உடனடிச்செய்திகள்

Monday, March 12, 2012

சி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம் - த.தே.பொ.க. கண்டனம்!

சி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம்!: 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சென்னையிலுள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் 5. 3.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பைப் பார்த்து தமிழினப் பகைக் கட்சியான சி.பி.எம். திருந்திவிட்டதோ என எண்ணி சிலர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சி.பி.எம். கட்சி திருந்தவே திருந்தாது என்பதை அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேட்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் நேர்காணலும் தெளிவாக்கிவிட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளரிடம் பேசிய ஜி.இராமகிருஷ்ணன் கூறியது வருமாறு:

" கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் சில பரிந்துரைகளை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளில் சிலவற்றைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அந்த ஆணையத்தின் அனைத்துப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்" ( தீக்கதிர் 6.3.2012.)

இராசபட்சே அரசு அமைத்த விசாரணை ஆணையம் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலேயே செயல்பட்டு ஒருதலைச் சார்பான அறிக்கை அளித்ததை உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் எடுத்துக்காட்டிக் கண்டிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு இலங்கையில் அனைத்து மட்ட நீதி மன்றங்களும் பிற துறைகளும் சிங்கள இனவாதத்தில் மூழ்கிஉள்ளதால் அந்நாட்டுக்குள் நடக்கிற எந்த விசாரணையும் தமிழர்களுக்கு இன வழிப்பட்ட நீதியைப் பெற்றுத்தராது. என பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைத்து விட்டது எனவேதான் ஐ.நா பொதுச்செயலாளர் இராசபட்சே குழுவினரின் போர்க்குற்றங்களை விசாரிக்க சார்பற்ற சர்வதேச ஆணையம் ஒன்றை அமைத்து உணமைகளை கண்டறிந்து தொடர்புடையவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பரிந்துரைத்தது அக்குழு.

ஜி.இராமகிருஷ்ணன் கொஞ்சம் பூசி மெழுகிக்கூறுவதை தேங்காய் உடைத்தாற்போல் தெளிவாக டி.கே. ரெங்கராஜன் கூறிவிட்டார். மாலை மலர் நாளேட்டிற்கு 5.3.2102 அன்று டி.கே ரெங்கராஜன்  அளித்த நேர்காணலில் " இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசுதான் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

குற்றவாளியே தன் குற்றங்களை விசாரித்து தனக்கு தண்டணை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிற விசித்திரவாதம் இது. உண்மையில் இக்கூற்றின் மூலம் இராசபட்சே போர்க்குற்றவாளியல்ல என்று கூறவருகிறது சி.பி.எம். எங்கேயோ, வாச்சாத்திலோ, சிதம்பரத்திலோ, உள்ளூர் காவல்துறையினர் மனித உரிமைக்கு எதிராக குற்றச்செயலில் ஈடு படும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பது போல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைக்கிறது.

உள்ளூர் அளவில் அரசு அதிகாரிகள் செய்கிற அட்டூழியங்களுக்கு ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் நேரடி பொறுப்பாளியல்லர். எனவே அவர்கள் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கோருவதி பொருளுண்டு. ஆனால் இலங்கையில் அந்நாட்டின் குடியரசுத்தலைவர் இராசபட்சேவே தலைமை தாங்கி படையனுப்பி இன அழிப்பு போர் நடத்தி ஒன்றறை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளார். இதை உலகமே புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் டி.கே. ரெங்கராஜன் குழுவினருக்கும் மட்டும் இது புரிய வில்லையா?. இல்லை. அவர்கள் புரிந்தே இராசபட்சேவை காப்பாற்ற நாடகமாடு கிறார்கள்.

செய்தியாளர்களின் அடுத்தக் கேள்வி " பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள்?"

அதற்கு, டி.கே ரெங்கராஜன் அளித்த விடை " இலங்கை இறையாண்மையுள்ள நாடு இந்தியாவின் நட்பு நாடு என்பதாகும்"

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசால் கருப்பின மக்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளானபோது இதே சி.பி.எம். கட்சி ஐ.நாவின் தலையீட்டை, உலக நாட்டுகளின் தலையீட்டைக் கோரியது. அப்போது அது இறையாண்மையுள்ள தென்னாப்பிரிக்க நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாக சி.பி.எம்.க்கு தெரியவில்லை.

சிலீ நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணியோடு ஆட்சி அமைத்த ஆலண்டே, அந்நாட்டின் படைத்தளபதியான பினோச்சேயால் படுகொலை செய்யப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதை தொடர்ந்து கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேள்வி முறையின்றி சிறைப்படுத்தப்பட்டனர். சிலீயில் நடந்த மனித உரிமை மீறலுக்காக பினோச்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலக முழுவதுமிருந்த முற்போக்காளர்கள் கோரினார்கள். சி.பி.எம் கட்சி இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கங்கள் நடத்தியது. அப்போது அது சிலீயில் உள்நாட்டு பிரச்சினையாக சி.பி.எம் முக்கு படவில்லை. சிலீ நாட்டின் இறையாண்மைக்கு எதிராக வெளியார் தலையீடு கூடாதென உபதேசிக்க வில்லை.

ஆனால் தமிழர் என்று வந்துவிட்டால் அப்போதுமட்டும் எங்கிருந்தோ இறையாண்மை வந்து குதிக்கிறது. சி.பி.எம் கட்சி உலக மாந்தர்களுக்கு முன்வைக்கும் மனித உரிமை தமிழர்களுக்கு மட்டும் கிடையாது போலும்.

" தேசிய இனங்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்ற மார்க்சியக் கொள்கையை சி.பி.எம். கட்சி கைவிட்டுவிட்டதா?" என்று அடுத்த ஒரு கேள்வியை செய்தியாளர்கள் கேட்டார்கள்.  "அதை வெளியிலிருந்து திணிக்கக் கூடாது" என்றார் டி.கே. ரெங்கராஜன் .

ஈழத் தமிழரின் விருப்பத்தை அறிய இலங்கையில் வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு

"அதனை எதிர்க்கிறோம்" என்றார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விழைவை அறிய அம்மக்களிடம் ஐ.நா. கருத்து வாக்கெடுப்பு நடத்துவதை மட்டுமல்ல இலங்கை அரசே நட்த்துவதைக் கூட எதிர்க்கிறது சி.பி.எம் கட்சி.

ஆனால் டி.கே. ரெங்கராஜனின் சி.பி. எம் கட்சி கிழக்கு திமோரில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் ஐ.நா மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்திய போது ஓடோடிச் சென்று அதனை ஆதரித்தது. அப்போது வெளியிலிருந்து திணிக்கக் கூடாது என்று கூறவில்லை. இதிலும் உலகத்திற்கு என்றால் ஒரு ஞாயம் தமிழருக்கென்றால் ஒரு ஞாயம்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே சி.பி.எம் கட்சி தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

சிங்கள அரசு நடத்திய திட்டமிட்ட இன அழிப்பு போர் குறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் மூவர் குழு அளித்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான போது அதை படித்த மனித நேயர்கள் அனைவரும் உலகெங்கும் கொந்தளித்தார்கள். அதை தொடர்ந்து வெளியான சேனல் 4 காட்சிகள் உலகின் மனச்சான்றயே உலுக்கின.

இச்சூழலில் சென்னையில் 30.7.2011 அன்று இலங்கைத் தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு என்ற பெயரில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஒன்றை  சி.பி.எம். நட்த்தியது. அதில் அக்கட்சி இயற்றிய தீர்மானம் " கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் " என்று கூறியது( தீக்கதிர் 31.7.2011)

ஒன்றறை இலட்சம் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் இனவெறிப்படை இனப் படுகொலை செய்யப்பட்டனர். அரசுப்படைதான் கூட்டங்கூட்டமாக தமிழர்களை கொன்று குவித்து அவர்களது வாழிடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள், ஆகிய அனைத்தையும் தரைமட்டமாக்கியது. ஐ,.நா. மன்றம் உள்ளிட்டு அனைவருமே ஏற்றுகொண்ட இந்த உணமையை மறைத்து " இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டன  என கதையளந்தது சி.பி.எம் கட்சி.

அம்மாநாட்டின் தீர்மானமும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரியது. அம்மாநாட்டுத் தீர்மானத்திலோ தலைவர்களின் உரையிலோ ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானதைப்பற்றி ஒரு சொல் கூட இல்லை. ஆனால் இலங்கை அரசுப்படைகளுக்கு, விடுதலைப் புலிகளுக்கும் நடந்த மோதலில் இருதரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டதாக மட்டுமே கூறியது.

இந்த சி.பி. எம். கட்சி தமிழர்களுக்கு அழிவு நேரும் போதுதான்இவ்வாறு பேசுகிறதே தவிர சிங்களனுக்கு ஒரு சிக்கலென்றால் பதறி துடிக்கும் ஆனையிறவு போரின் போது அக்கட்சி வைத்த கோரிக்கையே இதற்குச் சான்று.

சிங்களப் படையிடமிருந்து ஆனையிறவு முகாமை 2000 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக மீட்டனர். பதறித்துடித்தது சி.பி. எம் கட்சி அடுத்து யாழ்ப்பாணத்தை மீட்க விடுதலைப் புலிகள் படையெடுக்கக் கூடாது என்றும் அவ்வாறு விடுதலைப்புலிகள் படையெடுத்தால் அதைத் தடுக்க இந்திய அரசு களமிறங்க வேண்டுமென்றும் அக்கட்சியின் அனைத்திந்தியத் தலைமை அறிக்கை வெளியிட்டது. அக்கட்சியின் தலைக்குழு உறுப்பினரும் அக்கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருமான உமாநாத் "விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தால் அதை முறியடிக்கும் வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை இலவச மாகவே வழங்க வேண்டும் " என்று பதறித்துடித்து அறிக்கை வெளியிட்டார். அப்போது 16000 சிங்களப்படையினர் யாழில் இருந்தனர். சிங்களப் படையாட்களுக்கு ஆபத் தென்றால் துடிக்கின்ற சி.பி.எம் கட்சி அப்பாவித் தமிழர்கள், ஆயுதம் தறிக்காத குழந்தைகளும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் போது இறை யாண்மை ஞாயம் பேசுகிறது.

இன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இராசபட்சே கும்பலை இன அழிப்பு போர்க் குற்றம் குறித்து தீர்மானம் வரும் சூழலில் தமிழர்களிடையே எழுந்து வரும் இன உணர்ச்சி ஞாயப்போராட்டம் ஆகியவை சி.பி.எம் தலைமையை அதிர வைக்கிறது. தமிழர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோமோ அக்கட்சித் தலைமை அஞ்சுகிறது. அதே நேரத்தில் அக்கட்சி தமிழினப் பகைபோக்கையும், சிங்களப் பாசத்தையும் விட விரும்பவில்லை. அதற்கேற்ப தந்திரமாக நடித்து நயவஞ்சகம் செய்கிறது சி.பி.எம். தலைமை.

தனது கட்சிக்குள் கொஞ்சநஞ்சம் இருக்கிற இன உணர்வாளர்களையும், சனநாயக உணர்வாளர்களையும் திசை திருப்பும் உத்தியாகவே இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆனால் அதன் தமிழின பகைப் போக்கை அதனால் மறைக்க முடியவில்லை. டி.கே. ரெங்கராஜனின் நேர்காணல் அதனை அம்பலப்படுத்தி விட்டது.

உலகத்திற்கு சர்வதேசிய ஞாயம் பேசும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நயவஞ்சக தமிழினப்பகைப்போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் இவர்கள் கட்சியினரும் உறுப்பு வகிக்கும் தமிழ்நாடு சட்ட மன்றமும் இராசபட்சே குழுவினருக்கு எதிராக பன்னாட்டு விசாரணை வேண்டுமென்று ஒருமித்தக் குரலில் வலியுறுத்தும் போது சி.பி.எம் கட்சியின் இத்திசை திருப்பல் ஆர்ப்பாட்டம் இனக்கொலையாளி இராசபட்சேயை பாதுகாக்கிற முயற்சியாகும்.

சி.பி.எம் கட்சியை தமிழினம் மன்னிக்காது. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் தமிழினப்பகை கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியை புறக்கணிக்க வேண்டும்.

நன்றி: பதிவு இணையம்

தமிழ்மது said...

முல்லைப் பெரியாரில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழருக்கு வெளிப்படையாக துரோகம் செய்கிறது சிபிஎம். ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவு நாடகம் நாடி நமது உரிமையை பறித்து சிங்களவன் காலடியில் கிடத்த பார்க்கிறது. இன்னும் எத்துனை ஓநாய்கள் நம்மிடையே உள்ளதோ..சிபிஎம் வரிசையில்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT