உடனடிச்செய்திகள்

Saturday, August 13, 2011

மூவர் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. போராட்டம்!

மூன்று தமிழர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே
மூவரின் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும்
சென்னையில் 17.08.2011 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
 
சென்னை, 17.08.2011.
 
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும அப்பாவித் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார். 

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. காவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட ஒப்பதல் வாக்குமூலம் வழக்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் செல்லாது. தடாச் சட்டம் பொருந்தாது என்றபின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் தான் உச்சநீதிமன்றம் பின்பற்றியிருக்க வேண்டும்.   

இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி அதற்காகத் தண்டனையும் பெற்றவராவார்.

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியவர். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில ஆளுநரிடம் எழுத்தாளர் மகா சுவேதா தேவி முறையிட்டார். ஆந்திர மாநில ஆளுநரிடம் கருணை மனு நிலுவையில் உள்ளது என்பதைக் காரணம் காட்டி, ஆளுநரின் முடிவு வரும் வரையில் மேற்படி இளைஞர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடையாணையும் வாங்கினார். 

1950களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின், கேரளத்தில் ஈ.எம்.எஸ். அரசு ஆளுநர் மூலம் அவரது மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது.

எனவே, இந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
 
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
 
ஓசூர்
ஓசூரில் த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் இன்று(13.08.2011) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.
 
மதுரை
இன்று(12.08.2011) மாலை த.தே.பொ.க. தோழமை அமைப்பான மக்கள் உரிமைப் பேரவை சார்பில் 5 மணிக்கு மீனாட்சி பசார் அருகில், தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மக்கள் உரிமைப் பேரவை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ச.அருணாச்சலம் தலைமையில் இதே கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில், நாம் தமிழர், த.தே.வி.இ., உள்ளிட்ட  பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்கின்றன.
 
தஞ்சை
தஞ்சையில், 16.08.2011 செவ்வாய் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இராசு. முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னனணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
 
சென்னை
17.08.2011 அன்று மாலை 5 மணிக்கு சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மையார் உட்பட பல தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
 
சிதம்பரம்
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகில், 16.08.2011 அன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றுகிறார்.
 
கோவை
கோவையில் த.தே.பொ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மாநகரக் காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். இது தொடர்பாக த.தே.பொ.க. நிர்வாகிகள் மாநகரக் காவல்துறையிடம் மீண்டும் முறையீடு செய்துள்ளது. விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடம், நாள் அறிவிக்கப்படும். 
 
இந்த ஆர்ப்பாட்டங்களில், திரளான தமிழர்களும், மனித  நேயர்களும் கலந்து கொண்டு இக்கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT