“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர்பெ.மணியரசன் கோரிக்கை!
‘புலிப்பார்வை’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படம், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பன்னிரெண்டு அகவை மகன் பாலச்சந்திரன், தன்னைப் போன்ற சிறுவர்களை சேர்த்துக் கொண்டு விடுதலைப்புலிகள் சீருடை அணிந்து பயிற்சி எடுப்பதைப் போன்றக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இக்காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை. போரில் ஈடுபடாத அப்பாவிச் சிறுவன் பாலச்சந்திரனை, சிங்கள இனவெறி அரசு கைத்தொடும் தூரத்தில் வைத்து சுட்டுக் கொன்றது என்பதையே இயக்குநர் கல்லம் மெக்கரே, பன்னாட்டுத் தரவுகளுடன் எடுத்த ஆவணப்படம் உறுதிப்படுத்தியிருந்தது.
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, 16.08.2014 அன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடந்த போது, மேற்படி உண்மைக்குப் புறம்பான காட்சி பற்றி தமிழினவுணர்வுள்ள மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேந்தர் மூவஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மாணவர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த வன்செயலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கேள்வி கேட்ட மாணவர்களுக்கு உரிய விடையளித்து அவர்களை அமைதிப்படுத்துவதற்கு மாறாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களைத் தாக்கி தரதரவென்று இழுத்து வெளியில் கொண்டு போகும்போது, காவல்துறையினர் தலையிட்டு அம்மாணவர்களை கைது செய்து, மருத்துவ சிகிச்சைக்குக் கூட வாய்ப்பளிக்காமல் ஒருநாள் முழுக்க அடைத்து வைத்து, மாலையில் விடுவித்திருக்கிறார்கள்.
காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது. அந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யுமாறு தமிழ்த் தேசியப் பேரிக்கத்தின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
Post a Comment