தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 02.12.2012 ஞாயிறு அன்று சிதம்பரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, உதயமூர்த்தி, குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், கோ.மாரிமுத்து, அ.ஆனந்தன், க.அருணபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ‘திருக்குறள்மணி’ புலவர் இறைக்குருவனார் ஆகியோரது மறைவிற்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
தீர்மானங்கள்
· வரும் திசம்பர்-8 அன்று தஞ்சையில் சம்பாப் பயிரையும் உழவர் உயிரையும் காக்க, பேரணி - பொதுக்கூட்டம்.
காவிரியில் தமிழகத்திற்கு உரிமையான நீரில் ஒரு சொட்டுக் கூடத் தர முடியாது என கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தமிழக முதல்வர் செயலலிதாவுடன் நடைபெற்றப் பேச்சுவார்த்தையின் போது மறுத்துவிட்டார். தமிழருக்கெதிரான கன்னட இனவெறியின் வெளிப்பாடு இது. தில்லி அரசின் துணையோடு தொடரும் கர்நாடகாவின் இனவெறியால் 15 இலட்சம் ஏக்கர் சம்பாபயிர் காய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது. மனம் நொந்த உழவர்கள் தற்கொலைசெய்துகொண்டு மடிகிறார்கள்.
எனவே, சம்பாப் பயிரையும் உழவர் உயிரையும் காக்க வரும் திசம்பர் 8 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சையில் மிகப்பெரும் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வில், த.தே.பொ.க. தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
· வரும் திசம்பர் 10 அன்று, கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி மதுரையில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்க முடிவு .
தமிழர் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடக் கோரி வரும், திசம்பர் 10 உலக மனித உரிமை நாளன்று மதுரையில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில், த.தே.பொ.க. தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் மீதான சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு கண்டனம்
நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூறும் நாளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த தமிழ் மாணவர்கள் முன்முயற்சி எடுத்தனர்.
நவம்பர் 27 அன்று மாலை 06.05 மணிக்கு ஈகச் சுடரேற்றுவதற்காக பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில், அங்கு அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த சிங்கள இராணுவம் கண்ணில் அகப்பட்டோரையெல்லாம் கண்மூடித்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தியது. பெண்கள் விடுதிகளுக்குள் சென்று மூடியிருந்த கதவுகளைத் தட்டி, அங்கிருந்த மாணவிகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது சிங்கள இராணுவம்.
இராணுவத்தினர் தாக்கும் செய்தியறிந்து அங்கு வந்த, ‘உதயன்’ நாளேட்டின் நிர்வாக இயக்குநரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஈ.சரவணபவன் அங்கு விரைந்த போது, காவல்துறையினரும், இராணுவத்தினரும் அவரது வாகனத்தைக் கல்வீசி சேதப்படுத்தினர்.
மாணவர்கள் மீதான இவ் அடக்குமுறையைக் கண்டித்து, 28.12.2012 அன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் மாணவர்கள் பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தடியடியை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அதில் பல மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் (அகவை-24, கந்தர்மடம்), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயன் (அகவை-24, புதுக்குடியிருப்பு), விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த சண்முகம் சொலமன் (அகவை-24, யாழ்ப்பாணம்), மருத்துவபீட மாணவரான கணேசமூர்த்தி சுதர்சன் (அகவை-22, உரும்பிராய்) ஆகிய நான்கு மாணவர்களை சிங்கள இராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்தது. அவர்களை கொழும்பு, நான்காம் மாடி என்ற சித்திரவதை முகாமில் அடைத்து வைத்துள்ளது.
தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்தோரை நினைத்து, அமைதி வணக்கம் செலுத்துவதைக் கூட அனுமதிக்காத இனவெறியாட்டம் இலங்கைத் தீவில் தொடர்கிறது.
யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சிங்கள அரசு தொடுத்துள்ள இன வதை தாக்குதல்களை த.தே.பொ.க தலைமைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவித்து அவர்களை பல்கலைக் கழக விடுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்துகிறது.
திருப்பாச்சேத்தியில் போலி மோதலில் இருவர் கொல்லப்பட்டதற்குக் கண்டனம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஆல்வின் சுதன் என்பவர், கடந்த 27.10.2012 அன்று வேம்பத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, வெட்டிக் கொல்லப்பட்டார்.
இக்கொலை வழக்குக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், பிரபு, மகேஷ்வரன், முத்துக்குமார் ஆகிய 3 பேர், இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக 06.11.2012 அன்று திருப்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அப்போது நீதிபதியிடம், மூவரும் தாக்கல் செய்த மனுவில், எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்றும், எங்கள் மூவரையும் காவல்துறையினர் போலி மோதலில் சுட்டுக்கொல்லத் திட்டமிருப்பதாகவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலர் கைது செய்யப்பட்ட்டு, மதுரை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், பிரபு, பாரதி ஆகிய இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்திலும் தளைப் படுத்தினர். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் தனது காவலில் எடுத்து விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, சிவகங்கை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அவர்களை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சித்திரைவேல் என்பவர் தலைமையிலான ஆயுதப்படைக் காவல்துறையினர் 30.11.2012 அன்று காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
மதுரை வாக்கர்ஸ் கிளப் அருகே சித்திரைவேல் மற்றும் காவல்துறையினர் 4 பேரைத் தாக்கிவிட்டு பிரபு, பாரதி ஆகிய இருவரும் தப்பியோடி விட்டனர் என தெரிவித்து, மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். தப்பியோடிய பிரபு, பாரதி இருவரையும் பிடிக்கச்சென்றபோது மேலமேல்குடி என்ற கிராமத்தின் அருகே அவர்கள் இருவரும் காவல்துறையினரைத் தாக்கியதாகவும் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான அதிரடிப்படை தற்காப்புக்கு சுட்டட்தில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகவும் கதைகட்டியது.
இது திட்டமிட்ட போலிமோதல் படுகொலை ஆகும்.
சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டிய சனநாயக நாட்டில் மனித உரிமைகளுக்கும், அரசமைப்பு வழங்கியுள்ள உயிர் வாழும் உரிமைக்கும் எதிரான காவல்துறையினரின், இந்நடவடிக்கை சமூக விரோதிகளுக்கு அச்சுறுத்தலாக அமையவே அமையாது. பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்திற்கு இது ஊக்கமாகவே அமையும். எனவே, போலி மோதலை நடத்தியுள்ள காவல்துறையினர் மீது முறையாக வழக்குப் பதிவு செய்து, விசாரிக்க வேண்டும்.
பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதித் தலைமையில் நீதி விசாரணை வேண்டும் என தலைமைச் செயற்குழு கோருகிறது.
தோழமையுள்ள,
பெ.மணியரசன், கி.வெங்கட்ராமன்
தலைவர் பொதுச் செயலாளர்
இடம்: சிதம்பரம்
|
Post a Comment