உடனடிச்செய்திகள்

Saturday, August 2, 2014

இலங்கை அரசு தமிழக முதலமைச்சரைக் கொச்சைப்படுத்தியதற்கான மூலகாரணம் இந்திய அரசின் சிங்கள இனவெறி ஆதரவுக் கொள்கையே! - தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!



இலங்கை அரசு தமிழக முதலமைச்சரைக்
கொச்சைப்படுத்தியதற்கான மூலகாரணம்
இந்திய அரசின்  சிங்கள இனவெறி  ஆதரவுக் கொள்கையே!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்
தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழக மீனவர்களை அன்றாடம் தளைப்படுத்தி அவர்களின் மீன்களைக் கொள்ளை யிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடுத்து  இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர் களையும், படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு அவ்வபோது கடிதம் எழுதி வருகிறார். இதனை கொச்சைப்படுத்தும் வகையில், தரக் குறைவாக படங்கள் போட்டும் வசனங்கள் எழுதியும் ஒரு கட்டுரையை இலங்கை அரசின் படைத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது.

சிங்கள அரசின் இந்த சின்னத்தனமான பண்பாட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். சிங்கள ஆளும் வர்க்கம் எந்த அளவு பண்பு கெட்ட மனநிலையில் இருக்கிறது என்பதற்கும் தமிழினத்தை இழிவுபடுத்தும் அதன் இனவெறி இன்னும் அடங்கவில்லை என்பதற்கும் மேற்படி கட்டுரை மற்று மோர் எடுத்துக்காட்டு.

கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் இலங்கை சென்று இனஅழிப்புப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளையும் தமிழ்மக்களையும் சந்தித்த பின் இலங்கை அரசு குறித்து ஆக்கப் பூர்வமான சில திறனாய்வுகளைக் கூறினார். அதற்காக இராசபட்சே தலைமையில் உள்ள ஓர் அமைச்சர் நவிப்பிள்ளை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சம்மதித்தால் நான் அவரைத் திருமணம் செய்துகொள்கிறேன்  என்று கொச்சைப்படுத்தி  அறிக்கை வெளியிட்டு தனது கீழ்த்தர மனநிலையைக் காட்டிக்கொண்டார். சிங்கள இனவெறியர்கள் திருந்தும்படி உலக நாடுகள் உருப்படியான நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் அடாவடித் தனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு, இராசபட்சே அரசுடன் மிகவும் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளத் தீவிரமாக முனைந்துள்ளது. இந்திய இலங்கை உறவுகளை வளர்க்கும் தூதுவர்களாக தமிழினத்தின் நிரந்தரப் பகைவர்களான சுப்பிரமணியசாமி, சேசாத்திரி சாரி இருவரையும் நரேந்திரமோடி அமர்த்தியிருப்பது புதிய நடுவண் அரசின் சிங்கள ஆதரவுப் போக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது. இதனால் ஊக்கம் அடைந்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தங்களின் இராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர், பிரதமர் அவர்களுக்கு, எழுதும் அலுவல் வழிப்பட்ட கடிதங்களைக் கொச்சைப்படுத்தி குதூகலிக்கிறார்கள்.

இந்திய அரசு தனது தீவிரமான சிங்கள ஆதரவுப் போக்கைக் கைவிட்டு, தமிழ் இனம் தனது பகை இனம் இல்லை என்ற புதிய முடிவுக்கு வந்தால் ஒழிய சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் தமிழினப் பகைச் செயல்களும், தமிழக முதலமைச்சர் அவர்களை இழிவுப்படுத்தும் வன்மமும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்கவும், சுப்பிரமணிய சாமித் தரகுக் கும்பலை இந்திய இலங்கை பேச்சு வார்த்தையிலிருந்து விடுவிக்கவும், இந்தியா முன் வரவேண்டும். இந்திய அரசு புதிய முடிவுகளுக்கு வர தமிழக மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT