சென்னை சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்போம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
கூடங்குளம் அணுஉலைகளை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக, குறிப்பாக, கடந்த 400 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வருகின்றனர்.
விபத்து நேர்ந்தாலும், விபத்து ஏற்படாத சாதாரண மின் உற்பத்திக் காலங்களிலும் மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் பேரழிவுத் திட்டமே கூடங்குளம் அணுமின் திட்டம். உலகமே அணுஉலைத் திட்டங்களைக் கைவிட்டு வரும் போது, தமிழர்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழக அரசின் துணையோடு, இந்திய அரசு இத்திட்டத்தைத் திணித்து வருகின்றது.
அமைதிவழியில் போராடி வந்த மக்களின் ஞாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் துணையுடன் மக்கள் மீது கடும் ஒடுக்குமுறைகளை ஏவியுள்ளது. இவ்வடக்குமுறைகள், கூடங்குளம் பகுதியில் வாழும் எளிய மக்களை நிரந்தர அச்சுறுத்தலில் வைத்திருக்கிறது.
கடந்த 10.09.2012 அன்று அணு உலை முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற அம்மக்கள் மீது தமிழக காவல்துறையும், இந்திய அரசின் துணை இராணுவப்படையும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை தொலைக்காட்சிகள் வழியாக உலகமே பார்த்தது. அதைத் தொடர்ந்து, இன்று வரை காவல்துறை நடத்தி வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமன்று. மணப்பாட்டில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோனிஜான் என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்த இந்திய விமானப்படை விமானம், இடிந்தகரை திரு. சகாயம் என்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொன்றது.
இதுவரை சற்றொப்ப 55,700 பேர் மீது பல்வேறு வழக்குகளைக் காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் 6918 பேர் மீது தேசத் துரோக வழக்கு, அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு, அரசுக்கெதிராகப் போர் புரிவதாக வழக்கு என விதம் விதமான கொடிய வழக்குகளும் புனையப் பட்டுள்ளன. சிறுவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலரையும் கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.
இந்நிலையில், எந்த நியாயமும் இன்றி 144 தடை ஆணை அப்பகுதியில் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் உள்ளூர் பள்ளிகளுக்குச் சென்று வருவது கூட இடர்ப்பாடாக இருக்கிறது.
கூடங்குளம் மக்கள் மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், அப்பகுதியிலிருந்து காவல்துறையும், துணை இராணுவப்படையம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மறுநாள்(29.10.2012) அன்று சென்னையிலுள்ள தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தில், அணுசக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மற்றும் சூழலியல் மற்றும் சனநாயக அமைப்புகள் திரளாக பங்கேற்க உள்ளார்கள்.
எனது தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் போராட்டமாக தமிழ்த் தேசமெங்கும் விரிவடையட்டும்! அனைவரும் இப் போராட்டத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!
Post a Comment