உடனடிச்செய்திகள்

Friday, October 19, 2012

காவிரி தடுக்கும் கன்னடனுக்கு நெய்வேலி மின்சாரம் தடுப்போம்! – த.தே.பொ.க. போராட்டங்கள்!



தமிழ்நாட்டிற்கு உரிமையான காவிரி நீரை அடாவடித்தனமாக மறுத்துவரும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை மறுத்து, அம்மின்சாரத்தை மின்வெட்டால் தத்தளிக்கும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது.

சூளகிரி

இதன் ஒரு பகுதியாக, கிருட்டிணகிரி மாவட்டம் சூளகிரியில், கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்கின்ற பவர் கிரிட் கார்ப்பரேசன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று(18.10.2012) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் கிளைச் செயலாளர் தோழர் இரமேசு, கிளைச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, தமிழக இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் ஈசுவரன், கிளைச் செயலாளர் குணசேகரன், தருமபுரி நகர த.இ.மு. அமைப்பாளர் தோழர் விசயன், தமிழக உழவர் முன்னணி தோழர் தூர்வாசன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், த.இ.மு. தோழர்களும், தமிழர் தேசிய இயக்கத்தின் தோழர் முருகேசன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

கார்ப்பரேசன் அலுவலகத்தின் வாயிலுக்கு முன் முழக்கமிட்ட தோழர்கள், வாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதைத் தடுத்து, தோழர்கள் 56 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

பெண்ணாடம்

விருதாச்சலம் வட்டம், சத்தியவாடி, துனை மின்நிலையம் முன்பு 17.10.2012 அன்று இரவு 7 மணிக்கு லாந்தர் விளக்கு, தீ பந்தம் ஆகியவற்றை ஏந்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி துணைச் செயலாளர் தோழர் மணிமாறன் தலைமையேற்றார். த.இ.மு. செயலாளர் தோழர் பிராகாசு முன்னிலை வகித்தார். தோழர் சி.பி. வரவேற்புரையாற்றினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் தோழர் முருகன், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் இளையநிலாதோழர் தோழர் கணகசபை, பெரியார் செல்வன், குகன் உள்ளிட்ட தோழர்களும், அப்பகுதி மக்களும் திரளாக கலந்துக் கொண்டனர். நிறைவாக தமிழக இளைஞர் முன்னணி பொருளாளர் தோழர் ஞானபிரகாசம் நன்றி நவின்றார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT