பேரறிவாளன், முருகன், சாந்தன்
"மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு மனநிலையின் அடையாளம்"
"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் அளிக்ப்ப்பட்டுள்ள தூக்குத் தண்டனை இந்திய அரசுக்குத் தொடர்ந்து இருந்து வரும் தமிழின எதிர்ப்பின் அடையாளமே ஆகும்" என சிதம்பரத்தில் நேற்று(18.08.2011) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.
மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க் கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென ஓசூர், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது.
அதன் ஒரு பகுதியாக, சிதம்பரத்தில் நேற்று(18.08.2011) மாலை ஆர்ப்பாட்டம் நடந்த்து. மேல மாசி வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் பேசிய போது,
"இந்திய அரசின தொடர்ந்து வரும் தமிழின எதிர்ப்பு மனநிலையின் ஒரு வெளிப்பாடு தான் இந்த்த் தீர்ப்பு. இப்புரு சுதாகர் எதிர் ஆந்திர அரசு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், ஒருவர் மரண தண்டனையை நீக்க்க் கோரும் கருணை மனு 3 ஆண்டுகளுக்கு மேலாக பரிசீலனையில் இருந்தாலே, அந்த மரண தண்டனையை இரத்து செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் ராசீவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மூன்று நீதிபதிகளும் கூறியுள்ள நிலையில், இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது சுயமுரண்பாடானது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமது இளமைப் பருவம் முழுவதையும் சிறையில் கழித்துவிட்ட நிலையில், இத்தோழர்களுக்கு இன்னுமொரு கொடிய தண்டனை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இது நீதி முடிவல்ல. இந்திய அரசின் இன அரசியல் முடிவு.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி என் 161ன்படி தமிழக ஆளுநருக்கு மரண தண்டனையை இரத்து செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசு இம்மூவரையும் மீட்க வேண்டும்" என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணியின் தமிழகத் துணைத் தலைவர் பா.பிரபாகரன், நகரச் செயலாளர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன், த.தே.பொ.க. மூத்த தோழர்கள் முருகவேள், சவுந்திரராசன், தேவராசன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திரளான மாணவர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம், சிதம்பரம் நகரில் மூவர் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் மனநிலையை மேலும் கூர்மைப்படுத்தியது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு
Post a Comment