உடனடிச்செய்திகள்

Sunday, December 16, 2012

காவிரி உரிமைக்காகப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டத் தலைவநகரங்களிலுள்ள தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!


காவிரி உரிமைக்காகப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து,
காவிரி டெல்டா மாவட்டத் தலைவநகரங்களிலுள்ள
தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல்!
காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் (13.12.2012) மாலை, தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழக உழவர் முன்னணி சார்பில் கென்னடி, தமிழக விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் செங்கொடிச் செல்வன், ம.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் விடுதலைவேந்தன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் அருணாசலம், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துனை செயலாளர் தமிழ்நேசன், உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக, தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக்  கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டத் தலைநகரங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன், வரும் 21.12.2012 அன்று மறியல் போராட்டம் நடத்துவதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
 பெ.மணியரசன்
 காவிரி உரிமை மீட்புக் குழு 
                                                                                                                        ஒருங்கிணைப்பாளர்

இடம்: தஞ்சாவூர்


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT