உடனடிச்செய்திகள்

Tuesday, August 26, 2014

இலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழக முதல்வர் தனி ஏற்பாடு செய்ய வேண்டும் - தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்

இலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழக முதல்வர்
தனி ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்.

தமிழீழத்தில் சிங்கள இன வெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியவற்றை விசாரித்து அறிக்கை தருவதற்காக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானப்படி பன்னாட்டுப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையரால் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு, 21.02.2002 முதல் 15.11.2011 வரை இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த குற்றங்கள் பற்றிய செய்திகள், சான்றுகள், புகைப்படங்கள், காணொலிகள் முதலியவற்றை அனுப்பிவைக்கலாம் என்றும், 30.10.2014க்கு முன்னதாக இவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏதிலியராக அரசு முகாம்களிலும், தனிவீடுகளிளும் இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் 21.02.2002 முதல் 15.11.2011 வரையிலான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்து இலங்கை அரசின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ; இலங்கை அரசின் இனக்கொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றை நேரில் பார்த்தவர்கள்; மேற்படிக் குற்றங்கள் நிகழ்ந்ததற்கான சான்றுகளைப் பல வடிவங்களில் வைத்துள்ளவர்கள்.

இவர்கள் அனைவரும் ஐ.நா.மனித உரிமை ஆணையர் அமைத்துள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவிற்குத் தங்கள் வசம் உள்ள சான்றுகளையும், விவரங்களையும் அச்சமின்றி சுதந்திரமாக அனுப்பி வைப்பதற்குத் தமிழக முதல்வர் அவர்கள் தனி ஏற்பாடு செய்து தந்தால் பேருதவியாக இருக்கும்.

தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதலைமைச்சர் அவர்கள் தாமே முன்வந்து இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் முன் மொழிந்து ஒரு மனதாக அதை நிறைவேற்றியுள்ளார்கள். இந் நிலையில் ஐ. நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றுகளை, விவரங்களை அனுப்புவதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தருவது உலக நீதியின் பாற்பட்ட செயலாகும். எனவே மேற்படி வாய்ப்பை இங்கு உள்ள ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கித் தருமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT