உடனடிச்செய்திகள்

Tuesday, February 25, 2014

காவிரி உருவாகும் குடகு வனப்பகுதியில் மரங்களை வெட்டும் இந்திய அரசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்! த.தே.பொ.க. பங்கேற்பு!


காவிரி உருவாகும் குடகு வனப்பகுதியில் மரங்களை வெட்டும் இந்திய அரசைக் கண்டித்து
முற்றுகைப் போராட்டம்! த.தே.பொ.க. பங்கேற்பு!


காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், மடிக்கரையில், காவல்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நேற்று(24.02.2014) பிற்பகல் 12 மணியளவில் மடிக்கரை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற, பெருந்திரளான மக்கள் மடிக்கரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இம்முற்றுகைப் போரட்டத்திற்கு, போராட்டக்குழுத் தலைவர் முனைவர் நஞ்சப்பா தலைமையேற்றார். திரு. நஞ்சுண்டேஸ்வர கவுடா தலைமையிலான விவசாய சங்கம், மைசூர் மாண்டியா விவசாய சங்கம் உள்ளிட்ட கர்நாடக உழவர் சங்கங்களும், தமிழ்நாட்டு விவசாய சங்கங்களும், திரளான குடகு இனப் பொது மக்களும், பல்வேறு கன்னட அமைப்பினரும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இப்போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு காவிரிச் சேனை அமைப்பின் தலைவர் திரு. இரவி செங்கப்பா தலைமை தாங்கினார்.

தமிழகத்திலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அங்கு சென்றிருந்தனர்.

போராட்டத்தின் போது அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசப் , பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, குடகு இன மக்கள், கன்னட இன மக்கள், தமிழின மக்களை வஞ்சிக்கும் விதமாக இந்திய அரசுக்கு சொந்தமான பவர் கிருட் கார்ப்பரேசன் தன்னிச்சையாக கோழிகூட்டிற்கு மின்சாரம் கொண்டு செல்வது என்பது, மூன்று இன மக்களையும் வஞ்சிப்பதாகவே உணர்கிறோம் என்றும், இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, மாற்றுப் பாதையில் இதை இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினார்.

பேராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தோழர்கள் ரமேஷ், மு.வேலாயுதம், சதீஷ் பாபு, நிகரன், தமிழக உழவர் முன்னணி லிங்கனம்பட்டி அமைப்பாளர் தோழர் தூருவாசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.





Thursday, February 20, 2014

மத்திய அரசின் கருத்து தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது பேரறிவாளன் , முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

மத்திய அரசின் கருத்து தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது  பேரறிவாளன் , முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரையும்
தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை



இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கு ஆணையிட்ட தமிழக அரசின் முடிவு கட்சி வேறுபாடின்றி தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் இராகுல் காந்தி இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். தூக்குமர நிழலிலும், சிறைக்குள்ளும் 23 ஆண்டுகள் கழித்தபிறகே இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்பதையும், அதுவும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய சூழலில் இந்த விடுதலை உத்தரவு வந்திருக்கிறது என்பதையும் மறந்து இராகுல் காந்தி தெரிவித்துள்ள எதிர்ப்பு அவரது பழிவாங்கும் வன்மத்தையே காட்டுகிறது.

ஆனால், இந்த வன்ம எதிர்ப்புக்கு இந்திய அரசு துணைபோய்விடுமோ என்ற ஐயம் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என் சிங் அவர்களின் கூற்றின் மூலம் ஏற்படுகிறது. இச் சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்தும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.

குற்றவியல் நடைமுறை சட்ட விதி 432 (1) மற்றும் 433 (A) ன் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் தற்சார்பானது, தங்கு தடையற்றது. குற்றவியல் சட்ட விதி 435 இராசீவ்காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செயல்பட முடியாதது என்ற போதிலும், ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு தமிழக அரசு 435 (1) கீழ் மத்திய அரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவேளை இத்தண்டனைக் குறைப்பை, அதாவது 7 பேரின் விடுதலையை எதிர்க்குமானால் அது தமிழக அரசைக் கட்டுப்படுத்தக் கூடியது அல்ல! அவ்வாறான நடுவண் அரசின் கருத்தை தமிழக அரசு பொருட்படுத்தத் தேவை இல்லை. எந்த தயக்கமும் இன்றி 7 பேரையும் விடுதலை செய்து விடலாம்.

இராசீவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் மேல் முறையிட்டில் உச்ச நீதிமன்றம் இவ் வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று முடிவு அறிவித்துதான் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 14 பேர் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் தடை சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு, விசாரணைக் காலத்தில் சிறையிலிருந்த ஆண்டுகளையே அத்தண்டனைக் காலமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அதாவது இப்போது சிறையில் உள்ள ஏழுபேரும் ஏற்கனெவே விடுதலை செய்யப்பட்ட 19 பேரில் 14 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி உள்ள அதிகபட்ச தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் ஆவர்.

இந் நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் முழு தண்டனையையும் அனுபவித்து முடித்துவிட்டார்கள் எஞ்சி இருப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழுள்ள கொலைக் குற்றத்திற்கான தண்டனை தான்.

இந் நிலையில் மத்திய அரசாங்கத்தின் சட்டம் எதுவும் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கு குறுக்கே வர முடியாது. 432 -ன் கீழ் உள்ள மாநில அரசின் தங்கு தடையற்ற முழு அதிகாரத்தின் படியே இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுக் குழு நடத்தியது என்பதற்காகவே 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

435 (1) –ன்படி மத்திய அரசுடன் கருத்து கேட்டு கலந்து ஆலோசிப்பது அடிப்படையில் ஒரு சட்ட சடங்கு தானே தவிர மத்திய அரசின் கருத்து மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

435(1) மற்றும் 435 (2) ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் இந்த வேறுபாடு துல்லியமாகத் தெளிவாகும் .

மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டனை வழங்கப்பட்டிருந்தால் தான் அவ்வாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசின் கருத்து மேலோங்கும் நிலை இருக்கும். இதைத் தான் 435 (2) கூறுகிறது.

இந்த ஏழுபேரும் மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் உள்ள முழு தண்டனைக் காலத்தையும் சிறையில் அனுபவித்துவிட்டவர்கள். இந்த ஏழுபேரில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிறகு வாழ் நாள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்குபேரும் 433 (A) –ன் படி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கடந்து விட்டவர்கள் ஆவர்.

23 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையின் துடிப்புமிக்க காலத்தை சிறையில் கழித்த இந்த ஏழுபேரை இனியும் தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு மனித நேயத்தின்பால்பட்டது என்பது மட்டுமின்றி அண்மையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சுட்டிக் காட்டியதற்கு இசைவானதும் ஆகும்.
எனவே அறிவித்துள்ள படி மூன்று நாள் கால அவகாசம் முடிந்ததும் இந்த ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.



Tuesday, February 18, 2014

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ! - தோழர்.பெ.மணியரசன் கோரிக்கை!

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் !
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர்.பெ.மணியரசன் கோரிக்கை!

மரண தண்டனையை ஒழித்துகட்டும் திசையில் பெரும் அடியெடுப்பு வைத்ததுபோல்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் தலைமையில் உள்ள மூன்று  நீதிபதிகள்  கொண்ட அமர்வு பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோர் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிற்றை அறுத்து வீசி  வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

மூன்று தமிழர் உயிர்காப்பு என்ற மகிழ்ச்சியுடன் இனி மரணதண்டனை என்பது ஒழிந்துபோகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டிய வகையிலும் இந்தத் தீர்ப்பு தமிழின உணர்வாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் மன மகிழ்வை உண்டாக்கியிருக்கிறது. உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் சிறப்புகளில்  இன்னொரு முக்கியமான கூறு உள்ளது. ஏற்கெனவே வாழ்நாள் தண்டனைப் பற்றி உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் வாழ் நாள் தண்டனையென்றால்  வாழ் நாள் முழுவதும் சிறையில் கழிப்பதுதான் என்று கூறியிருந்தார்கள். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அந்தக் கருத்து  நீக்கப்பட்டுவிட்டது.  மாநில அரசு இராசீவ் காந்தி கொலைவழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ஆய்வு செய்து இவர்களை விடுதலை செய்ய   முடிவு செய்தால் அவ்வாறு விடுதலை செய்துகொள்ளலாம் என்று இத்தீர்ப்பு கூறுகிறது. இதன்படி தமிழக முதலைமைச்சர் அவர்கள் ஆய்வுசெய்து மரணதண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன்  ஆகிய மூவரையும் ஏற்கனவே வாழ் நாள் தண்டனை சிறையிலுள்ள நளினி, இராபட் பயாஸ்,  செயக்குமார் , அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய நாள்வரையும் ஆக மொத்தம் ஏழுபேரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான அதிகாரத்தை தமிழக அரசுக்கு அரசமைப்புச் சட்டக் கூறு 161 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விதி 432 ஆகியவை வழங்குகின்றன. இந்த சட்ட விதிகளைப் பயன்படுத்தி  ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய அரசின் கீழ் இயங்கும் நடுவண் புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) இராசீவ் காந்திக் கொலைவழக்கை ஒருபக்கச் சார்போடு விசாரித்து சாட்சியங்களை திரித்து வழக்கு புனைந்தது என்பது அண்மையில் அம்பலமானது.

ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ.அதிகாரி தியாகராசன், பேரறிவாளன் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் என் விருப்பப்படி பதிவு செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  

அடுத்து இந்த வழக்கில்  நான்கு பேருக்கான மரண தண்டனையை உறுதி செய்த உச்ச  நீதிமன்ற அமர்வுக்கு தலைமைத் தாங்கிய நீதிபதி கே.ட்டி.தாமஸ் அவர்கள்  இராசிவ் கொலை வழக்கின்  குற்றப்புலனாய்வு அறிக்கையில் உள்ள சில முரண்பாடுகளையும், இட்டு நிரப்ப முடியாத இடைவெளிகளையும் தாங்கள் கவனிக்கத் தவறியதாக இப்போது கூறியுள்ளார்.  எனவே இப்படிபட்ட அநீதி இழைக்கபட்டு 23 ஆண்டுகள் அப்பாவித் தமிழர்கள் 7 பேர் சிறைக்கொட்டடியில் துண்புற்றுகொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடிரூபாய் இந்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இதே வழக்கில் தடா நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனெவே விடுதலைசெய்யபட்ட 19 பேருக்கும் தலா 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.                      


இடம் : தஞ்சை
 

பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Friday, February 14, 2014

சென்னையில் ஐ.நா. அலுவகம் முற்றுகை : த.தே.பொ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!


சென்னையில் ஐ.நா. அலுவகம் முற்றுகை! முற்றுகையில் ஈடுபட்ட த.தே.பொ.க. உள்ளிட்ட
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
 



தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்கக் கோரி, 12.02.2009 அன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைமை அலுவலகம் முன்பு தமிழீழத் தமிழர் முருகதாசன் அவர்கள், தன்னுடலை தீயிட்டுக் கொண்டு வீரமரணமடைந்தார். அவரது நினைவு நாளான இன்று 12.02.2014, தமிழீழ இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதோடு மட்டுமின்றி அதை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்ட ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த, மே பதினேழு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பல்வேறு அமைப்புகளின் பங்களிப்போடு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற அம்முற்றுகைப் போராட்டத்திற்க, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்றார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க அமைப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்களும், திரளான தமிழுணர்வாளர்களும், மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், த.தே.பொ.க சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தோழர் பிச்சைமுத்து, தாம்பரம் தமிழக இளைஞர் முன்னனிச் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் நல்லன்.கோ, இரமேசு உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் முற்றுகையில் ஈடுபட்டு, ஐ.நா. கொடியை எரித்து கைதாகியுள்ளனர்.

தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய முதன்மைக் கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

முற்றுகையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்துள்ள காவல்துறையினர், தற்போது அவர்களை திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் உள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்த  அனைத்து தோழர்களையும் மாலை 6.00 மணியளவில் விடுதலை செய்தனர்.


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Monday, February 10, 2014

மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!" தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம்!


மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு:
"தமிழினமே தஞ்சையில் திரள்க!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுக்குழுவில் தீர்மானம்!



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கட்சித் தலைமையகத்தில் 09.02.2014 ஞாயிறு முழுநாள் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தோழர் உதயன், க.அருணபாரதி (சென்னை), குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், நா.வைகறை (தஞ்சை), அ.ஆனந்தன் (மதுரை), கோ.மாரிமுத்து (ஓசூர்), க.முருகன் (பெண்ணாடம்), மு.தமிழ்மணி (தூத்துக்குடி), க.பாண்டியன் (நெல்லை), விளவை இராசேந்திரன் (கோவை), கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம்), த.கவித்துவன் (திருச்சி) உள்ளிட்ட கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இயற்கை வேளாண் அறிஞர் திரு. கோ.நம்மாழ்வார், பெரியார் பெருந்தொண்டர் தோழர் திருவாரூர் தங்கராசு, கல்பாக்கம் தமிழின உணர்வாளர் திரு. சு.முத்து ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தஞ்சையில் மார்ச்சு 1 அன்று, நடைபெறும் 'காவிரி எழுச்சி மாநாட்'டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமுமான காவிரி ஆற்று நீர் உரிமையை முடக்க கர்நாடகம், எல்லா சட்டங்களையும் மீறி இயங்கிக் கொண்டுள்ளது. கட்சிகள் கடந்து கன்னடர்கள் ஓரணியில் நிற்கின்றனர். இந்திய அரசு தனக்குப் பக்கமலமாக இருக்கிறது என்ற துணிச்சலில், புதிதாக 3 அணைகள் கட்டி  தமிழகத்திற்கு மழைக்காலத்தில் வடிந்து வரும் உபரித் தண்ணீரைக் கூட தடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க தமிழினம் ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரும் 2014 மார்ச்சு 1 அன்று, தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 'காவிரி எழுச்சி மாநாடு' நடைபெறுகின்றது. இம்மாநாட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதுடன், இம்மாநாட்டிற்குத் தமிழ் மக்களை பெருந்திரளாகத் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

  1. காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசே கைவிடுக!
      காவிரி ஆறு உற்பத்தியாகும் கூடகு மலைப்பகுதியில், இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் (Power Grid corporation of India), கர்நாடகாவின் மைசூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையில் 400 கிலோ வாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் வழியே, சற்றொப்ப 55 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும் இப்பாதை காரணமாக சற்றொப்ப 1 இலட்சம் மரங்கள் வெட்டப்படும் பேரபாயம் உள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் அளவில் மின் பாதை அமைக்கப்பட்டு சற்றொப்ப 2000 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்படுவதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் சூழலியல் வெற்றிடமும், சூழலியல் சமன்பாட்டுச் சீர்குலைவும், ஏற்பட்டு காவிரி ஊற்று நீரைப் பெருமளவில் பாதிக்கும். குடகு, தமிழகம், கர்நாடகம் என காவிரி ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு வாழும் 8 கோடி மக்களின் வாழ்வுரிமையையே இது மறைமுகமாகப் பறித்தெடுக்கும். மேலும், இவ்வனப்பகுதியையே நம்பி வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை இழப்பது, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டுள்ள வனவிலங்கு – மனிதர் மோதலைத் தீவிரப்படுத்தும். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, குடகு வாழ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தை இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும். என வலியுறுத்துகிறது

  1. கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் புதிதாக அணுஉலைகளைத் தொடங்காதே!

ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரே சவக்குழியாக இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள், புதிதாக 2 அணுஉலைகளை இயக்க இந்திய அரசு அணுசக்தித்துறை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடி வரும் இடிந்தகரை மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், புதிய அணுஉலைகளை அங்கு வேண்டுமென்றே திணிப்பது, மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தும் எதேச்சாதிகாரப் போக்காகும். எனவே, மேலும் மேலும் இங்கு அணுஉலைகளைத் திணிக்கும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்புதிய அணு உலைகளை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறது.  

  1. தமிழினப்  படுகொலையாளிகளான இராசபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை கோரி, மார்ச்சு 3 - ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில் இந்திய அரசு தனித்தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத்திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடயங்களுக்கும் சென்று பார்த்தபோது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் வரும் மார்ச்சு 3 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவைக் கூட்டம் கூடுதல் முகாமை பெறுகிறது. ஈழத்தமிழர் இனஅழிப்பை வெறும் போர்க்குற்றம் எனச் சுருக்கியும், இலங்கை  அரசக் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வட அமெரிக்கா முன்வைத்த சூழ்ச்சிகரமானத் தீர்மானங்களை, இந்திய அரசு ஆதரித்தது இப்போக்கு இனியும் தொடரக் கூடாது இராசபக்சே கும்பல் மீது இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை – ஈழத்தமிழ் மக்களிடையே தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு ஆகிய இரட்டை முழக்கங்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எனவே, வரும் மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்து, இனக்கொலையாளி இராசபக்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக் கோரி இந்திய அரசே தனித் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது. வரும் பிப்ரவரி 20 அன்று சென்னையிலும், தமிழகத்தின் இதர மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. அழைக்கிறது. 

  1. பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ திட்டத்துக்கு நிதி – இரண்டையும் கைவிட வேண்டும்

ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறுவித்துள்ளார், இவை பற்றி தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று பேசியுள்ளார். அவரது பேச்சு, மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் மரபீனி விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளதுமரபீனீ விதைகளை ஆய்வு செய்ய, காங்கிரசு உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழுவின் ஆய்வு அறிக்கை இவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது இந்த அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு, அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும், பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். அப்பகுதி மக்களும், தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும்

பிரதமர் மன்மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்திட்டங்களை கைவிட வேண்டுமென வற்புறுத்துகிறது.

இடம் : சென்னை-78.
நாள்  : 09.02.2014

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT