேற்படி வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நடுவண் அரசும் அப்படியே ஏற்று கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டிலோ மற்ற இடங்களிலோ அணை கட்ட கூடாதென நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, இத்துடன் ஓய்ந்து விடாமல் தொடர்ந்து விழிப்பாக இருந்து காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு நிரந்தரத் தடையாணை விதிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

Monday, August 5, 2019

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!
இன்று (05.08.2019) சம்மு காசுமீர் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பை, முற்பகல் உள்துறை அமைச்சர் அமீத்சா மாநிலங்களவையில் வெளியிட்டார். அதில் சம்மு – காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமைகள் கொண்ட உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல, சம்மு – காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதிலும், லடாக் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது!

சம்மு காசுமீர் மக்களின் தேசிய இன உரிமைகளைப் பறித்து பா.ச.க. ஆட்சி நிகழ்த்தியுள்ள சனநாயகப் படுகொலையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆங்கிலேய ஆட்சியின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, சம்மு காசுமீர் மன்னராட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது. இந்திய விடுதலையின் போது, சம்மு காசுமீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள பாக்கித்தான் கேட்டது; இந்தியா தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கேட்டது. பாக்கித்தானிலிருந்து படையெடுத்து வந்த ஒரு பிரிவினர் – காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்தப் பகுதிதான் இப்போது பாக்கித்தானில் உள்ள “ஆசாத் காசுமீர்”. காசுமீரைக் கைப்பற்ற இந்தியப் படைகளும், பாக்கித்தான் படைகளும் மோதிக் கொண்டன.

அந்த நேரத்தில், காசுமீர் மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் அரிசிங் அந்த ஒப்பந்தத்தில் 26.10.1947 இல் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுண்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்துப் போட்டார். அதில் தனி நாடாக இருந்த சம்மு காசுமீரின் தன்னுரிமைக்கு – தன்னாட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.

அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் சவகர்லால் நேரு, “சம்மு காசுமீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காசுமீர் யாருடன் இருப்பது என்பதை காசுமீர் மக்களே முடிவு செய்யட்டும்” என்று உறுதி கூறினார். இந்த உறுதிமொழியை அன்றைய பாக்கித்தான் தலைமையமைச்சர் லியாகத் அலிகானுக்கு நேரு 31.10.1947 அன்று தந்தியாகக் கொடுத்தார். பின்னர், 1953ஆம் ஆண்டு ஆகத்து 20 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேருவும், பாக்கித்தான் தலைமையமைச்சர் முகமது அலி போக்ராவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் காசுமீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாக்கித்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி சம்மு காசுமீரிலும், ஆசாத் காசுமீரிலும் “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்து சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் கொடுத்த தனிச்சிறப்புரிமைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

சம்மு காசுமீர் சட்டப்பேரவை – அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும். சம்மு காசுமீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு. சம்மு காசுமீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்கத் தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் இருக்கின்றன.

இவற்றைவிடக் கூடுதல் உரிமைகள் சம்மு காசுமீருக்கு ஏற்கெனவே இருந்தன. 1952இல் சம்மு காசுமீர் முதலமைச்சர் தலைமையமைச்சர் (பிரதமர்) என்று அழைக்கப்பட்டார். அங்கு ஆளுநர் பதவி இல்லை!

இவற்றையும் இன்னபிற காசுமீர் அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சி பறித்துவிட்டது. இப்போது, இதர இந்திய மாநில அரசுக்குள்ள மிகக்குறைந்த அதிகாரங்களையும் பா.ச.க அரசு பறித்துவிட்டது.

சம்மு காசுமீரை இரண்டு மாநிலங்களாக்கி - யூனியன் பிரதேசமாக மாற்றியதை இப்போது நாம் கண்டிக்கிறோம். இனி, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களையும் இதேபோல் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியின் முன்னோட்டம் தான் சம்மு காசுமீர் பிரிவினையும் உரிமைப்பறிப்பும்!

சம்மு காசுமீரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் சனநாயகக் கட்சி போன்றவை தங்களின் பதவி வெறிக்காக காங்கிரசு, பா.ச.க. கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. இன்னொருபக்கம், மக்களுக்கு வெளியே வெடிகுண்டு விடுதலைப் போராளிகள் நடத்தும் தீவிரவாதச் செயல்கள், மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை தீவிரப்படுத்தத்தான் பயன்படுகின்றன.

காசுமீரின் அவ்விரு கட்சிகளைப் போன்றவைதான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். காசுமீருக்கு ஏற்பட்டது போன்ற ஆபத்துகள் தமிழ்நாட்டிற்கு வந்தால் இவ்விரு கழகங்களாலோ, இவைபோல் முதலமைச்சர் – அமைச்சர் அதிகாரத்துக்காக மூச்சை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளாலோ தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியாது!

பதவி ஆசையற்ற இலட்சியத் தமிழ்த்தேசியத்தின்பால் இலட்சோப இலட்சம் வெகுமக்கள் திரண்டு அறப்போராட்டம் - சனநாயகப் போராட்டம் நடத்தும் ஆற்றல் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளை காக்க முடியும் என்ற படிப்பிணையைத் தமிழர்கள் பெற வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT