உடனடிச்செய்திகள்

Tuesday, October 16, 2012

“ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமாட்டோம் என்னும் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு யூனிட் நெய்வேலி மின்சாரம்கூடத் தரக்கூடாது என்கிறோம்!” - பெ.மணியரசன் விளக்கம்!


“ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமாட்டோம் என்னும்
கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,
ஒரு யூனிட் நெய்வேலி மின்சாரம்கூடத் தரக்கூடாது என்கிறோம்!”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விளக்கம்!

காவிரி உரிமை மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் செல்வதைத் தடுத்து அதைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பி விடுமாறு 1990களின் தொடக்கத்திலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராடி வருகிறது.

முதல் போராட்டம் 1991 சூலை மாதம் 17ஆம் நாள் நெய்வேலி அனல் மின்நிறுவனத் தலைமை நிர்வாகியை முற்றுகையிட்டு நடத்தப்பட்டது. தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் போராடிய தோழர்கள் தளைப்படுத்தப்பட்டுக் கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாள்கள் கழித்துதான் பிணை கிடைத்தது.

அடுத்த, 2003 திசம்பர் 13-ஆம் நாள் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் மேற்படிக் கோரிக்கைக்காக நடந்த முற்றுகைப் போராட்டத்தில் த.தே.பொ.க. தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அண்மையில், கடந்த ஆகத்து 10 2012 அன்று மேற்படிக் கோரிக்கைக்காக த.தே.பொ.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. 223 தோழர்கள் தளைப்படுத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத் திரைப்படத் துறையினர் 2002 அக்டோபரில், காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அண்மையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் அதே கோரிக்கைக்காக நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தளைப்படுத்தப்பட்டனர்.

இவற்றுக்கிடையே விவசாயிகள் சங்கமொன்றும் நெய்வேலியில் இதே கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இக்கோரிக்கை மேலும் மேலும் பலரால் பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரம் மிகவும் குறைவுதான் என்று கூறியுள்ளது. இதை நிறுத்துவதால், கர்நாடகத்திற்குப் பெரிய பாதிப்பு வந்து விடாது என்று கூறுகிறது.

அவ்வேடு வெளியிட்டுள்ள விவரப்படி, நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மொத்த மின் உற்பத்தி 2,490 மெகா வாட் மின்சாரம். இதில், தமிழகத்திற்கு 1,189.2 மெகாவாட், கர்நாடகத்திற்கு 304.4 மெகாவாட், ஆந்திரப் பிரதேசத்திற்கு 264.00 மெகாவாட், கேரளத்திற்கு 211.8 மெகாவாட், புதுச்சேரிக்கு 92.6 மெகாவாட், நெய்வேலி வளாகத்திற்கு 6.18 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்பட்டாதது 11.37 மெகாவாட் மின்சாரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் கர்நாடகத்துக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தக் கோருவது, கர்நாடகத்தின் தமிழின விரோதப் போராட்டங்களுக்கான பதிலடியே தவிர இதன் மூலம் மட்டுமே கர்நாடகத்தைப் பணிய வைத்துவிட முடியும் என்ற நோக்கில் அல்ல.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தரமாட்டோம் என்று கூறும் கர்நாடகத்திற்கு, ஒரு யூ னிட் மின்சாரம்கூடத் தரக்கூடாது என்ற உத்தியில்தான் இப்போராட்டம் நடக்கிறது.
கர்நாடகத்திற்குகெதிரான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிறோம். அதன்படி கர்நாடகத்திலிருந்து அரிசி, மஞ்சள், புகையிலை உள்ளிட்ட விளைபொருட்கள் மற்றுமுள்ளப் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது, தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் கர்நாடகத்திற்குப் போகக்கூடாது என்பதாகும். அந்தப் பொருளாதாரத் தடை விதிக்கும் போராட்டத்தின் ஒரு கூறுதான் நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்பதும்.

மேலும் கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நெய்வேலியில் உள்ள அதிகாரிகளை நிர்பந்தித்து நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாம் போராடவில்லை. அம்முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இப்போராட்டத்தை நெய்வேலியில் நடத்துகிறோம்.

பெ,மணியரசன்
தலைவர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT