உடனடிச்செய்திகள்

Tuesday, October 16, 2012

நடுவண் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்!


நைல் நதி சூடானுக்கும், எகிப்திற்கும் இடையே ஓடுகிறது. சிந்து நதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓடுகிறது. காவிரி ஆறு கர்நாடகத்திலிருந்து, தமிழகத்திற்கு வர முடியாதா?
நர்மதை, கிருஷ்ணா ஆறுகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் முடிவுகள், சண்டை இல்லாமல் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவு மட்டும், செயல்படுத்தப் படாதது ஏன்? இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன்? நாம் தமிழ் மக்கள் என்பதாலா? 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் சம்பா சாகுபடியையும் இழக்க வேண்டுமா?
90 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் இருக்கும் பொழுது வெறும் 9000 கன அடி தண்ணீரைத் திறக்கச் சொன்னார் பிரதமர். அதையும் ஏற்கவில்லை கர்நாடகம், அடுத்து, காவிரிக் கண்காணிப்புக் குழு அதையும் குறைத்து, 6,800 கன அடி தண்ணீர் திறக்கச் சொன்னது. இதையும் ஏற்க மறுத்தது கர்நாடகம். கர்நாடகத்தை, என்ன செய்து விட்டது இந்திய அரசு? இனி வாதாடிப் பயன் இல்லை. போராடித்தான் காவிரி உரிமையை மீட்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் 40 நாட்களுக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான், சம்பா சாகுபடியைப் பாதுகாக்க முடியும். நாம் பிச்சை கேட்கவில்லை. சட்டப்படி நமக்குள்ள உரிமைத் தண்ணீரைக் கேட்கிறோம்.
அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி கட்டளை தாக்கீது கர்நாடகத்திற்கு அனுப்பி 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்துவதென 10.10.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி நம் தாய். அதை நாம் இழக்க முடியாது! கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது, கிளர்ச்சி செய்யாமல் வெல்லாது! மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் தமிழ் மக்களே!
பெ.மணியரசன்
(ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT