உடனடிச்செய்திகள்

Tuesday, August 19, 2014

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாநாட்டிற்கு சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!


குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாநாட்டிற்கு சிங்களப் பெண்கள்

வருவதற்குத் தடை விதிக்க வேண்டும்! 

தமிழக அரசுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ். எஸ். எம். தனியார் பொறியியல் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 22 - 23 நாள்களில், பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடக்க இருப்பதாகவும், அம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து ஏழு சிங்களப் பெண்கள் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இச்செய்தி உண்மையானால் மேற்படி மாநாட்டை நடத்துவோர் மனித உரிமைகளுக்கு எதிரானவர்களாகவும், ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்களக் குற்றவாளி சமூகத் தோடும் இலங்கை அரசோடும் கூடி குலாவுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பொருளாகும்.

தொழில் முனைவில், மகளிர் ஈடுபட வேண்டும் என்பதிலும், அப்போக்கு மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும், நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இதை சாக்காக வைத்துக் கொண்டு, இனப்படுகொலை நடத்திய நாட்டிலிருந்து பிரிதிநிதிகளாக வரும் சிங்களர்களைக் கொண்டு, தமிழகத்தில் தொழில் முனைவு செய்யும் நடவடிக்கை என்பது, ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள், சட்டப் பேரவையில், இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கையாகக் குமாரபாளையம் எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரியின் செயல்பாடு உள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றத்தை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைத்துள்ள நிலையில் இலங்கையோடு நல்லுறவு கொண்டாட எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரி முன் வந்துள்ளது ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் செயல்பாடுகளுக்கும் எதிரானது; எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரியின் இச்செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

குமாரபாளையம் எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரி நிர்வாகம் தனது நிலைபாட்டை மறு ஆய்வு செய்து சிங்களப் பெண்கள் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்ய வேண்டும். எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரி சிங்களப் பெண்களை அம்மாநாட்டிற்கு அழைப்பது உறுதியாக இருந்தால் தமிழக அரசு தலையிட்டு அம்மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT