உடனடிச்செய்திகள்

Thursday, February 16, 2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு! - த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!


தமிழக அரசு செயல்படுத்தும் மின்சார மறுப்பைக் கண்டித்தும்
நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குப் பெற வலியுறுத்தியும் 21.02.2012 அன்று
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


2011 மே மாதம் பொறுப்பேற்ற அ.இ.அ.தி.மு.க ஆட்சி 9 மாதங்களாக மின்வெட்டைக் குறைப்பதற்கு மாறாக அதிகப்படுத்திவிட்ட்து. சென்னையைத் தவிர்த்து, தமிழகமெங்கும் 12 மணி நேரம் மின்வெட்டு செயல்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தை நிறுத்தும் நேரம் குறித்து ஒழுங்கோ வரைமுறையோ கிடையாது. ஒரு நாளைக்கு ஆறுமுறைக்கு மேல் நிறுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட பேரவலமும் பேரழிவும் நடக்கும் போது கூட நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குத் தருமாறு தமிழக முதல்வர் இந்திய அரசை வலியுறுத்த வில்லை. மத்தியத் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் தருமாறு பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கிறார்.

காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட்டும், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் கேரளத்திற்கு 9கோடி யூனிட்டும், பாலாற்றைத் தடுக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கு 6 கோடி யூனிட்டும் நெய்வேலி மின்சாரம் அன்றாடம் போகிறது. இந்த 26 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது.

மிக மோசமான தமிழக மின்வெட்டை நீக்கத் தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது. தமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும். வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்குவதை மாற்றி, அவற்றிற்கும் மின்வெட்டை செயல்படுத்தி, அவற்றில் மிச்சமாகும் மின்சாரத்தைத் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்.

இந்திய அரசு, வழக்கம் போல் இதிலும் தமிழகத்தை வஞ்சிக்கிறது. எனவே, இந்திய அரசு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும்.

தமிழக மக்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 21.2.2012 செவ்வாய்க்கிழமை அன்று நடத்தும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்

இடம் சென்னை
நாள் 16.02.2012


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT