உடனடிச்செய்திகள்

Friday, February 17, 2012

இந்திய அரசே! கூடங்குளம் மக்களை கொச்சைப்படுத்தும் ரசியத் தூதர் கடாக்கினை வெளியேற்று -பெ.மணியரசன்!

இந்திய அரசே கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தைக் கூலிப் போராட்டம் என்று கொச்சைப்படுத்திய ரசியத்தூதர் கடாக்கினை வெளியேற்று!

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!

 

ரசிய நாட்டின் இந்தியத் தூதர் அலெக்சாண்டர் எம்.கடாக்கின், கூடங்குளம் அணு உலை தொடர்பாக கடந்த 14.2.2012 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய செய்திகள், ஒரு வெளிநாட்டுத் தூதுவர் என்ற வரம்பை மீறி, உள்நாட்டு அரசியல்வாதியின் பேச்சைப்போல் இருக்கின்றன.

 

கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுபவர்கள் தன்னல சக்திகளிடமிருந்து கூலி வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என்கிறார்(தி இந்து, 15.2.2012).

 

உள்நாட்டு மக்கள், சனநாயக உரிமைப்படி நடத்தும் போராட்டத்தைக் கூலி வாங்கிக் கொண்டு நடத்தும் போராட்டம் என்று கொச்சைப்படுத்திய ரசியத்தூதரை இதுவரை இந்திய அரசு கண்டிக்க வில்லை.

 

வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரின் இவ்வாறான தலையீடு இன்றைக்குத் தனக்குச் சாதகமானது என்று கருதி, அதைக் கண்டிக்கத் தவிறினால் இது ஒரு கெட்ட முன்னுதாரணமாக மாறிவிடும். வேறொரு நாட்டுத் தூதுவர், எதிர்காலத்தில், இந்தியாவுக்குள் இருந்து கொண்டே மற்றொரு சனநாயக நடவடிக்கையைக் கண்டிப்பார். ஏன், தனக்கு எதிராக உள்ள இந்திய அரசின் முடிவொன்றையும் அவர் கொச்சைப்படுத்தலாம்.

 

ரசியத் தூதர் கடாக்கின் அத்துடன் நிற்காமல், "தமிழக அரசு, தனது மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்க நடுவணரசிடம் கோரிக்கை வைக்கிறது. அதனால் பலன் கிடைக்காது. தமிழக அரசு மின் வெட்டை நீக்கிக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி கூடங்குளத்திலிருந்து மின்சாரம் பெறுவது தான்" என்கிறார்.

 

தமிழக மின்பற்றாக் குறையை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று அறிவுரை வழங்குமாறு ரசியத் தூதரைத் தமிழக அரசு கேட்டதா? தமிழக அரசுக்கும் நடுவணரசுக்கும் மின்சாரம் தொடர்பாக உள்ள சிக்கலில் அத்து மீறித் தலையிட்டு அறிவுரை வழங்கும் அளவுக்கு ரசியத் தூதருக்கு ஆணவம் எங்கிருந்து வந்தது? இந்தியத் அரசு கொடுக்கும் துணிச்சல்தான் அது.

 

தமிழக முதல்வர் செயலலிதா நடுவண் அரசு தனது தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் விலைக்குத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆபத்துக் காலத்தில் அவ்வாறு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.  தமிழக நெய்வேலி மின்சாரம் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறது. ஆபத்துக்கால ஏற்பாடாக நெய்வேலி மின்சாரம் முழுவதையும் இந்திய அரசு தமிழ்நாட்டிற்களித்தால், தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது. 

 

இவ்வாறு இந்திய அரசின் துணையோடு, தமிழக மின்சாரப் பற்றாக்குறையை ஈடுசெய்யப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி எதுவும் தெரியாத வெளிநாட்டுத் தூதுவரான கடாக்கின் தமிழக மின் பற்றாக் குறையை நீக்கக் கூடங்குளம் மின்சாரம் மட்டுமே, ஒரே வழி என்று தவறாகக் கூறுகிறார். அவர் ரசிய நாட்டின் வணிக முகவராகச் செயல்படுகிறாரே தவிர, அரசுத் தூதுவருக்குரிய கண்ணியம் அவரிடம் இல்லை.

 

ரசியத்தூதரின் அத்து மீறிய தலையீட்டைத் தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும். இந்திய அரசு ரசியாவிடம் கடாக்கினைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, புதிய தூதரைப் பெற வேண்டும் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை,

நாள் : 17.02.2012 போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT