உடனடிச்செய்திகள்

Wednesday, December 26, 2012

தமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் - தோழர் கி.வெங்கடராமன் வலியுறுத்தல்


தமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு
நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்  தோழர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்

நெய்வேலி மின்சாரம் உள்ளிட்டு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இந்திய அரசு நிறுவன மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமரை  வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் செயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்; காவிரி மறுக்கும் கர்நாடகத்திற்கும்; முல்லைப் பெரியாற்றை மறிக்கும் கேரளத்திற்கும் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கட்சியினரும், வணிகர் அமைப்புகளும், சமூக நல நிறுவனங்களும் இக்கோரிக்கையை எடுத்து கூறிவருகின்றன.

இந்நிலையில் இக்கோரிக்கையை தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் முன்வைத்திருப்பது சரியானது. மூத்த அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டு இந்திய அரசில் உறுப்பு வகிக்கும் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் கட்சி வேறுபாடின்றி ஒரே குரலில் இதனை வலியுறுத்த வேண்டும்.

கடுமையான மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுள்ள தமிழகத்தின் இந்த உரிமைக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் மன்மோகன் சிங் இப்போது நடக்க உள்ள தேசிய வளர்ச்சி மன்ற கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இக்கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றச் செய்ய அனைத்து வகை அரசியல் அழுத்தங்களையும் கொடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் அணியமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.


                                                                                

இடம்: சென்னை
 
                                                              தோழமையுடன்    கி.வெங்கட்ராமன்
 பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT